என் மலர்
இந்தியா

பழிவாங்கும் மத்திய அரசு: தலைமை தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்
- எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
- தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.
அரசியல் சட்டம் 324-வது பிரிவின்படி அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களைப் போக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆளும்கட்சியினர் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என தெரிவித்துள்ளது.






