என் மலர்
இந்தியா
- காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றார் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்.
- இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது என தெரிவித்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, இன்று தனது எக்ஸ் தளத்தில், இஸ்ரேலிய அரசு இனப்படுகொலை செய்துவருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள்.நூற்றுக்கணக்கானோரை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது. இதில் பலர் குழந்தைகள். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவை டேக் செய்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், வெட்கக்கேடானது உங்கள் வஞ்சகம். இஸ்ரேல் 25,000 ஹமாஸ் பயங்கரவாதிகளையே கொன்றது. பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது ஹமாசின் கொடூரமான தந்திரங்கள். வெளியேற அல்லது உதவி பெற முயற்சிக்கும் மக்களைச் சுடுவது, அவர்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது ஆகியவை காரணமாகவே பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
காசாவுக்கு 20 லட்சம் டன் உணவை இஸ்ரேல் வழங்கியது. அவற்றைக் கைப்பற்ற ஹமாஸ் முயல்வதன் மூலம் பட்டினியை உருவாக்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் காசாவின் மக்கள் தொகை 450 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு இனப்படுகொலை இல்லை என தெரிவித்தார்.
இதேபோல், அல்ஜசீரா தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதற்கும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீமான் மீதான வருண் குமார் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.
- சீமான் மனு மீதான இறுதி விசாரணை வருகிற 20ஆம் தேதி நடைபெறும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கிற்கு தடைகோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சீமானுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.
இந்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்துள்ளது. மேலும், வழக்கின் இறுதி விசாரணை வரும் 20ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.
- கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளைத் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
- நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பெருமை.
* ஏகாதிபத்திய சதியை முறியடிக்க வேண்டிய தேவை தற்போது உருவாகியுள்ளது.
* அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை மீறி கியூபாவில் ஆட்சி நடத்தினார் ஃபிடல் காஸ்ட்ரோ.
* இந்தியா மீது 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருப்பதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
* இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் பதில் கூறவில்லை.
* அடிமைத் தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா?. இங்கு யாருக்கும் யாரும் அடிமையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தீக்கதிர் படிக்கும் பழக்கம் இருக்காது. நான் தினந்தோறும் தீக்கதிர் படிக்கிறேன்.
* கூட்டணியில் இருப்பதால் தவறுகளை கம்யூனிஸ்டுகள் சுட்டுகாட்டாமலும் இல்லை. இதை நான் ஏற்க மறுப்பதும் இல்லை.
* கம்யூனிஸ்டுகள் என்னில் பாதி, ஏனெனில் என்னுடைய பெயரே ஸ்டாலின்.
* எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது.
* நமக்குள் இருப்பது தேர்தலுக்கான நட்பு அல்ல. கொள்கை நட்பு.
இவ்வாறு முலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
- அங்கிருந்த ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
- நிதானத்தை இழந்த ஜெயா பச்சன் அவரை தள்ளிவிட்டார்.
புதுடெல்லி:
மூத்த நடிகையும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான ஜெயா பச்சன் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்புக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
இதைக் கண்டதும் தனது நிதானத்தை இழந்த ஜெயா பச்சன் அவரை தள்ளிவிட்டுள்ளார். செல்ஃபி எடுப்பது தொடர்பாக சத்தம் போட்டுள்ளார்.
ஜெயா பச்சன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இணையத்தில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், அவரது செய்கையை பலரும் எதிர்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- டெல்லி தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
- தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது என்பது கொடூரமான, குறுகிய பார்வை கொண்ட, இரக்கமற்ற செயல் என ராகுல் காந்தி கருத்து.
டெல்லி தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவானது, இரக்கமற்றதும் குறுகிய பார்வை கொண்டதுமாகும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாய்கூட தெருக்களில் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது மனிதாபிமான மற்றும் அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கைகளிலிருந்து பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கையாகும். இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய சிக்கல் அல்ல; தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது என்பது கொடூரமான, குறுகிய பார்வை கொண்ட, இரக்கமற்ற செயலாகும்.
