என் மலர்tooltip icon

    டெல்லி

    • மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாதமும் மருந்துகளை ஆய்வு செய்யும்.
    • தரமற்ற மருந்துகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதுதான் இதன் நோக்கம்.

    புதுடெல்லி:

    மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாதமும் மருந்துகளை ஆய்வுசெய்து அவற்றின் தரத்தை கணக்கிட்டு வருகிறது. தரமற்ற மருந்துகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதுதான் இதன் நோக்கம்.

    இந்நிலையில், மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் [CDSCO] கடந்த டிசம்பர் மாதம் நடத்திய பரிசோதனையில் 167 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறிந்துள்ளது.

    கடந்த டிசம்பரில் மத்திய மருந்து ஆய்வுக்கூடங்கள் 74 மருந்து மாதிரிகளை உரிய தரத்தில் இல்லை என்றும், மாநில மருந்து பரிசோதனை கூடங்கள் 93 மருந்து மாதிரிகளை உரிய தரத்தில் இல்லை என்றும் கண்டுபிடித்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அந்த மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார வாகன ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறுகிறது.
    • வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டுவிழாவை குறிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் டெல்லி கடமைப்பாதையில் மிக தீவிரமாக நடந்து வருகிறது. பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டன. தற்போது அங்கு தினமும் ஒத்திகை நடந்து வருகிறது. இதில் முழு ஒத்திகை இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடமைப்பாதையைச் சுற்றிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு அலங்கார வாகன ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறுகிறது. இது தவிர பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த ஆண்டு விழாவில் இடம்பெறுகின்றன.

    குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இதில் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் முதல் குடியரசு தினவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டுவிழாவை குறிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறுகிறது.

    மேலும் ஒரு சிறப்பு அம்சமாக ரோபோ நாய்கள் (மியூல்) படைப்பிரிவும் இந்த ஆண்டு இடம்பெறுகிறது. இந்திய ராணுவம் சமீபத்தில் 100 ரோபோ நாய்களை ஆயுதப்படையில் சேர்த்துள்ளது. இந்த ரோபோக்களில் துப்பாக்கியும் பொருத்தப்பட்டு உள்ளது.

    படிகள் மற்றும் மலைப்பகுதிகளில் ஏறவும், தடைகளை கடக்கவும் இவை வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மைனஸ் 55 டிகிரி குளிரிலும் ரிமோட் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் 15 கிலோ எடையை இது சுமந்து செல்லும்.

    இவை, கடமைப்பாதை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையிலும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வன்முறையைத் தூண்டியதாகச் சஜ்ஜன் குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.
    • நீதிமன்றம் எங்களுக்கு அநீதி இழைத்துவிட்டது

    1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், முன்னாள் காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார்.

    வன்முறையைத் தூண்டியதாகச் சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்று கூறி, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று அவரை விடுவித்தது.

    1984 நவம்பர் 1-ஆம் தேதி ஜனக்புரியில் சோஹன் சிங் மற்றும் அவரது மருமகன் அவதார் சிங் கொல்லப்பட்டது மற்றும் நவம்பர் 2-ஆம் தேதி விகாஸ்புரியில் குர்சரண் சிங் என்பவர் எரிக்கப்பட்டது தொடர்பான 2 எப்.ஐ.ஆர் அடிப்படையில் இந்த வழக்கு நடைபெற்றது.

    இந்நிலையில் குர்சரண் சிங்கின் சகோதரர் மஞ்சித் கூறுகையில், "பல தசாப்தங்களாக நாங்கள் நடத்திய சட்டப் போராட்டம் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

    எனது சகோதரர் தனது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகக் கிடந்து 2008-ல் இறந்தார். நீதிமன்றம் எங்களுக்கு அநீதி இழைத்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

    நேற்று தீர்ப்பு வெளியானவுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீக்கிய அமைப்பினர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    • இந்தியாவின் சாய்னா நேவால் சமீபத்தில் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
    • இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால். இவர் ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்றார்.

    இந்நிலையில், பேட்மிண்டனில் இருந்து ஓய்வுபெற்ற சாய்னா நேவாலுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்ன் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, சச்சின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சாய்னா, நீங்கள் இந்திய பேட்மிண்டனை உலக அரங்கிற்கு கொண்டு சென்றீர்கள். பதக்கங்களையும் தாண்டி மிகப்பெரிய சாதனை ஒன்று உள்ளது. அது, நாடு முழுவதும் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உலக அளவிலான வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையை கொடுத்து உத்வேகம் அளித்தீர்கள். இந்திய விளையாட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி. உங்களது தாக்கம் தலைமுறைகள் கடந்து உணரப்படும் என பதிவிட்டுள்ளார்.

