என் மலர்
இந்தியா

வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை எவ்வளவு?
- 1998 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை ரூ.15 லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.13 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
- 2014 பொது்தேர்தலில் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.70 லட்சம் ஆகவும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.54 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டது.
பாராளுமன்றம் அல்லது சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் செலவு 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 77 (3)-ன்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை கடக்கக்கூடாது. இந்த வரம்பை கடக்கும் தேர்தல் செலவினம் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123 (6)-ன் படி ஊழல் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவின உச்சவரம்பு வாக்காளர் அடிப்படையில் பெரிய மாநிலம், சிறிய மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என 3 வகைகளாக பிரித்து முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952-ல் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது பெரிய மாநிலங்களுக்கு ரூ.25 ஆயிரமும், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை 1957, 1962, 1967 பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரையிலும் மாற்றம் இன்றி தொடர்ந்தது. 1971-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வேட்பாளரின் தேர்தல் செலவு பெரிய மாநிலங்களுக்கு ரூ.35 ஆயிரம் ஆகவும், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 1977 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான தொகை மாற்றம் இன்றி தொடர்ந்தது. அதே சமயத்தில் சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கான வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை ரூ.12 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.17 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டது.
1980 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.75 ஆயிரம் ஆகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.35 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 1984 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கு ரூ.1½ லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் ஆகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகை மாற்றம் இல்லாமல் 1989, 1991 பொதுத்தேர்தல்களில் தொடர்ந்தது. 1996 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை ரூ.4½ லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகையில் மாற்றம் செய்யப்படவில்லை.
1998 பொதுத்தேர்தலில் பெரிய மாநிலங்களுக்கான வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை ரூ.15 லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.13 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் சிறிய மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்துவதாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த தொகையில் எந்தவித மாற்றமும் இன்றி 1999 பொதுத்தேர்தலில் தொடர்ந்தது. 2004-ம் ஆண்டு வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.25 லட்சம் ஆகவும், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.17 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகை மாற்றம் இன்றி 2009 பொதுத்தேர்தலில் தொடர்ந்தது.
2011-ம் ஆண்டு வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.40 லட்சம் ஆகவும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.27 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 2014 பொது்தேர்தலில் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு தொகை பெரிய மாநிலங்களுக்கு ரூ.70 லட்சம் ஆகவும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.54 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டது. இது 2019 பாராளுமன்ற தேர்தலிலும் மாற்றம் இன்றி தொடர்ந்தது.
இது மீண்டும் திருத்தியமைக்கப்பட்டு பெரிய மாநிலங்களுக்கு ரூ.95 லட்சம் ஆகவும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.75 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோல சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரிய மாநிலங்களில் ரூ.40 லட்சம் வரையிலும், சிறிய மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரூ.28 லட்சமும் செலவு செய்யலாம். அந்தவகையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரையும், சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் ரூ.40 லட்சம் வரையிலும் செலவு செய்யலாம்.