அவற்றுக்கு உரிய தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூகப் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலமே தெருக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் ஒருசேரக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மகாராஸ்டிர மாநில பாஜக தலைவர் ராஜ் புரோகித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ் புரோஹித் கூறுகையில் "தேசிய பிரச்சினைகளை திசைப் திருப்புவதற்காக ராகுல் காந்தி நீதிமன்ற உத்தரவு மீது கவனம் செலுத்துகிறார். ராகுல் காந்தி நேர்மையற்ற அரசியல்வாதி போன்று சுற்றி வருகிறார். அதற்கு பதிலாக அவர் விவசாயிகள் நலன் மற்றும் வறுமை போன்ற முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தானின் (அணு ஆயுத தாக்குதல்) அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்திருக்க வேண்டும். டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம் நடத்தியது பாசாங்குத்தனம். தேசத்திற்கு எதிரானது. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
- தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளது.
- யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது
யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது
இந்நிலையில், தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க உதவும் AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட கேமராக்கள் கொண்ட நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் பயன்பாடு தொடங்கிய நவம்பர் 2023-ம் ஆண்டு முதல் ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம்.
- ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் .
ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
திருப்பதி அலிபிரி மாலைப்பாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2022ஆம் ஆண்டு Fasttag முறையை அறிமுகம் செய்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பாதுகாப்பை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வெளிப்படையான கட்டண வசூலை உறுதி செய்யவும் Fastag-ஐ கட்டாயமாக்கியுள்ளது.
- நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது.
பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்டியதற்கும், அதில் அவர் தலைவராக நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் எதிராக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்காமல் அன்புமணி பொதுக்குழுவை நடத்தியுள்ளார். அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம். நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது. அன்புமணி மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
- டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது.
- ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது.
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் சுமார் 20 லட்சம் மடிக்கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விலைகளை கோர ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.
அதன்படி பல நிறுவனங்கள் தங்களது விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இதில் டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
2025-26 தமிழக பட்ஜெட்டில் கல்லூரி மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிப்பட்டது. முதற்கட்டாக 10 லட்சம் மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரவு அறிவித்தார்.
- துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது.
- துப்புரவு பணியாளர்களுக்கு உள்ள பிரச்சனை நாடு முழுவதும் உள்ள பிரச்சனை.
திருச்சி:
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்பெல்லாம் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. கலைஞர் ஆட்சி காலத்தில் அது சரி செய்யப்பட்டது. தற்பொழுது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.
இது மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. இந்த திட்டத்திற்காக 1128 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 88 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுத்து வருகிறார். வட மாநில தொழிலாளர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது தகவல் தவறானது.
துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை. அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். நிச்சயம் அது பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும்.
நான் அவர்களை சென்று சந்திக்கவில்லை எனக் கூறுவது தவறு. ஏற்கனவே 4 முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். அ.தி.மு.க. ஆட்சியில் 17 ஆயிரம் பேரை துப்புரவு பணியாளர்களாக நிரந்தர பணியில் அமர்த்தினோம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறினார். ஆனால் அவர்கள் யாரும் துப்புரவு பணிக்கு செல்லவில்லை
துப்புரவு பணியாளர்களுக்கு உள்ள பிரச்சனை நாடு முழுவதும் உள்ள பிரச்சனை. இதில் முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார். துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தூய்மை பணி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஏற்கனவே பணியில் உள்ளவர்களை தான் பயன்படுத்தி வருகிறோம்
புதிதாக யாரையும் புதிதாக பணியில் எடுக்கவில்லை. தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவு அருமையான உத்தரவு. அந்த உத்தரவு நகல் வந்த உடன் அதனை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவோம். மிகப்பெரிய பிரச்சனையான தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.
நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறோம். அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாமல் அறிவிக்காத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் வருவதால் எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை கூறி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது அதில் ஒரு தீர்வு ஏற்பட்டவுடன் இன்று அல்லது நாளைக்குள் தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றார்.
- கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கோவை:
கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னியம்பாளையம் ரோடு, அறிவொளிநகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதிநகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.






