என் மலர்tooltip icon

    டெல்லி

    • நடப்பு ஐ.பி.எல். சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சீசனில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்யப்பட்டார்.

    ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன் ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள். தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு ரோகித் சர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என நினைக்கிறேன்.

    சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவை சென்னை அணி கேப்டனாக பார்க்கலாம்.

    ஹர்திக் பாண்ட்யா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை மும்பை அணி கேப்டனாக இந்த ஆண்டு நீட்டித்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என தெரிவித்தார்.

    • டெல்லி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
    • பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறியதாவது:

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். எம்.எஸ்.பி.யை உயர்த்தி சட்டப்பூர்வ உத்தரவாதம் தருவதாகச் சொல்லியிருந்தார் - இதுதான் உத்தரவாதமா?

    நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் அவர் தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை.

    இளைஞர்கள் வேலை தேடுகிறார்கள். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் பற்றி அவர் கவலைப்படவில்லை.

    10 ஆண்டுகளில் இந்த மனிதரால் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.

    அவரது தேர்தல் அறிக்கையை நம்புவது சரியல்ல. மக்களுக்கு வழங்குவதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது என தெரிவித்தார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.
    • முத்ரா கடன் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியானது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பா.ஜ.க. கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

    ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.

    நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்.

    பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் வழங்கப்படும்.

    அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.

    பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

    முத்ரா கடன் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.

    திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

    • பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பா.ஜ.க கட்சி இன்று வெளியிட்டது.
    • பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்காக நாடுமுழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பல்வேறு மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியானது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பா.ஜ.க. கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.

    பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்த பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
    • பிரதமர் மோடி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டைதயாராகி உள்ளது.

    அந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது. அதில்,

    "இந்த குரோதி வருட புத்தாண்டில்

    புதுமைகள் தொடரட்டும்

    மாற்றங்கள் மலரட்டும்

    எல்லோர் வாழ்விலும்

    மகிழ்ச்சி நிலைக்கட்டும்"

    என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    வீடு வீடாக தமிழ் புத்தாண்டான  தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக வினியோகிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளார்கள்.

    தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டு வரட்டும்" என்றார்.

    • டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.
    • நமோ செயலி மூலம் 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லி பா.ஜ.க தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜே.பி.நட்டா பேசியதாவது:

    பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளில் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர் சமூக நீதிக்காக போராடியவர் என்பதை அனைவரும் அறிவோம். அவரது வழியைப் பின்பற்றி பா.ஜ.க. எப்போதும் சமூக நீதிக்காகப் போராடுகிறது.

    டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

    நமோ செயலி மூலம் 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • இஸ்ரேல் தொடர்பான கப்பலை ஈரான் சிறைப்பிடித்து வைத்துள்ளது.
    • சிறைப்பிடித்துள்ள சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் படையின் இரண்டு முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியது என ஈரான் குற்றம் சாட்டியது. மேலும், தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் நடுவே உள்ள கடற்பகுதியின் ஓர்முஸ் ஜலசந்தியில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை ஈரான் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கப்பலில் உள்ள 17 இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து ஈரானுடன் பேசி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளார்.

    எம்எஸ்சி ஏரிஸ் என்ற சரக்கு கப்பல் ஈரான் கட்டுப்பாட்டில் இருப்பதை நாங்கள் அறிவோம். அதில் 17 இந்தியர்கள் இருப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் விரைவாக விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக தெஹ்ரான் மற்றும் டெல்லியில் உள்ள தூதரக வழிகளில் ஈரானிய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய உணவு சட்டங்களில் ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை
    • இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்களை தான் குறிக்கிறது

    இந்தியாவில் உள்ள அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும், போர்ன்விட்டா உட்பட அனைத்து பானங்களையும் "ஹெல்த் டிரிங்க்" (Health Drink) என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டுமென ஏப்ரல் 10 ஆம் தேதி மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நடத்திய விசாரணையின் அடிப்படையில், போர்ன்விட்டா போன்ற பானங்கள் 'ஹெல்த் டிரிங்க் அல்ல" என்று கண்டறியப்பட்டது என்று வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் பால், தானியம் மற்றும் மால்ட் சார்ந்த பானங்களை 'ஹெல்த் டிரிங்க்' (Health Drink) அல்லது 'எனர்ஜி டிரிங்க்' (Energy Drink) என லேபிள் ஒட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

    ஏனென்றால், இந்திய உணவு சட்டங்களில் ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை. மேலும் இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் அல்லாத, சுவை கூட்டப்பட்ட தண்ணீர் சார்ந்த பானங்களைக் குறிக்கிறது.

