என் மலர்
இந்தியா

"Stray" அரசியல்வாதிபோல் சுற்றித்திரிகிறார் ராகுல் காந்தி: பாஜக தலைவர் கடும் தாக்கு
- டெல்லி தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
- தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது என்பது கொடூரமான, குறுகிய பார்வை கொண்ட, இரக்கமற்ற செயல் என ராகுல் காந்தி கருத்து.
டெல்லி தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவானது, இரக்கமற்றதும் குறுகிய பார்வை கொண்டதுமாகும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாய்கூட தெருக்களில் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது மனிதாபிமான மற்றும் அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கைகளிலிருந்து பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கையாகும். இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய சிக்கல் அல்ல; தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது என்பது கொடூரமான, குறுகிய பார்வை கொண்ட, இரக்கமற்ற செயலாகும்.
அவற்றுக்கு உரிய தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூகப் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலமே தெருக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் ஒருசேரக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மகாராஸ்டிர மாநில பாஜக தலைவர் ராஜ் புரோகித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ் புரோஹித் கூறுகையில் "தேசிய பிரச்சினைகளை திசைப் திருப்புவதற்காக ராகுல் காந்தி நீதிமன்ற உத்தரவு மீது கவனம் செலுத்துகிறார். ராகுல் காந்தி நேர்மையற்ற அரசியல்வாதி போன்று சுற்றி வருகிறார். அதற்கு பதிலாக அவர் விவசாயிகள் நலன் மற்றும் வறுமை போன்ற முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தானின் (அணு ஆயுத தாக்குதல்) அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்திருக்க வேண்டும். டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம் நடத்தியது பாசாங்குத்தனம். தேசத்திற்கு எதிரானது. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.






