என் மலர்
டெல்லி
- பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
- விளம்பரம் வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்தது.
புதுடெல்லி:
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இருவரும் பதிலளிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆசார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, ஆசார்யா பாலகிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதியளிக்கிறது என தெரிவித்தார். அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
அதன்பின், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆசார்யா பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்? நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
- கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள் பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அறிக்கை தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- ஜும் மீட்டிங் மூலம் அனைத்து தலைவர்களும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள்.
புதுடெல்லி:
இந்தியா கூட்டணியில் உள்ள 27 கட்சிகளும் இணைந்து பொதுவான தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்றும் தி.மு.க. அறிக்கையுடன் ஒத்துபோவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
பா.ஜனதா இந்தியா முழுவதுக்குமான ஒரே தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. அதே போல் இந்தியா கூட்டணியும் அனைத்து கூட்டணி கட்சிகளும் இணைந்து பொதுவான தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றன.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், சமூக நலன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தயாரிக்கப்படுகிறது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல கட்சிகள் பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அறிக்கை தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜும் மீட்டிங் மூலம் அனைத்து தலைவர்களும் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஏப்ரல் 20-ந்தேதி நடைபெறும்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர்.
இதையடுத்து சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
டெல்லி சிறப்பு கோர்ட்டில் கடந்த 2-ந்தேதி ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் 5 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 5 பேரின் நீதிமன்ற காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.
மேலும் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையும் ஏப்ரல் 20-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4 ஆயிரத்து 650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கடந்த 75 ஆண்டுகால மக்களவை தேர்தல் வரலாற்றில், இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல்முறை ஆகும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகள், அன்றைய தினம் வாக்குப்பதிவை சந்திக்கின்றன.
கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
அத்துடன், வாக்காளர்களுக்கு நகை, பணம், இலவச பொருட்கள், மதுபானம் உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.
இதுவரை பிடிபட்ட பொருட்கள் பற்றிய புள்ளி விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்கட்ட தேர்தல் 19-ந் தேதிதான் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4 ஆயிரத்து 650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ரூ.3 ஆயிரத்து 475 கோடி மதிப்புள்ள பொருட்கள்தான் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது, ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அதைவிட அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிடிபட்டவற்றில், போதைப்பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் மட்டும் ரூ.2 ஆயிரத்து 69 கோடி மதிப்புடையவை. அவை மொத்த மதிப்பில் 45 சதவீதம் ஆகும். அவற்றை பிடிக்க தேர்தல் கமிஷன் சிறப்பு கவனம் செலுத்தியது.
ரொக்கப்பணம் மட்டும் ரூ.395 கோடி பிடிபட்டுள்ளது. மதுபானங்களின் மதிப்பு ரூ.489 கோடி ஆகும்.
மாநிலவாரியாக பார்த்தால், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் ரூ.778 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பிடிபட்டுள்ளன.
தேர்தல் கமிஷன் கண்காணிப்பில், கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து நாள்தோறும் ரூ.100 கோடி மதிப்புடைய பொருட்கள் பிடிபட்டு வருகின்றன.
இதற்கு முறையான திட்டமிடல், அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு, தொழில்நுட்ப உதவி ஆகியவைதான் காரணங்கள் ஆகும்.
தேர்தல் பிரசாரத்திலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதிலும் அரசியல்வாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 106 அரசு ஊழியர்கள் மீதும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகால மக்களவை தேர்தல் வரலாற்றில், இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல்முறை ஆகும். லஞ்ச வினியோகம் இல்லாமல், நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உறுதிப்பாட்டை இது உணர்த்துகிறது.
ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்தப்படுவது புதிதல்ல. அதனால், விமான தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வான்மார்க்கமாக பணம், இலவச பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்க இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார்
- கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.
மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.
கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலின் மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, தற்போது இந்த கைது காரணமாக கேஜ்ரிவாலால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. ஆகவே விரைவாக இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக வரும் 19-ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இவ்வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது.
- இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியான சந்திரசேகரராவின் மகளான கவிதா கடந்த மாதம் 15-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவரது 3 நாள் சி.பி.ஐ. காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து கவிதாவை இன்று கோர்ட்டில் சி.பி.ஐ. ஆஜர்படுத்தியது. அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
அப்போது கோர்ட்டு வளாகத்தில் கவிதா கூறும்போது, "இது சி.பி.ஐ. கஸ்டடி இல்லை. பா.ஜ.க. கஸ்டடி. பா.ஜனதா வெளியில் என்று போகிறதோ? அதை சி.பி.ஐ. உள்ளே கேட்கிறது. 2 ஆண்டுகளாக மீண்டும், மீண்டும் கேட்கிறது புதிது இல்லை" என்றார்.
- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.
- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மின்னஞ்சல் அனுப்புமாறு கெஜ்ரிவால் வக்கீல் அபிஷேக் சிங்வியுடன் கூறினார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கினைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.
மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.
கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.
இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மின்னஞ்சல் அனுப்புமாறு கெஜ்ரிவால் வக்கீல் அபிஷேக் சிங்வியுடன் கூறினார்.
