என் மலர்tooltip icon

    டெல்லி

    • கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது.
    • எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியது.
    • தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நவ்தீப் சிங் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 25 வயதான நவ்தீப் சிங் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்டி படிப்பில் பயின்று வந்தார்.

    இந்த நிலையில், பார்சி அஞ்சுமன் கெஸ்ட் ஹவுஸ்-இல் தங்கி படித்து வந்த நவ்தீப் சிங் விடுதியில் உள்ள தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்று அசத்தினார் நவ்தீப் சிங். எனினும், மருத்துவ படிப்பை முடிக்கும் முன் அவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

     


    சம்பவத்தன்று நவ்தீப் சிங்கின் தந்தையும், பள்ளி முதல்வருமான கோபால் சிங் தன் மகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வந்துள்ளார். எனினும், மகன் அழைப்பை ஏற்காததை அடுத்து நவ்தீப் நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து நவ்தீப் அறைக்கு சென்ற அவரது நண்பர்கள், அவரின் அறை கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்ததை கண்டனர்.

    எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து எந்த பதிலும் கிடைக்காததை அடுத்து, நண்பர்கள் சேர்ந்து நவ்தீப் சிங்கின் அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே சென்ற நண்பர்களுக்கு அறையில் நவ்தீப் சிங் உயிரிழந்த நிலையில், சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நவ்தீப் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.
    • 6 மாதங்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

    அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. ஆனால் அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.

    இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    பின்னர், சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.

    இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவை சந்திக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நேர்மையானவர் என மக்கள் சான்றிதழ் அளிக்கும் வரை முதல்வர் நாளற்காலியில் அமரப்போவதில்லை என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசியல் சுழலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்
    • ஒரு காலத்தில் என்னோடு சேர்ந்து மதுவுக்கு எதிராக செயல்பட ஒருவர் இப்போது மதுபான கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கிறார்

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அன்னா ஹசாரே கடந்த 2011 ஆம் தொடங்கிய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் ஆவார். இவரது இயக்கத்தில் இணைத்து போராட்டங்களில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் அதன்பின்னர் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கி டெல்லியில் ஆட்சியை பிடித்தார்.''

    இந்நிலையில் தற்போது அரசியல் சுழலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். டில்லி மதுபான கோள்களை வழக்கில் 6 மாதமாக திகார் சிறையிலிருந்த கெஜ்ரிவால் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள அவர் டெல்லிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    இந்த சூழலில் தற்போது அன்னா ஹசாரே கூறியதாவது, அரசியலில் நுழைய வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தே கெஜ்ரிவாலை நான் எவ்வளவோ தடவை எச்சரித்தேன். சமூக சேவை செய்வதில்தான் உண்மையான திருப்தி உள்ளது என்று கூறினேன்.ஆனால் அவர் நான் சொல்வதைக் கேட்கவில்லை. எனது அறிவுரையைக் கருத்தில் கொள்ள கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். இப்போது அவருக்கு என்ன நடந்துள்ளதோ அது தவிர்க்க முடியாதது. கெஜ்ரிவால் மனதில் என்ன உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

    முன்னதாக கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேட்டில் கைதானபோது பேசியிருந்த அன்னா ஹசாரே, நான் கெஜ்ரிவால் மீது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன். ஒரு காலத்தில் என்னோடு சேர்ந்து மதுவுக்கு எதிராக செயல்பட ஒருவர் இப்போது மதுபான கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 10 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி இன்று காலை டெல்லி திரும்பினார்.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலை வரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த 6-ந்தேதி அதிகாலை டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார். 8-ந்தேதி அவர் அமெரிக்கா சென்றடைந்தார்.

    அவர் 3 நாட்கள் அதாவது 10-ந்தேதி வரை பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல் நிகழ்த்தினார். பிரதமர் நரேந்திரமோடியையும், மத்திய அரசையும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பா.ஜனதா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

    3 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொரண்டு 10 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி இன்று காலை டெல்லி திரும்பினார்.

    நாடு திரும்பிய ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    • பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்.
    • உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தது.

    அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்து இருந்தது. இதை அமல்படுத்த எந்த காலக்கெடுவையும் குழு நிர்ணயிக்கவில்லை.

    இதை அமல்படுத்த ஒரு செயலாக்க குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்து இருந்தது.

    பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமலாக்குவது குறித்து வலியுறுத்தி இருந்தார். அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்களை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் மோடி யின் 3-வது ஆட்சி காலம் முடிவதற்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    2029-ம் ஆண்டு முதல் பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் தனியாக பரிந்துரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மிலாது நபி நாளை கொண்டாடப்படுகிறது.
    • நம்மை சுற்றி மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும்.

    இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாது நபி ஆகும். மிலாது நபி நாளை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,

    மிலாது நபி வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். நம்மை சுற்றி மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

    • மக்கள் தீர்ப்பு அளிக்கும்வரை நானும், சிசோடியாவில் பதவி வகிக்கமாட்டோம்- கெஜ்ரிவால்.
    • டெல்லியின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    நேற்று திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்தார். இதனால் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா முதல்வராகலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், மக்கள் நேர்மையானவர் என்ற சொன்ன பிறகே நானும் சிசோடியாவும் பதவிக்கு திரும்புவதாக கெஜ்ரிவால் தெரிவித்துவிட்டார்.

