என் மலர்
டெல்லி
- நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
- ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது.
புதுடெல்லி:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த 'நீட்' தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகள் நடைபெற்றது தெரிந்தது.
இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது. அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 13 பேர் மீது தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உணவகத்தில் மோமோஸ் தயாரிக்க மாவு பிசையும் இயந்திரத்தை சிறுமி இயக்கியுள்ளார்
- கடந்த 3 வருடங்களாக சிறுமி அந்த உணவகத்தில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.
டெல்லியில் மாவு பிசையும் இயந்திரத்தில் மாட்டி 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் பேகம்பூரில் உள்ள ஹனுமான் சவுக் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
உணவகத்தில் மோமோஸ் மற்றும் ஸ்ப்ரிங் ரோல்ஸ் தயாரிப்பதற்காக சிறிய அளவிலான மாவு பிசையும் இயந்திரத்தை இயக்கிய சிறுமியின் கை உள்ளே மாட்டிக்கொள்ளவே அவர் தலையோடு இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பின்னர் அறிவித்தனர். கடந்த 3 வருடங்களாக சிறுமி அந்த உணவகத்தில் சமையல் வேலை உதவியாளராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியை வேலைக்கு வைத்த ராஜேஷ் குமார் என்பவர் மீது போலீசார் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கடந்த 6 ஆண்டில் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
- விபத்துகள், மருத்துவ காரணங்கள், தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் இந்தியர்கள் குறித்த கேள்வி இன்று எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகள் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டில் 6,75,541 மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 13,35,878 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
கனடாவில் 4,27,000 பேரும், அமெரிக்காவில் 3,37,630 பேரும், இங்கிலாந்தில் 1,85,000 பேரும், ஆஸ்திரேலியாவில் 1,22,202 பேரும் படித்து வருகின்றனர்.
இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் எண்ணிக்கை வரும் காலங்களில் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 172, அமெரிக்காவில் 108, இங்கிலாந்தில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37, ஜெர்மனியில் 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 3 ஆண்டில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- நாட்டில் கல்வியை பாதுகாக்க வேண்டும். முகலாயர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
- முஸ்லிம், தலித், ஏழை, மாணவ, மாணவியருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி அரசு ஆட்சி செய்கிறது.
நாடாளுமன்ற மக்களவையில் கல்வி துறைக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பீகார் மாநில கிஷன்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் பேசும்போது கூறியதாவது:-
நாட்டில் கல்வியை பாதுகாக்க வேண்டும். முகலாயர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. முகலாயர்கள் இங்கே 300 வருடங்களாக இருந்தனர். வெறும் பெயரை மட்டுமே நீக்குவதால் அவர்கள் நீக்கப்பட்டதாகிவிடாது.
முஸ்லிம்கள் மற்றவர்களை விட புத்திசாலிகள். மற்றவர்களை போல் நமக்கு அவர்கள் பங்களிக்க முடியும். நீங்கள் பாகுபாடு பார்க்கக்கூடாது என வேண்டுகோள் வைக்கிறேன்.
முஸ்லிம், தலித், ஏழை, மாணவ, மாணவியருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி அரசு ஆட்சி செய்கிறது. நாட்டில் முஸ்லிம்கள் இல்லை என்றால், பாஜக கணக்கை (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்) தொடங்கியிருக்காது. மைனாரிட்டிகளுக்கான திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும். உதவித்தொகை திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.
பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஜிடிபி-யில் 3.36 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது 2.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முகமது ஜாவத் தெரிவித்தார்.
- ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
- மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது.
இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், டெல்லி கேபிடல் அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்த கருத்தால் ஷாருக்கானுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அப்பது ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று வாடியா தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஷாருக்கை தெரியும்.
அவருடைய குடும்பத்தை நான் அறிவேன். அவர் மீதும் குடும்பத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
நாங்கள் வெகுதூரம் பின்னோக்கிச் செல்கிறோம், இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.
கூட்டத்தில் பேசியது குறித்து நான் அதைச் சொல்லப் போவதில்லை. எல்லோரும் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். நான் சொன்னது போல், நீங்கள் அனைத்து பங்குதாரர்களையும் பார்க்க வேண்டும். இது ஒரு நல்ல அமர்வு.
ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஊடகங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதுவே எங்கள் நோக்கம். அதனால்தான் நாங்கள் இங்கே இருந்தோம்.