    • பிரேசில் அதிபர் டி சில்வா உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • பிரேசில் அதிபர் டி சில்வா விரைவில் இந்தியா வர உள்ளார் என்றார் .

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியை பிரேசில் நாட்டின் அதிபர் லுலா டி சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

    அப்போது, இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், அதிபர் டி சில்வா உடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு உறவில் இந்த ஆண்டு புதிய உச்சம் அடைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரேசில் அதிபர் டி சில்வா விரைவில் இந்தியா வர உள்ளார் என பதிவிட்டுள்ளார்.

    • நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது.
    • பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

    நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    • MGNREGA இந்தியாவின் ஏழைக் குடும்பங்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை.
    • MGNREGA திட்டம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக உள்ளது.

    மத்திய அரசு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (MGNREGA) பல விதிகளை மாற்றி விபி ஜி ராம் ஜி சட்டத்தை கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில் டெல்லியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதொழிலாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "MGNREGA என்பது வெறும் ஒரு திட்டமல்ல, அது இந்தியாவின் ஏழைக் குடும்பங்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை.

    மோடி அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் அடித்தளத்தையே தகர்க்க முயல்கிறது.

    கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, அவர்களைப் பசிக்குத் தள்ளுவது இந்த அரசின் கொடூரமான முகம்.

    காங்கிரஸ் கட்சி இதை ஒருபோதும் அனுமதிக்காது; ஏழைகளின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம்." என்று தெரிவித்தார்.

    கூட்டத்தில் பேசிய கார்கே,"MGNREGA திட்டம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதிலும், புலம்பெயர் தொழிலாளர்களைக் காப்பதிலும் இந்தத் திட்டம் மிக முக்கியப் பங்கு வகித்தது.

    இதை ரத்து செய்வது கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல். இது ஏழைகளுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய துரோகம்.

    ஏழைகளுக்குப் பயனளிக்கும் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை வழங்குவதையே இந்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

    வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி எழுப்பும். மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

    நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்லாமல், மக்கள் மன்றத்திலும் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.

    • ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் பங்கேற்கின்றனர்.
    • டெல்லியை சேர்ந்த முகமது ரேஹான் படம் இடம்பெற்றுள்ளது.

    வரும் 26 ஆம் தேதி நாட்டின் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி கடமைப் பாதையில் சிறப்பு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

    சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் பங்கேற்கின்றனர்.

    கொண்டாட்டங்களை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், வழக்கப்படி டெல்லி போலீசார் வெளியிட்டு உள்ள எச்சரிக்கை போஸ்டர்களில் முதன்முறையாக அல்-கொய்தா பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்று இடம் பெற்று உள்ளது.

    டெல்லியை சேர்ந்த முகமது ரேஹான் என்ற அந்த நபர் இந்திய துணை கண்டத்தில் அமைந்த அல்-கொய்தா இயக்கத்தின் பயங்கரவாதி என்றும் டெல்லி போலீஸ் மற்றும் உளவு அமைப்புகளால் தேடப்படும் பயங்கரவாதி என்றும் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே யங்கரவாத தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

    • தமிழ்நாட்டிலும் கரூர் விவகாரத்துக்கு பின்னரே வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டது.
    • கரூர் விவகாரத்தை வைத்து மட்டும் உத்தரவை நாங்கள் பிறப்பிக்க இயலாது.

    புதுடெல்லி:

    பொதுக்கூட்டம், பேரணியின்போது கூட்ட நெரிசலால் உயிரிழப்பை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தும்பலம் கோட் வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தும்பலம் கோட் வெங்கடேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரியதர்ஷினி, 'கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

    இதுபோன்ற கூட்டத்துக்கு பொது வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை.

    தமிழ்நாட்டிலும் கரூர் விவகாரத்துக்கு பின்னரே வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டது. இது உயிர் சார்ந்த விஷயம் என்பதால் இதற்கு ஒரு பொது வழிகாட்டு நெறிமுறை வகுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறியீட்டை ஏற்படுத்த வேண்டும்' என்று கோரினார்.

    அப்போது நீதிபதிகள், 'ஒரு உதாரணத்துக்காக, சென்னையில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் டெல்லியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கிறோம் என வைத்துக் கொள்வோம்.