    இதனால் மணிஷ் சிசோடியா முதல்வராக வாய்ப்பில்லை.

    அதிஷி

    அடுத்தது அதிஷி. இவர்தான் முன்னணி தலைவராக உள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது நிர்வாகத்தை நடத்தியது இவர்தான். இவர் கைவசம் 14 துறைகள் உள்ளன. கல்வி, நிதி, திட்டம், மக்கள் தொடர்பு, பொதுப்பணித்துறை போன்ற இலாகாக்களை கையில் வைத்துள்ளார்.

    கல்விக்கான டெல்லி சட்டமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் உள்ளது. அவரது வலுவான பேச்சுத்திறன் அவரை முதல்வர் பதவிக்கு முன்னணியில் உள்ளவர்களில் ஒருவராக்கியுள்ளது.

    கோபால் ராய்

    கோபால் ராய். 49 வயதான இவரின் மக்கள் பணி மற்றும் அனுபவம் ஆகியவை முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிறுத்துகிறது. மாணவர் செயல்பாட்டின் பின்னணியைக் கொண்ட ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி ஆவார். மேலும் டெல்லியின் அரசியலில் நீண்ட காலமாக முக்கியப் பங்காற்றி வருகிறார்.

    கோபால் ராய் டெல்லியின் தொழிலாள வர்க்க சமூகங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என அறியப்படுபவர். தொழிலாளர் உரிமைகள் தொடர்பான பின்னணி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அவரது முயற்சிகள் ஆகியவை வாக்காளர்களிடம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தொழிலாளர் நலன் மற்றும் மாசு கட்டுப்படுத்துதல் போன்ற பணிகள் அவரை முதல்வர் பதவிக்கு முன்னுறுத்துகிறது.

    கைலாஷ் கெலாட்

    கைலாஷ் கெலாட். டெல்லி அரசியல் வட்டாரத்தில் நன்றாக அறியப்படக் கூடியவர். தற்போது போக்குவரத்துத்துறை மந்திரியாக உள்ளார். இவரது தலைமையின் கீழ் டெல்லி அரசு, அம்மாநில போக்குவரத்துத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது.

    மின்சார பேருந்து, சாலை போக்குவரத்தை உறுதி செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. இதனால் இவரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளார்.

    • ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் பாஜக-வின் தொடர்பு மேலும் வலுவடையும் வகையில் பயணம் இருக்கும்.
    • ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாஜக-வை ஏற்றுக் கொண்டனர்- பாஜக தலைவர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி 19-ந்தேதி (வியாழக்கிழமை) ஸ்ரீநகர் செல்கிறார். அங்கு பாஜக-வினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறது.

    ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் பாஜக-வின் தொடர்பு மேலும் வலுவடையும் வகையிலும், பாஜகவின் தேர்தல் வியூகத்திற்கு முக்கிய முக்கியமானதாகவும் பிரதமர் மோடியின் வருகை இருக்கும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் பொறுப்பாளர் ராம் மாதவ், பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) அசோக் கவுல், ஸ்ரீநகர் மாவட்ட பாஜக தலைவர் அசோக் பாட் ஆகியோர் ஸ்ரீநகர் அலுவலகத்தில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக-வின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாஜக-வை ஏற்றுக் கொண்டனர். பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என ராம் மாதவ் தெரிவித்தார்.

    கடந்த முறை பிரதமர் மோடி ஸ்ரீநகர் சென்றிருந்தபோது, தேர்தல் விரைவில் நடைபெறும். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    பிரதமர் மோடி ஸ்ரீநகர் செல்லும் நிலையில், மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிப்பாரா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    • முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
    • டெஸ்ட் தொடருக்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிராக டி20 தொடர் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி 27-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடருக்கு பிறகு டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    வங்கதேசத்தைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

    எனவே அந்த முக்கியமான தொடர்களில் சுப்மன் கில் பங்கேற்க வேண்டும் என்பதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    • நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மிலாது நபி என கொண்டாடப்படுகிறது.
    • மிலாது நபியை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மிலாது நபியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஜனாதிபதி முர்மு கூறியதாவது:

    மிலாது நபி என்று கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வலுப்படுத்த நபிகள் நாயகம் நமக்கு உணர்த்தியுள்ளார். சமூகத்தில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மற்றவர்களிடம் இரக்கம் காட்டவும், மனித குலத்திற்கு சேவை செய்யவும் அவர் மக்களை ஊக்குவித்தார்.

    புனித குர்ஆனின் புனிதமான போதனைகளை உள்வாங்கி, அமைதியான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.

    • பிலிப்பைன்சில் யாகி புயல் உருவானது.
    • இப்புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது.

    புதுடெல்லி:

    பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இதேபோல், யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, புயலால் பாதிப்பு அடைந்த அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது.

    இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா நிவாரண பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.

    நிவாரணப் பொருட்களில் உணவுகள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் ஆகியவை அடங்கும் என தெரிவித்துள்ளது.

    ×