என் மலர்tooltip icon

    டெல்லி

    • பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • நபி கரீம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று டெல்லியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. டெல்லி-குருகிராம் விரைவுச்சாலையில் டெல்லி செல்லும் பிரதான பாதை மற்றும் சர்வீஸ் லேன் ஆகியவற்றில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழையால் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானம் திருப்பி விடப்பட்டது. நபி கரீம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் டெல்லிக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மொராதா பாத்தில் கனமழை, காற்றின் காரணமாக கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அழிந்தன. உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மலையில் இருந்து கற்கள், மணல் விழுந்தது. இதனால் அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது.

    • ஈரான்- இஸ்ரேல் இடையிலான பதற்றம் புதிது அல்ல.
    • இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி கலந்து கொண்டார். இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் குறித்து அவரிடம் கேள்வி ஏழுப்பப்பட்டது.

    இது தொடர்பாக இராஜ் இலாஹி கூறியதாவது:-

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான பதற்றம் புதிது அல்ல. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் இந்த பதற்றம் ஈரானில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு புதியதாக ஒன்றும் இல்லை. இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் இந்திய நண்பர்களுக்கு உறுதி அளிக்கிறேன். மேலும், ஈரானுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

    ஈரான் எவ்வளவு பாதுகாப்பானது என்று அவர்களாகவே பார்க்க முடியும். ஈரான் அழகான மற்றும் கவரக்கூடியதாகும். டெல்லி- தெஹ்ரான் இடையே இரண்டு நேரடி விமான சேவை உள்ளது. மும்பை- தெஹ்ரான் இடையே விமான சேவை உள்ளது. இன்னும் விமான சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார்.

    • கெஜ்ரிவாலை கைது செய்யத்தேவையில்லை என்று 22 மாதங்களாக சி.பி.ஐ. நினைத்திருந்தது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதால், டெல்லியில் நிர்வாக நெருக்கடி இருக்காது என்று கூறினார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தது.

    இருப்பினும், அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது. அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    அந்த உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். அம்மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், கடந்த 5-ந்தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தது. ரூ.10 லட்சம் ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான 2 பேரின் உத்தரவாதத்துடன் கெஜ்ரிவாலை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

    நீதிபதி சூரியகாந்த் தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகிவிடும். புதிய சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, விசாரணை உரிய நேரத்தில் முடிவடையாது. மனுதாரர், ஜாமீன் பெற தகுதியானவர்.

    கெஜ்ரிவாலை கைது செய்ததற்கான காரணங்களை சி.பி.ஐ. தனது மனுவில் தெரிவித்துள்ளது. அவற்றில் விதிமீறல்கள் இல்லை. எனவே, கைதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை.

    கெஜ்ரிவால் சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் தேவையற்றது. இருப்பினும், வழக்கின் தகுதிநிலை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது. ஒவ்வொரு வாய்தாவின்போதும் அவர் ஆஜராக வேண்டும். அமலாக்கத்துறை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள், இவ்வழக்குக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    அமலாக்கத்துறை ஜாமீன் அளித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஜாமீன் காலத்தில் தனது அலுவலகத்துக்கோ, தலைமை செயலகத்துக்கோ செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. கவர்னரின் ஒப்புதல் பெற தேவையில்லாதபட்சத்தில், கோப்புகளில் அவர் கையெழுத்திடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. சாட்சிகளுடன் பேசக்கூடாது என்றும் கூறியது.

    மேற்கண்ட நிபந்தனைகள் இப்போதும் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    நீதிபதி உஜ்ஜால் புயன், தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அதில், சி.பி.ஐ.யை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    சி.பி.ஐ. ஒரு முதன்மையான விசாரணை அமைப்பு. சி.பி.ஐ., சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருப்பது மட்டுமின்றி, அப்படி இருப்பது கண்முன்பு தெரிய வேண்டும். விசாரணை நியாயமாக நடத்தப்படவில்லை என்றோ, பாரபட்சமான முறையில் கைது செய்யப்பட்டதாகவோ கண்ணோட்டம் உருவாவதை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

    சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஜனநாயகத்தில், கண்ணோட்டம் மிகவும் முக்கியமானது. சீசரின் மனைவி போல், ஒரு விசாரணை அமைப்பு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

    சிறிது காலத்துக்கு முன்பு, சி.பி.ஐ.யை கூண்டுக்கிளியுடன் ஒப்பிட்டு, இதே கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. கூண்டுக்கிளியாக இருக்கிறது என்ற எண்ணத்தை சி.பி.ஐ. அகற்றுவது முக்கியம். கூண்டில் அடைக்கப்படாத கிளியாக இருப்பதாக உணர்த்த வேண்டும்.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கடுமையான சட்டப்பிரிவுகளில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், அதே குற்றத்துக்காக சி.பி.ஐ. வழக்கில் காவலில் வைத்திருப்பது தேவையற்றதாகி விட்டது. அது நீதியை கேலி செய்யும் செயல்.

