என் மலர்
இந்தியா

ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி
- அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்து மெட்ரோவில் செல்கிறார்.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் பயனாளிகள் 20 ஆயிரம் பேருக்கு அவர் அனுமதி கடிதம் வழங்குகிறார்.
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி காலை 10 மணிக்கு ஜார்க்கண்ட் செல்கிறார். அங்கு ரூ.660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். டாடாகர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் டாடா கர்-பாட்னா வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேலும் 5 வந்தே பாரத் ரெயில்களையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் பயனாளிகள் 20 ஆயிரம் பேருக்கு அவர் அனுமதி கடிதம் வழங்குகிறார்.
16-ந்தேதி காலை 9.45 மணிக்கு குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு மோடி செல்கிறார். அவர் பயனாளிகளுடன் கலந்துரையாடுவார். 10.30 மணிக்கு முதலீட்டாளர் சந்திப்பு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
பிற்பகல் 1.45 மணிக்கு அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்து மெட்ரோவில் செல்கிறார். மாலை 3.30 மணிக்கு ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
குஜராத்தில் இருந்து மோடி 17-ந்தேதி காலை 11.15 மணிக்கு ஒடிசா செல்கிறார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற பயனாளிகளுடன் அவர் உரையாடுகிறார்.
12 மணியளவில் பிரதமர் மோடி ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதோடு ரூ.3,800 கோடி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.






