என் மலர்tooltip icon

    இந்தியா

    • மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது.
    • தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

    வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகம் முழுக்கவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ஏ.ஐ. வரவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். இந்த ஆண்டு அதன் உலகம் முழுவதிலும் இருந்து பணி புரியும் 12,261 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களில் பங்கு சந்தையில் ரூ .28,148 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது.

    நேற்று மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது. தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

    இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.28,148.72 கோடி குறைந்து ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.

    • பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணையில் பெறுகிறார்கள்.
    • இதுவரை 19 தவணையாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகள் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்நிலையில், 20வது கட்ட தவணை ஆகஸ்ட் இரண்டாம் தேதி விடுவிக்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

    மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதுவரை, திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    பிரதமர் தனது தொகுதியான வாரணாசியில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்தத் தவணை விநியோகத்தை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • நிசார் செயற்கைக்கோளால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.

    இந்நிலையில், இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். நாசாவின் 'எல்-பாண்ட்' மற்றும் இஸ்ரோவின் 'எஸ்-பாண்ட்' என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும்.

    நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். அதாவது, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்யும் திறன் கொண்டதாகும்.

    • துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
    • பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.

    தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்காதது வருத்தமளிக்கிறது என்றார் பிரியங்கா காந்தி.
    • நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன என தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 420 பேர் உயிரிழந்தனர். சுமார் 397 பேர் படுகாயமடைந்த நிலையில், 47 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவு கேரள வரலாற்றில் மிக மோசமான பேரிடர் என பதிவாகியது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் வங்கிகள் இ.எம்.ஐ. பிடித்தம் செய்ததாக முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் பேசிய வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.

    ஒரு ஆண்டாக வயநாட்டிற்கு நிதி விடுவிக்கக் கோரி வருகிறோம். சில நிதிகள் விடுவிக்கப்பட்டன, ஆனால் அவை போதுமானதாக இல்லை, கடன்களாக வழங்கப்பட்டன.

    இது முன்னெப்போதும் இல்லாதது. மக்கள் தங்கள் உயிர்களையும் முழு வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும்போது கடன்களை திருப்பிச் செலுத்துவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்கள் அழிக்கப்பட்டன. சுமார் 1,600 கட்டிடங்கள் தரைமட்டமாகின. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

    • 2018 முதல் தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறை கைது செய்துள்ளது.
    • சென்னையில் இதேபோல் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

    பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கடன் மோசடி வழக்கில் டெல்லி பொளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.5 கோடி பணத்தை படத் தயாரிப்பு மற்றும் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீனிவாசன் 2018 முதல் தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறை கைது செய்துள்ளது.

    ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில் போலீசார் சற்றி வளைத்துள்ளனர்.

    சென்னையில் இதேபோல் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் தொகையில் பட்டியலின மக்கள் 16 சதவீதமும், பழங்குடியின மக்கள் 22 சதவீதமும் உள்ளனர்.
    • பெண்களுக்கு எதிராக மொத்தம் 7,418 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களில் தினமும் 7 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆரிப் மசூத் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் குறித்த கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் பட்டியலின மக்கள் 16 சதவீதமும், பழங்குடியின மக்கள் 22 சதவீதமும் உள்ளனர்.

    கடந்த 2022 மற்றும் 2024-ம் ஆண்டுக்கு இடையில், பட்டியல் இன மற்றும் பழங்குடி இன சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக மொத்தம் 7,418 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சமூகங்களை சேர்ந்த 558 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 338 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

    மேலும் 1,906 எஸ்.சி. மற்றும் பழங்குடியின பெண்கள் வீட்டு வன்முறையை எதிர்கொள்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த பெண்களுக்கு எதிராக 44,978 குற்றங்கள் பதிவாகியுள்ளது. அதவாது ஒரு நாளைக்கு சராசரியாக 7 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியை கவினின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை.
    • இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

    கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகளை வாங்கி குவித்தனர்.
    • வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடுகளும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு வருகின்ற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது.

    இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தையில் சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தை விட கூடுதலாக ஆடுகளை வாங்கி குவித்தனர்.

    இதில் வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடுகளும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

    கடந்த வாரம் சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆன நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான்.
    • 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு மையத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்த விபரங்களை புத்தகங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உரிய விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் இது தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தி உள்ளோம்.