    கெஜ்ரிவாலை கைது செய்யத்தேவையில்லை என்று 22 மாதங்களாக சி.பி.ஐ. நினைத்திருந்தது. ஆனால், அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கப்போகிறது என்றவுடன் சி.பி.ஐ. அவசரமாக கைது செய்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    கெஜ்ரிவால் சரிவர பதில் அளிக்கவில்லை என்ற காரணத்தை காட்டி, அவரை கைது செய்ததை சி.பி.ஐ. நியாயப்படுத்த முடியாது.

    அதுபோல், அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீது எனக்கு கடுமையான ஆட்சேபனைகள் உள்ளன. ஆனால், நீதித்துறை ஒழுக்கம் காரணமாக, அந்த நிபந்தனைகள் பற்றி நான் கருத்து கூற மாட்டேன்.

    இவ்வாறு நீதிபதி உஜ்ஜால் புயன் கூறியுள்ளார்.

    இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் இருக்கும் போது எந்த கோப்புகளிலும் கையெழுத்திட முடியாது என்று தகவல் பரவியது.

    இந்நிலையில், எந்த கோப்புகளிலும் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்திட முடியாது என்று பரவும் தகவல் தவறானது என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது;-

    பிஎம்எல்ஏ வழக்கில் ஏற்கனவே ஜூலை 12-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, இன்றைய (நேற்று) உத்தரவில் கமா அல்லது முற்றுப்புள்ளியோ சேர்க்கவில்லை.

    கெஜ்ரிவால் கையெழுத்திட வேண்டிய ஒரே கோப்புகள் லெப்டினன்ட் கவர்னிடம் செல்ல வேண்டும். லெப்டினன்ட் கவர்னரிடம் செல்ல வேண்டிய அனைத்து கோப்புகளிலும் கெஜ்ரிவால் கையெழுத்திடலாம் என்று ஜூலை 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மற்றவற்றில் அவரது அமைச்சர்கள் கையெழுத்திடலாம். அவரால் செயல்பட முடியாது என்று கூறுவது அரசியல். தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இதுபோன்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யக் கூடாது என்றுதான் நான் கூறுவேன்.

    அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதால், டெல்லியில் நிர்வாக நெருக்கடி இருக்காது என்று கூறினார்.

    • கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த அரிசி ஏற்றுமதி நடந்து உள்ளது.
    • பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    உலக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த அரிசி ஏற்றுமதி நடந்து உள்ளது.

    அதேநேரம் பாசுமதி ஏற்றுமதிக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நிர்ணயித்தது. அதன்படி ஒரு டன் பாசுமதி அரிசிக்கு 1200 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டது.

    இதற்கு ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாயிகள் கவலை வெளியிட்டதால் அக்டோபர் மாதம் இது 950 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.80,000) என குறைக்கப்பட்டது.

    இந்த விலைக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே ஏற்றுமதி பதிவு மற்றும் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு குறைவாக பாசுமதியை ஏற்றுமதி செய்ய முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    வெங்காயம் ஏற்றுமதிக்கும் டன் ஒன்றுக்கு 550 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.46,000) என குறைந்தபட்ச ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த விலைக்கு குறைவாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

    பாசுமதி அரிசி மற்றும் வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்குமாறு விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு நேற்று நீக்கியது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும் என மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்.

    இதைப்போல விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதைப்போல வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

    அரியானா மற்றும் மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக தீர்ப்பில் அறிவித்தார்.
    • அரியானா சட்டசபை தேர்தலையொட்டி கெஜ்ரிவால், வெளியே வந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.

    சுப்ரீம் கோர்ட்டு வலைதளத்தில் செப்டம்பர் 13-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சூரியகாந்த் தீர்ப்பை வெளியிட்டார்.

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக அவர் தீர்ப்பில் அறிவித்தார்.

    அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    ஜாமின் உத்தரவை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் வரவேற்றனர்.

    அரியானா சட்டசபை தேர்தலையொட்டி கெஜ்ரிவால், வெளியே வந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி.
    • நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு.

    அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்," ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது.

    நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு" என்றார்.

    • திடீரென அங்கு தோன்றிய கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் நாதிரை நோக்கி சுட்டுள்ளான்.
    • சுடுவதற்கு முன்னர் அந்த ஏரியாவில் 1 மணி நேரமாக அவர்கள் நோட்டம் விட்டுள்ளதாகத் தெரிகிறது.

    டெல்லியில் ஜிம் ஓனர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைத்துள்ள SHARX ஜிம் வாசலில் வைத்து நேற்று இரவு அந்த ஜிம்மின் உரிமையாளரான ஆபிகானிய வம்சாவளியை சேர்ந்த நாதிர் ஷா [35 வயது] துப்பாக்கி ஏந்திய நபரால் 11 முறை சுடப்பட்டார். அதில் 8 குண்டுகள் அவரது உடலைத் துளைத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக கிடைத்த சிசிடிவி காட்சியில், நாதிர் ஷா இரவு வேலையில் தனது கருப்பு suv காரின் அருகே நின்றுகொண்டு மற்றொரு நபருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அங்கு தோன்றிய கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் நாதிரை நோக்கி சுட்டுள்ளான். 11 முறை சுட்டதும் தன்னுடன் வந்த மற்றொரு நபருடன் பைக்கில் ஏறி தப்பினான். சுடுவதற்கு முன்னர் அந்த ஏரியாவில் 1 மணி நேரமாக அவர்கள் நோட்டம் விட்டுள்ளதாகத் தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட நாதிர் ஷா குற்றப் பின்னணி கொண்ட நபர் ஆவர். கொலை நடந்த பகுதியில் சமீப காலமாக கேங் வார் நடந்து வருவதால் போலீசார் விசாரணை நடத்த திணறி வருகிறனர். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிசினாய் கேங் உடன் தொடர்புடைய ரோகித் கோத்ரா என்ற கேங்ஸ்டர் சோசியல் மீடியாவில் பொறுப்பேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
    • இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    கச்சா எண்ணெய்க்காக ரஷ்யா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றை இந்தியா நம்பி உள்ளது. 40 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்துதான் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது.

    கடந்த ஜூலை மாதம் மட்டும் 46 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையைவிட மிக குறைவு.

    ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கின்றன.

    இப்போது கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை.

    ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 2008-ம் ஆண்டு 147 அமெரிக்க டாலராக இருந்த நேரத்தில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55 ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35 ஆக இருந்தது.

    இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 68.56 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் உள்ளது.


    கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. மார்ச் 28-ந்தேதி கச்சா எண்ணெய் விலை 83.69 டாலராக இருந்தது.

    இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து பங்கஜ் ஜெயின் கூறியதாவது:-

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    கச்சா எண்ணெய் விலை சரிவு நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
    • மதுபான கொள்கை குற்றச்சாட்டில் புதிய ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து அவரை சிறைக்குள்ளேயே கைது செய்து இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்தார்.

    ஆனால் அவர் மதுபான கொள்கையை மாற்றி அமல்படுத்தியதில் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    குறிப்பாக மதுபான கொள்கை மாற்றம் மூலம் ஆம்ஆத்மி கட்சிக்கு முறைகேடாக ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்து இருப்பதாக இ-மெயில் தகவல் பரிமாற்றத்தை ஆதாரமாக கொண்டு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா முதலில் கைது செய்யப்பட்டார்.

    அதன்பிறகு இந்த முறை கேடுகளுக்கு டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. கூறியது. இதையடுத்து பண முறைகேடு தடுப்பு சட்ட வழக்கில் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று அவருக்கு இடைக்கால ஜாமினை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. அதன் அடிப்படையில் அவர் விடுதலையாகி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர் தாமாக முன்சென்று திகார் ஜெயிலுக்கு சென்றார். இதையடுத்து அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்தது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி சி.பி.ஐ. தரப்பில் அவர் கைது செய்யப்பட்டார். மதுபான கொள்கை குற்றச்சாட்டில் புதிய ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து அவரை சிறைக்குள்ளேயே கைது செய்து இருந்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார். தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்தும் மற்றொரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வந்தது.