    தவறான சொற்களைப் பயன்படுத்துவது நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும் என்று FSSAI ஈகாமர்ஸ் தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எனவே, அனைத்து ஈகாமர்ஸ் உணவு வணிக தொழில்முனைவோர்கள் ஹெல்த் டிரிங்க்ஸ் / எனெர்ஜி ட்ரிங்க்ஸ் (Health Drinks/Energy Drinks) பிரிவுகளில் இருந்து இது போன்ற பானங்களை நீக்கி இதைச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தியது.

    கடந்த வருடம், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.

    12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உயிரினங்களுக்கான சாத்தியம் பற்றிய ஆய்வு விண்வெளியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
    • கோபிசந்த் தொடகுரா உள்பட 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.

    புதுடெல்லி:

    அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறார். அவரது புளூ ஆரிஜின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியூ ஷெப்பர்டு திட்டத்தின்படி இதுவரை 31 மனிதர்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.

    நியூ ஷெப்பர்டு என்ற பெயரிலான ராக்கெட்டுகள் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்கள் கொண்டு செல்லப்படுவர். இதன்படி, என்.எஸ்-25 என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில், மேசன் ஏஞ்சல், சில்வெய்ன் சிரான், எட் டுவைட், கென் ஹெஸ், கரோல் ஸ்காலெர் மற்றும் கோபி தொட்டகுரா ஆகிய 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர். இவர்களில் கோபி இந்தியாவை சேர்ந்த தொழில் முனைவோர்களில் ஒருவர். விமானியாகவும் இருந்துவருகிறார்.

    1984-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ விங் கமாண்டராக செயல்பட்ட ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். அவருக்கு அடுத்து விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது இந்தியர் என்ற பெருமையை கோபி பெற உள்ளார். இந்தப் பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆந்திர பிரதேசத்தில் பிறந்த கோபி தொடகுரா, எம்பிரி-ரிடில் ஏரோநாடிகல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றவர். ஜெட் விமானங்கள் மட்டுமின்றி சீபிளேன் எனப்படும் நீரிலும், வானிலும் செல்லக்கூடிய விமானங்கள், கிளைடர் வகை விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள், ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றிலும் அவர் விமானியாக செயல்பட்டுள்ளார். சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

    விண்வெளி சுற்றுலா செல்வது குறித்து கோபிசந்த் கூறுகையில், விண்வெளிக்கு அப்பால் உள்ள விஷயங்களை அறிந்துகொள்வதற்காக அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதற்காகவே இந்த பயணம். என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் அது அகராதியில் இல்லை. அது என்னுடன் நான் எடுத்துச் செல்லக்கூடிய விஷயம் என தெரிவித்தார்.

    • கவிதா கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா (வயது 46), கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதன்படி திகார் சிறைக்கு சென்று கவிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணைக்கு கவிதா ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    சி.பி.ஐ.யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, கவிதாவை 15-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    முன்னதாக இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என கவிதா தரப்பில் ஆஜரான வக்கீல் நிதேஷ் ராணா குற்றம் சாட்டினார்.

    மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கவிதா மீது குற்றச்சதி, கணக்குகளை மறைத்தல், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
    • இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

     இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • பிப்ரவரி 28-ந்தேதி தனது டெல்லி மாநில துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியோ மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜாமின் கிடைக்காமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் சிசோடியா, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கு வருகிற 20-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 20-ந்தேதி மணிஷ் சிசோடியாவின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரணைக்கு ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.

    மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ எஃப்.ஐ.ஆர்.யை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரை மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.

    துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ×