என் மலர்tooltip icon

    டெல்லி

    • பிலிப்பைன்சில் யாகி புயல் உருவானது.
    • இப்புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது.

    புதுடெல்லி:

    பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இதேபோல், யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, புயலால் பாதிப்பு அடைந்த அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது.

    இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா நிவாரண பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.

    நிவாரணப் பொருட்களில் உணவுகள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் ஆகியவை அடங்கும் என தெரிவித்துள்ளது.

    • வாஷிங்டனில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ராகுல் காந்தி சீக்கியர்கள் குறித்து பேசினார்.
    • ராகுல் காந்தியின் கருத்துக்கு பல்வேறு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் செய்தார்.

    வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா, குருத்வாரா செல்ல அனுமதிக்கப்படுவாரா, அதற்கே இங்கு சண்டை நடக்கிறது என கூறியிருந்தார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. பல்வேறு சீக்கிய அமைப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய இணை மந்திரி ரவ்நீத்சிங் பிட்டு, இந்தியாவின் நம்பர் 1 பயங்கரவாதி ராகுல் காந்தி என கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய மந்திரி ரவ்நீத்சிங் பிட்டு கூறியதாவது:

    ராகுல் காந்தி தமது தாய்நாட்டை அதிகம் நேசிப்பது இல்லை. என் கருத்துப்படி அவர் ஒரு இந்தியரும் அல்ல.

    ஏன் என்றால் வெளிநாடுகளுக்குச் சென்று தவறாக நமது நாட்டைப் பற்றி பேசுகிறார்.

    அவரின் பேச்சுக்களை பிரிவினைவாதிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தயாரிப்பவர்கள் தான் பாராட்டி உள்ளனர் என்றால் அவர் தான் நம்பர் 1 பயங்கரவாதி.

    என் கருத்துப்படி யாரையாவது அல்லது நாட்டின் மிக பெரிய எதிரியை பிடித்தால் வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்றால் அது ராகுல் காந்தி தான் என தெரிவித்தார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
    • உயர்மட்டக்கு குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக பரிந்துரைகளை வழங்கியது.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தற்போதைய ஆட்சிக் காலத்திற்குள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத பிரமுகர் ஒருவர் கூறிய தகவலை மேற்கோள் காட்டி தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

    கடந்த மாதம் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து பதிவு செய்தார். ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டார்.

    இதேபோல், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகளில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற வாக்குறுதியும் ஒன்று ஆகும்.

    இதுதொடர்பாக ஆராய்வற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக பரிந்துரைகளை வழங்கியது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படுவது அவசியம் என குறிப்பிட்டிருந்தது. இதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை குழு பரிந்துரைத்தது. அவற்றில் பெரும்பாலானவை மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறியிருந்தது.

    இந்த சீர்திருத்தங்களை செய்தபின், மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கலாம் என்றும், அது முடிந்த பின்னர் 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

    இந்நிலையில், தற்போதைய பாஜக ஆட்சிக் காலத்திற்குள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • இன்று மதியம் தொடங்கிய கட்சிக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    • மக்கள் எனக்குக் கட்டளை இட்டால் மட்டுமே நான் மறுபடியும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. ஆனால் அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று மதியம் தொடங்கிய கட்சிக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியினர் மத்தியில் பேசிய அவர், சட்டத்தின் நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைத்துவிட்டது. இப்போது மக்களின் நீதிமன்றத்தில் நான் நீதியை பெறுவேன். மக்கள் எனக்குக் கட்டளை இட்டால் மட்டுமே நான் மறுபடியும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்.

    ஆதரவு கேட்டு மக்களிடம் செல்ல உள்ளேன். அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்க உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலை மகாராஷ்டிர தேர்தலுடன் வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேறொரு ஆம் ஆத்மி தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். 

    • கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக கடந்த 2023 ஜனவரி 24 இல் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கை மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஈடுபடவில்லை என்று கடந்த ஆகஸ்ட் 10 ஆம் ஹிண்டன்பா்க் மற்றொரு குற்றச்சாட்டை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.

    இந்த குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அதானி குழுமம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் இருவரும் இணைத்தும் தற்போது மற்றொரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் செபி மாதபியின் மீது காங்கிரஸ் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக அரசு மவுனம் காப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

    செபி தலைவர் சீன நிறுவனங்களில் முதலீடு செய்கிறார் என்ற புதிய குற்றச்சாட்டைக் காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியுமா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

    இயற்கையான முறையில் பிறக்காத பிரதமருக்கு நாங்கள் எழுப்பும் கேள்விகள் என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ,

    பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் செபி தலைவர் மாதபி பூரி புச் வணிகம் செய்துள்ளார். இந்தியாவிற்கு வெளியே அதிக மதிப்புள்ள முதலீடுகளை செய்துள்ளார். எல்லைப்பகுதியில் இந்தியா சீனா இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் சூழலில் செபி தலைவரோ, சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இந்த விஷயம் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, செபி தலைவர் கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், மொத்தம் 19.54 கோடி ரூபாய்க்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். உள்நாடு மட்டுமின்றி சீனா உட்பட பல வெளிநாட்டு நிதி திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
    • உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாரம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

    முன்னதாக, பொதுமக்கள் அஞ்சலிக்காக சிபிஎம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    நுரையீரல் தொற்று பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.

    இந்நிலையில், ஆராய்ச்சி, பயிற்சி நோக்கங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்து மெட்ரோவில் செல்கிறார்.
    • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் பயனாளிகள் 20 ஆயிரம் பேருக்கு அவர் அனுமதி கடிதம் வழங்குகிறார்.

    பிரதமர் நரேந்திரமோடி வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி காலை 10 மணிக்கு ஜார்க்கண்ட் செல்கிறார். அங்கு ரூ.660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். டாடாகர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் டாடா கர்-பாட்னா வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    மேலும் 5 வந்தே பாரத் ரெயில்களையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

    பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் பயனாளிகள் 20 ஆயிரம் பேருக்கு அவர் அனுமதி கடிதம் வழங்குகிறார்.

    16-ந்தேதி காலை 9.45 மணிக்கு குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு மோடி செல்கிறார். அவர் பயனாளிகளுடன் கலந்துரையாடுவார். 10.30 மணிக்கு முதலீட்டாளர் சந்திப்பு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    பிற்பகல் 1.45 மணிக்கு அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்து மெட்ரோவில் செல்கிறார். மாலை 3.30 மணிக்கு ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    குஜராத்தில் இருந்து மோடி 17-ந்தேதி காலை 11.15 மணிக்கு ஒடிசா செல்கிறார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற பயனாளிகளுடன் அவர் உரையாடுகிறார்.

    12 மணியளவில் பிரதமர் மோடி ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதோடு ரூ.3,800 கோடி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    • பிரதம மந்திரி இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார்.
    • பிரதமரின் இல்லத்தில், அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இது நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது - 'காவ்: சர்வசுக்ஷா பிரதா'.

    லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதம மந்திரி இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார்.

    பிரதமரின் இல்லத்தில், அன்பிற்குரிய தாய் பசு, நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

    அதனால், அதற்கு 'தீப்ஜோதி' என்று பெயர் வைத்துள்ளேன என்று கூறியுள்ளார்.

    மேலும், பசு கன்றுக்கு பிரதமர் மோடி முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

    • இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமும் மிக்கது.
    • இந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.

    இதையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அனைத்து இந்திய மொழிகளும் நமக்கு பெருமையும் பாரம்பரியமும் மிக்கது. அவற்றை வளப்படுத்தாமல் நாடு முன்னேற முடியாது. அதிகாரப்பூர்வ மொழியான இந்தி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது.

    இந்த ஆண்டுடன் பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்வதற்கும், மேம்பட்ட இந்தியாவின் வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கும் அதிகாரப்பூர்வ மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கமிஷன் அமைப்பு.
    • ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், அவகாசம் நீட்டிப்பு

    மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை உருவாவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி 3 பேர் கொண்ட கமிஷன் அறிவிக்கப்பட்டது.

    இந்த கமிஷன் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் (தகவல் தொடர்பு பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "3 பேர் கொண்ட கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த கமிஷனுக்கு நவம்பர் 24-ந்தேதி வரை கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூர் மக்களின் வேதனை தொடர்கிறது.

    இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல பிரதமர் மோடி தொடர்ந்து திட்டம் போட்டு வருகின்ற நிலையில், மிகவும் இன்னல்களை சந்தித்து வரும் மாநிலத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்சு சேகர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் உள்ளனர்.

    • பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • நபி கரீம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று டெல்லியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. டெல்லி-குருகிராம் விரைவுச்சாலையில் டெல்லி செல்லும் பிரதான பாதை மற்றும் சர்வீஸ் லேன் ஆகியவற்றில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழையால் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானம் திருப்பி விடப்பட்டது. நபி கரீம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் டெல்லிக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மொராதா பாத்தில் கனமழை, காற்றின் காரணமாக கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அழிந்தன. உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மலையில் இருந்து கற்கள், மணல் விழுந்தது. இதனால் அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது.

    • ஈரான்- இஸ்ரேல் இடையிலான பதற்றம் புதிது அல்ல.
    • இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி கலந்து கொண்டார். இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் குறித்து அவரிடம் கேள்வி ஏழுப்பப்பட்டது.

    இது தொடர்பாக இராஜ் இலாஹி கூறியதாவது:-

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான பதற்றம் புதிது அல்ல. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் இந்த பதற்றம் ஈரானில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு புதியதாக ஒன்றும் இல்லை. இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் இந்திய நண்பர்களுக்கு உறுதி அளிக்கிறேன். மேலும், ஈரானுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

    ஈரான் எவ்வளவு பாதுகாப்பானது என்று அவர்களாகவே பார்க்க முடியும். ஈரான் அழகான மற்றும் கவரக்கூடியதாகும். டெல்லி- தெஹ்ரான் இடையே இரண்டு நேரடி விமான சேவை உள்ளது. மும்பை- தெஹ்ரான் இடையே விமான சேவை உள்ளது. இன்னும் விமான சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார்.

    ×