இம்பாக்ட் பிளேயர், கேப்டு, அன் கேப்ட் பிளேயர் குறித்து எல்லாம் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேவைப்படும் போதெல்லாம் ரசிகர்கள் என்னைப் பாராட்டுவார்கள்.
- எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார் டோனி.
புதுடெல்லி:
இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது கேப்டனாக செயல்பட்டவர் எம்.எஸ்.டோனி. ஐ.பி.எல். தொடரிலும் சி.எஸ்.கே. அணியை திறம்பட வழிநடத்தி வந்தவர் டோனி. எனவே ரசிகர்கள் இவரை செல்லமாக தல டோனி என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே. அணியின் கேப்டனுமான எம்.எஸ்.டோனியிடம், ரசிகர்கள் தல என அன்பாக அழைப்பதற்கான காரணம் குறித்து தனியார் நிறுவனம் கேள்வி எழுப்பியது. அப்போது அவர் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால் எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
என் ரசிகர்களை நான் பாதுகாக்க வேண்டிய போதெல்லாம் அதை செய்கிறேன். தேவைப்படும் போதெல்லாம் ரசிகர்கள் என்னைப் பாராட்டுவார்கள். எனவே நான் யூகிக்கும் எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே இதுவும் இதன் ஒரு பகுதியாகும்.
எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மிகவும் சுறுசுறுப்பான சமூக ஊடக பயனராக இல்லாவிட்டாலும், நான் இடுகையிடுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள், அவர்கள் அதை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Dhoni talking about - Thala for a Reason ?❤️ pic.twitter.com/7EWisDtXH2
— MAHIYANK™ (@Mahiyank_78) August 1, 2024
- குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
- நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
மக்களவையில் இன்று நாடாளுமன்ற திமுக குழு தலைவரும் எம்.பியுமான கனிமொழி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
கேந்திரிய வித்யாலயாக்கள் உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் மொழி கொள்கைகளை எப்படி நடந்து கொள்வீர்கள் என்று உங்களுக்கும் இங்கு இருக்கும் சிலருக்கு விளக்குவதார்காக நான் சொல்கிறேன்.
அங்கே இருக்கக் கூடிய மாநில மொழியே கற்றுத்தருவோம் என்று சொல்கிறீர்கள். தமிழ் நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயாக்கள் இருக்கிறது. ஆனால், அங்கு நீங்கள் எப்படி தமிழ் சொல்லி தருவீர்கள்.
அங்கே இருக்க கூடிய மாணவர்களே 20 பேர் ஒரு வகுப்பில் எல்லோரும் சேர்ந்து தலைமை ஆசிரியர்களிடம் வந்து கோரிக்கை வைக்க வேண்டுமாம்.
அப்படி கோரிக்கை வைத்தால்தான் அதற்காக ஆசிரியர் நியமிக்கப்படும் என்றும் ஆசிரியர் கிடைத்தால் தான் அவர்களை நியமிக்கப்பட்டு அங்கே தமிழ் சொல்லித் தரப்படும் என்று சொல்கிறார்கள். இது தமிழ்நாட்டிலேயே.
நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
45 பள்ளிகளிலே 15 பள்ளிகளில்தான் தமிழ் சொல்லி தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது.
உங்கள நம்பி மொழி கொள்கைகளிலே நீங்கள் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்று எப்படி நினைக்க முடியும்.
ரெயில் நிலையங்களில் கூட டிக்கெட் வாங்க முடியவில்லை. அங்கையும் ஹிந்தி திணிக்கப்பட்டு இருக்கிறது.
அப்படிபட்ட அரசாங்கம் எங்கள் மீது ஹிந்தியை மட்டும் இல்லாமல் சமஸ்கிருதத்தையும் திணிக்கின்றனர்.
அதுமட்டும் இல்லை எங்களுடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேல் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மதியம் உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது தமிழகம் என்ற பெருமையே நாங்கள் தலை நிமிர்ந்து சொல்லிக் கொள்வோம்.
ஆனால், பி.எம்.போஷன் என்ற திட்டம் நாடு முழுவதும் இருக்கக் கூடிய திட்டத்திற்கு இந்த அரசாங்கம் அந்த திட்டத்திற்காக மதிப்பீடு 11ஆயிரத்து 600 கோடி. அதில் குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய திட்டத்திலே நீங்கள் ஒதுக்கீடு செய்திருப்பது 10 ஆயிரம் கோடி.
குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய இந்த பி.எம்.போஷன் திட்டத்திற்கு கூட போதிய நிதியை ஒதுக்க முடியாத நீங்கள், எங்களுக்கு கல்வியை பற்றி சொல்லி தருகிறீர்கள். இதற்கு நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளவேண்டுமா ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கார்த்திகேயன் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியது.
- இதனால் அந்தப் படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார்.
புதுடெல்லி:
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் 2,000-த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து வந்துது.
அவர்களைக் கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பினர். அப்போதும் விடாமல் இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் அவர்களை துரத்திச் சென்றனர்.
இதில் கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியது. இதனால் கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மாயமான ராமச்சந்திரன் என்ற மற்றொரு மீனவரி மீட்கும் பணி நடந்துவருகிறது.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலால் தமிழக மீனவர் உயிரிழந்ததற்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து சம்மன் அளித்த வெளியுறவுத்துறை, இலங்கை கடற்படையினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
- அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் 3% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
- உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை.
அருந்ததியினருக்குதமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.
பட்டியலினத்தவருக்குள் மிகவும் பின்தங்கிய அருந்ததியினருக்குஉள்ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் அப்போது முன்மொழிந்தார். இதனையடுத்து அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.
அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 2020 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஆனாலும், ஏற்கனவே உள் ஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், ஹரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா மாநில அரசுகளின் உள் இடஒதுக்கீடு சட்டங்கள் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 7 நீதிபதிகளில் பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். மற்ற 6 நீதிபதிகளும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள்ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு அனுமதி அளித்துள்ளது.
- புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 'சொட்டு நீர் பாசன திட்டம்' நடக்கிறது.
- 1200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட பாராளுமன்றம் 120 ரூபாய் பக்கெட்டை நம்பி உள்ளது.
டெல்லியில் கனமழை பெய்து வருவதால், பாராளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. பாராளுமன்றத்திற்குள் தண்ணீர் ஒழுகும் வீடியோக்களை காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் தங்களது எஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் தண்ணீர் ஒழுகுவது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
அப்போது, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நேரத்தை பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாராளுமன்றத்திற்கு வெளியே வினாத்தாள் கசிவு, பாராளுமன்றத்திற்கு உள்ளே மழைநீர் கசிவு. புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி ஓராண்டு முடிவடைவதற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மழைநீர் கசிவது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பழைய பாராளுமன்ற கட்டிடம் இதை விட சிறப்பாக இருந்தது. பலகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 'சொட்டு நீர் பாசன திட்டம்' நடக்கும் வரை நாம் ஏன் பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்ல கூடாது.
பாஜக ஆட்சியில் கட்டப்பட்ட ஒவ்வொரு புதிய கட்டிடத்திலும் நீர் கசிவு என்பது அவர்களின் அற்புதமான வடிவமைப்பின் ஒரு பகுதியா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
1200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் 120 ரூபாய் மதிப்பிலான பக்கெட்டை நம்பி உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியும் இந்த சம்பவத்தை கிண்டலடித்துள்ளது.
- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
- ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை பற்றி ராகுல்காந்தி பேசுவது தவறான முன்னுதாரணமாகும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பாஜக-வின் சக்கரவியூகத்தை உடைத்து எறியும் காலம் விரைவில் வரும் என்றும் கூறினார்.
இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், ராகுல்காந்தி பேச்சு குறித்து பாஜக எம்.பி.யும் இந்தி நடிகையுமான கங்கனா ரணாவத் கூறுகையில்,
ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை பற்றி ராகுல்காந்தி பேசுவது தவறான முன்னுதாரணமாகும். ராகுல் காந்தி இப்படி பேசுவதை பார்க்கும்போது மது அல்லது போதை பொருளை பயன்படுத்தியவாறு பாராளுமன்றத்துக்குள் வருகிறாரா? என்று அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அவரது கருத்து பலத்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
- நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
- நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி ஆதரவு
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் "மூத்த குடிமக்களுக்குச் சிரமம்" ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18% வரி என்பது, சமூகரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
எதிர்பாராத சூழலில், மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், கட்கரி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழில் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
பட்ஜெட் விவாதத்தின்போது மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று அவர் பேசிய வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.
"மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் குமார் ராய் தெரிவித்தார்.
நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது.