    ஆனால் அங்கு 50 ஆயிரம் மக்கள் வருகை புரிந்திருந்தார்கள் என்றால் அப்போது என்ன செய்வது? எனவே இந்த விவகாரத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

    இதற்கு அங்கு இருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில நிர்வாகங்கள் தான் உரிய முடிவை எடுக்க முடியும். கரூர் விவகாரத்தை வைத்து மட்டும் உத்தரவை நாங்கள் பிறப்பிக்க இயலாது. இது தொடர்பாக உரிய அமைப்பிடம் தான் முறையிட முடியும். ஒரு வேளை அரசியல் கட்சி கூட்டமாக இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்திலும் இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அணுகலாமே' என்றனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் மனு கொடுத்திருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் வழிகாட்டு நெறிமுறை வகுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்.

    ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்து ஒரு உத்தரவை பிறப்பித்தால், அது ஒரு பொதுவான உத்தரவாக நாடு முழுவதும் அமல்படுத்த முடியும். அதற்காக நீதிமன்றத்தின் தலையீடு அவசியம்' என தெரிவித்தார்.

    இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பை தடுப்பதற்காக ஒரு பொது வழிகாட்டு நெறிமுறை உருவாக்க வேண்டும் என கோரி மனுதாரர் இந்த கோர்ட்டை நாடி இருக்கிறார். இந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறை உருவாக்க வேண்டும்.

    அதற்காக பொது இடங்களில் நிகழ்நேர கண்காணிப்பு, இடர் தணிக்கை மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய தேசிய கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறியீட்டை ஏற்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

    பொது நிகழ்வுகளின் போது பொது இடங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும். அந்த வகையில் மனுதாரர் எழுப்பி உள்ள கோரிக்கைகளை வேறொரு மனுவாக தயாரித்து, உரிய அமைப்பிடம் வழங்க உத்தரவிடுகிறோம். அந்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைப்பானது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என உத்தரவிட்டனர்.

    • லடாக்கில் பணியாற்றி வந்த அவர், தற்போது மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
    • டெல்லி மாநகராட்சி ஆணையராக இருந்த அஸ்வினி குமார், தற்போது ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    டெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு மைதானத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களை வெளியேற்றி, அந்த மைதானத்தில் தனது நாயுடன் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நடைப்பயிற்சி செய்த சம்பவம் சர்ச்சை ஆனது. 2022-ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    இதற்கு தண்டனையாக மத்திய உள்துறை அமைச்சகம் அவரை டெல்லியிலிருந்து லடாக்-கிற்கு இடமாற்றம் செய்தது.

    லடாக்கில் பணியாற்றி வந்த அவர், தற்போது மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு டெல்லி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டது.

    டெல்லி மாநகராட்சி ஆணையராக இருந்த அஸ்வினி குமார், தற்போது ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    காலம் கடந்தால் மக்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்ற நினைப்பில் சஞ்சீவ் கிர்வாருக்கு மீண்டும் டெல்லியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.    

    • குடியரசு தின விழா அணிவகுப்பில் சி.ஆர்.பி.எப். ஆண்கள் படை பங்கேற்கிறது.
    • அதிகாரி சிம்ரன் பாலா, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி கடந்த 2023-ம் ஆண்டு இந்த பணிக்கு சேர்ந்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆயுதப்படைகளின் அணிவகுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அணிவகுப்பில் இந்த ஆண்டு ஒரு பெண் அதிகாரி அனைவரது கவனத்தையும் ஈர்க்கப்போகிறார். அவரது பெயர் சிம்ரன் பாலா. 26 வயதே ஆன இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி கமாண்டன்டராக இருக்கிறார். இவர் ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா கிராமத்தைச் சேர்ந்தவர்.

    குடியரசு தின விழா அணிவகுப்பில் சி.ஆர்.பி.எப். ஆண்கள் படை பங்கேற்கிறது. 140 வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த படையின் தளபதியாக சிம்ரன் பாலா, கம்பீர நடை போட இருக்கிறார்.

    முதல்முறையாக ஆண்கள் படையை தலைமை தாங்கி இவர் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண நாடே காத்திருக்கிறது. இது பெண்களுக்கான அங்கீகாரம் என்றும் அதிகாரிகள் பெருமைப்பட்டு உள்ளனர். அதிகாரி சிம்ரன் பாலா, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி கடந்த 2023-ம் ஆண்டு இந்த பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.

    பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார். தற்போது மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.

    இந்நிலையில், டிடிவி தினகர் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை வரவேற்கிறேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

    டிடிவி தினகரன் அவர்கள் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.

    திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×