என் மலர்
இந்தியா

ஏழைகளின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம்- ராகுல் காந்தி
- MGNREGA இந்தியாவின் ஏழைக் குடும்பங்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை.
- MGNREGA திட்டம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக உள்ளது.
மத்திய அரசு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (MGNREGA) பல விதிகளை மாற்றி விபி ஜி ராம் ஜி சட்டத்தை கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் டெல்லியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதொழிலாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "MGNREGA என்பது வெறும் ஒரு திட்டமல்ல, அது இந்தியாவின் ஏழைக் குடும்பங்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை.
மோடி அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் அடித்தளத்தையே தகர்க்க முயல்கிறது.
கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, அவர்களைப் பசிக்குத் தள்ளுவது இந்த அரசின் கொடூரமான முகம்.
காங்கிரஸ் கட்சி இதை ஒருபோதும் அனுமதிக்காது; ஏழைகளின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம்." என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய கார்கே,"MGNREGA திட்டம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதிலும், புலம்பெயர் தொழிலாளர்களைக் காப்பதிலும் இந்தத் திட்டம் மிக முக்கியப் பங்கு வகித்தது.
இதை ரத்து செய்வது கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல். இது ஏழைகளுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய துரோகம்.
ஏழைகளுக்குப் பயனளிக்கும் இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை வழங்குவதையே இந்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி எழுப்பும். மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்லாமல், மக்கள் மன்றத்திலும் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.