    தமிழகத்தில் இதுவரை நடந்த 39 அகழாய்வு பணிகளில் 33 அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடத்தப்பட் டது. கீழடி அகழாய்வு என்பது மிக முக்கியமானதாகும். இங்கு கண்டறியப்பட்ட பொருட்கள் புளோரிடா கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது கீழடி விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர். அது யார் என எல்லோருக்கும் தெரியும்.

    கீழடி குறித்த தொன்மையை ஆய்வகத்தில் கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும், முயற்சி செய்திருக்க வேண்டும். கீழடி தொடர்பாக மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது, அதற்கு தி.மு.க. அரசு என்ன விளக்கம் அளித்தது என தெரியவில்லை. இதைப் பற்றி தெரியாமல் பதிலளிக்க முடியாது.

    தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான். ஆனாலும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம்.

    இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 196 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. முதல்வர்கள் இருந்தால் தான் கல்லூரி பேராசிரியர்கள் கட்டுப்பாடோடு இயங்குவார்கள். ஆனால் நிறைய கல்லூரிகளில் பேராசிரியர்களும் இல்லை. எப்படி தரமான கல்வி கிடைக்கும்.

    ஒவ்வொரு கல்லூரிக்கும் தேவையான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்கள் 5.50 லட்சம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 50 ஆயிரம் பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

    ஆனால் இந்த அரசு அறிவித்த எதையும் செய்யவில்லை. காலி பணியிடங்கள் இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். மருத்துவத் துறை, கல்லூரிகளில் காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ளது. இப்படி தமிழகத்தில் எல்லா துறையும் பின்னடைவாக உள்ளது. இதற்கு காரணம் தி.மு.க. அரசு முறையாக செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கீழடி அருங்காட்சியகத்தை எடப்பாடி பழனிச்சாமி சுற்றி பார்த்தபோது அங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் லேப்டாப் கொடுப்பதை இந்த அரசு நிறுத்திவிட்டது. எங்களுக்கு ஆட்சி மாற்றம் வேண்டும். உங்கள் ஆட்சியில் லேப்டாப் கொடுக்கப்படும் என உறுதி அளித்தால் உங்களுக்கு வாக்களிப்போம் என கூறினார்.

    அதற்கு எடப்பாடி பழனிச்சாமி லேப்டாப் கொடுத்தால் தான் வாக்களிப்போம் என கூறாதீர்கள். வாக்களிப்பது அனைவரின் கடமை. லேப்டாப் திட்டம் அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார். 

    • நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
    • தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி அ.ம.மு.க. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

    கூட்டத்திற்கு முன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    மோடி பிரதமராக வேண்டும் என 2024 ல் உருவாக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி அதில் நாங்கள், ஓ.பன்னீர் செல்வம் இணைந்தோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்த பின்பு அ.ம.மு.க. இருப்பிற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட்டுள்ளது. தி.மு.க.விற்கு தான் ஆபத்து வந்துள்ளது. எங்களின் ஒரே குறிக்கோள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான்.

    அமித்ஷாவின் அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

    அ.தி.மு.க. தலைமைக்கும் எங்களுக்கு எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.

    அமித் ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என வார்த்தைகள் விடாமல் நாங்கள் நாகரிகமான முறையில் கூட்டணி பலப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து அமித் ஷா என்ன பதில் கூறினாரோ அது தான் என் பதிலும்.

    தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.

    டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும். அந்த நேரத்தில் நானே கூட்டணி குறித்து பதில் அளிக்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி மீது கடுமையான கோபம் மக்களிடம் இருப்பதால் பயந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    • சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது.

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீடடில் வைத்து குழந்தை பெற்றார். அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானதை தொடர்ந்து கண்ணங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற விவகாரம் வெளியே தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தனக்கு தெரியாது என்று தாய் கூறினார். மாணவியிடம் விசாரித்தபோது கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கூறவில்லை.

    இருந்தபோதிலும் மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தையே காரணம் என்பது தெரியவந்தது. 48 வயதான அவர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    அவரை உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பி வருமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர் வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் மங்களூருக்கு வந்தார். அங்கிருந்து தனது ஊருக்கு ரெயிலில் வந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

    மாணவி பெற்றெடுத்த குழந்தைக்கு அவர்தான் காரணம் என்பதை உறுதி செய்ய மாணவியின் தந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது. குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பத்துக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×