    கடந்த மாதம் இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து முடிந்தது. கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படுவாரா? என்பது செப்டம்பர் 5-ந்தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அன்று அந்த தீர்ப்பு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு வலைதளத்தில் செப்டம்பர் 13-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சூரியகாந்த் தீர்ப்பை வெளியிட்டார்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக அவர் தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

    கெஜ்ரிவாலை விடுதலை செய்த போதிலும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளது. நீதிபதி தீர்ப்பு விவரம் வருமாறு:-

    கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டபோது குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன.

    சிறையில் இருந்து வெளியில் சென்ற பிறகு இது தொடர்பாக கெஜ்ரிவால் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது. அவர் பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.

    அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது எத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோ அந்த நிபந்தனைகள் அனைத்தும் இந்த மனு மீதான தீர்ப்புக்கும் பொருந்தும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து முதல்-மந்திரி கெஜ்ரிவால் 5 மாதங்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியில் வர உள்ளார்.

    • கல் எறிதல் சம்பவம், ஐ.எஸ்.ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகள், கடையடிப்பு இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாகும்.
    • தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின், முதன்முறையாக அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மதசார்பற்ற ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும் என பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியதாவது:-

    இந்த சட்டமன்றத் தேர்தலில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதியளிக்கும் அல்லது மரணம் மற்றும் அழிவை உறுதியளிக்கும் ஆகியவற்றில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தபோது சொந்த அரசியலமைப்பு கொண்டிருந்தது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு தற்போது ஒருங்கிணைந்த அரசியலமைப்பு உள்ளது.

    மதசார்பற்றதாக மாறிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். ஒரே கொடியுடனும், கல் எறிதல் சம்பவம், ஐ.எஸ்.ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகள், கடையடிப்பு இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாகும். தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான். யாசின் மாலிக், ஆசியா அந்த்ராபி அல்லது ஷபீர் ஷாவை சிறையில் இருந்து விடுவிக்கும் நோக்கம் குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.

    ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் தனிப்பட்ட நபர்களை சந்தித்தார். அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என கருதுபவர்கள். இது இந்திய பாராளுமன்ற தீர்மானத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தை மட்டுமு் இழிவுப்படுத்த வில்லை. இந்த தீர்மானத்தை நிறைவேற்றும்போது பாராளுமன்றத்தில் இருந்த அவர்களுடைய முன்னோர்களையும் இழிவுப்படுத்தியுள்ளார்.

    இவ்வாறு சுதான்சு திரிவேதி தெரிவித்தார்.

    • அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் சிபிஐ கைது செய்தது.
    • கடந்த ஆறு மாதம் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கொடுத்தது. பின்னர் கடந்த ஜூன் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது.

    சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையாகும் நிலையில் திடீரென சி.பி.ஐ. அவரை கைது செய்தது. இந்த சூழலில் தனது கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் அவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி சூர்யா கந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விசாரணை கடந்த 5-ந்தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உச்சநீதிமன்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தீர்ப்பில் ஜாமீன் வழங்கப்பட்டால் சுமார் ஆறு மாதங்கள் கழித்து சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வருவார்.

    • அதானி நிறுவனம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச்சந்தையில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் சந்தையை தவறாகக் கையாண்டு, கணக்குகளில் மோசடிகள் செய்துள்ளதாக குற்றம்சாட்டி கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.

    இந்த அறிக்கை பங்குச்சந்தையில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே, அதானி நிறுவனத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை சுவிஸ் வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது என தகவல் வெளியானது.

    அதில், சுவிட்சர்லாந்தில் கோதம் சிட்டி என்ற புலனாய்வு இணையதள செய்தி நிறுவனம், 2021-ம் ஆண்டு அதானி குழுமம் பண மோசடி, பங்கு பரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டதை ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது.

    இதனால் சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி, அதானியின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம், மறுக்கிறோம்.

    அதானி குழுமத்திற்கு சுவிஸ் நீதிமன்ற நடவடிக்கைகளில் எந்த தொடர்பும் இல்லை. கூறப்படும் உத்தரவில் கூட சுவிஸ் நீதிமன்றம் எங்கள் குழு நிறுவனங்களைப் பற்றி குறிப்பிடவில்லை.

    இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானது, பகுத்தறிவற்றது மற்றும் அபத்தமானது. இந்த முயற்சியை வன்மையாகக் கண்டில்க்கிறோம் என தெரிவித்துள்ளது.

    ×