என் மலர்
இந்தியா

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு - முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் விடுதலை
- வன்முறையைத் தூண்டியதாகச் சஜ்ஜன் குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.
- நீதிமன்றம் எங்களுக்கு அநீதி இழைத்துவிட்டது
1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், முன்னாள் காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார்.
வன்முறையைத் தூண்டியதாகச் சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்று கூறி, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று அவரை விடுவித்தது.
1984 நவம்பர் 1-ஆம் தேதி ஜனக்புரியில் சோஹன் சிங் மற்றும் அவரது மருமகன் அவதார் சிங் கொல்லப்பட்டது மற்றும் நவம்பர் 2-ஆம் தேதி விகாஸ்புரியில் குர்சரண் சிங் என்பவர் எரிக்கப்பட்டது தொடர்பான 2 எப்.ஐ.ஆர் அடிப்படையில் இந்த வழக்கு நடைபெற்றது.
இந்நிலையில் குர்சரண் சிங்கின் சகோதரர் மஞ்சித் கூறுகையில், "பல தசாப்தங்களாக நாங்கள் நடத்திய சட்டப் போராட்டம் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.
எனது சகோதரர் தனது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகக் கிடந்து 2008-ல் இறந்தார். நீதிமன்றம் எங்களுக்கு அநீதி இழைத்துவிட்டது" எனத் தெரிவித்தார்.
நேற்று தீர்ப்பு வெளியானவுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீக்கிய அமைப்பினர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.