இந்த நிலையில் கெஜ்ரிவாலின் அப்பீல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
- கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.
- 2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
டெல்லி மாநிலத்தில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்குகிறது. மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ், நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் மூன்று தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் கணையா குமாருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா வேட்பாளர் போஜ்புரி பாடகர் மனோஜ் திவாரியை எதிர்த்து களம் காண்கிறார்.
கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் பல்கலைக்கழக வளாகததிற்கு வெளியே இருந்துதான் கோஷமிட்டது தெரியவந்ததால் விடுதலை செய்யப்பட்டார்.
2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெகுசரை தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பா.ஜனதா வேட்பாளர் கிரிராஜ் சிங்கிடம் தோல்வியடைந்தார்.
கணையா குமார் காங்கிரஸ் கட்சியில் துசிய மாணவர்கள் அமைப்பின் மாணவர்கள் அணி பொறுப்பாளராக உள்ளார்.
காந்திசவுக் தொகுதியில் இருந்து 1984, 1989 மற்றும் 1996-ல் வெற்றி பெற்ற மூத்த தலைவர் ஜே.பி. அகர்வால் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
வடமேற்கு டெல்லி (எஸ்சி) தொகுதியில் உதித் ராஜ் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் 2014-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2019 தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
டெல்லியில அடுத்த மாதம் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- ஜாபர்சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா தயாரிப்பு, ஓட்டல் தொழிலில் முதலீடு செய்தது தெரியவந்தது.
- குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர்.
இதையடுத்து சென்னையை சேர்ந்த ஜாபர்சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மேலும் சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த 5 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து டெல்லி சிறப்பு கோர்ட்டில் கடந்த 2-ந் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்றக்காவல் 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரித்தது நினைவுகூரத்தக்கது.
ஜாபர்சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா தயாரிப்பு, ஓட்டல் தொழிலில் முதலீடு செய்தது தெரியவந்தது.
அவரது படத்தை பிரபல இயக்குனர் அமீர் இயக்கியுள்ளார். இதனையடுத்து அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். அவரை டெல்லி வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.
இதற்கிடையே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது.
- வரும் ஆண்டுகளில் ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்று மிகவும் புனிதமான நாள். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னல் அம்பேத்கருக்கு இன்று பிறந்தநாள். இந்த சிறப்பான நாளில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் வகையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படடுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு வெற்றி கிடைத்துள்ளது.
வரும் ஆண்டுகளில் ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தமானில் சுற்றுலா மேம்படுத்தப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படும்.
தற்போது உலகம் முழுவதும் போர் பதற்றம் சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டியது அவசியமாகும். மத்தியில் வலுவான அரசு அமைந்தால்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறப்பாக வாழ முடியும்.
அது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். அதற்கு மக்கள் மத்தியில் வலுவான அரசை மீண்டும் உருவாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- வன்முறையில் இருந்து பின்வாங்கவும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவும் அழைப்பு விடுக்கிறோம்.
- பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பேணப்படுவது இன்றியமையாதது.
ஈரான்-இஸ்ரேல் இடையேயான மோதல் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறும்போது, அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரிப்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவலை கொண்டுள்ளோம். உடனடியாக தீவிரத்தை குறைக்கவும், கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், வன்முறையில் இருந்து பின்வாங்கவும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவும் அழைப்பு விடுக்கிறோம்.
பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பேணப்படுவது இன்றியமையாதது. அங்கு நடந்து வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன என்று தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஸ்கோயலும் பொறுப்பேற்றனர். மேலும் 24 உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம் பெற்றனர். 27 பேர் கொண்ட அந்த குழு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயாரித்தது.
நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சுமார் 4 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை பரிந்துரையாக அளித்து இருந்தனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.
முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளி யிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

* மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
* 2025-ம் ஆண்டு பழங்குடியின மக்களின் பெருமைமிகு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.
* 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.
* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
* வேலை வாய்ப்பு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
* வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
* ஏழைகளுக்கு ஊட்டச் சத்து கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தப்படும்.
* ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் சிலிண்டர் கொடுக்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்படும்.
* கிராம மக்களின் நலனுக்காக குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்படும்.
* பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* கிராமத்து பெண்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஒரு ரூபாயில் ஒரு நாப்கின் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
* திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.
* பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கொள்கை திட்டம் வகுக்கப்படும்.
* உலகின் சக்தி மிக்க பொருளாதார நாடுகளில் 3-வது நாடு என்ற மிகப்பெரிய பொருளாதார அந்தஸ்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* பெண்களுக்கு கருப்பை புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம் வகுக்கப்படும்.
* சாலையோரம் வசிப்பவர்களுக்கு மிகவும் குறைந்த வாடகையில் தங்குவதற்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கும்.
* மக்கள் மருந்தகங்களில் மருந்து விலை 80 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.
* புல்லட் ரெயில் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்படும்.
* நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
* ஸ்டாட்அப் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தனி திட்டம் வகுக்கப்படும்.
* தமிழுக்கு சேவை செய்யும் வகையில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.
இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






