என் மலர்tooltip icon

    இந்தியா

    • பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது.
    • வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. அதுபோல பணம் கிடைத்தவுடன், பொதுநல வழக்கு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 4 ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையிலே வைக்கப்பட்டிருக்கிறது.

    பொதுநல வழக்கை சிலரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போது தான் நோட்டீசே அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுநல வழக்கு என தொடர்ந்து ஆதாயம் பெற்றவுடன் திரும்ப பெரும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். ஆகவே பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, மனுதாரர் 9-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    • எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
    • எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.

    தென்காசி:

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.

    மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.

    எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

    • உண்மையில் தி.மு.க. அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை.
    • தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை 5-ம் முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நெய்யின் விலையை அரை கிலோ வுக்கு ரூ.20, கிலோவுக்கு ரூ.40, 5 கிலோவுக்கு ரூ.350, 15 கிலோவுக்கு ரூ.1155 வீதம் நேற்று முதல் உயர்த்தியுள்ளது. அதேபோல், ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் முதல் நெய், பன்னீர் ஆகிய பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடி இப்போது திரும்பப் பெறப்பட்டிருப்பதன் மூலம் தான் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அப்பட்டமான நாடகம். இந்த ஏமாற்று வேலையை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    உண்மையில் தி.மு.க. அரசு ஆவின் நெய்யுக்கும், பன்னீருக்கும் தள்ளுபடி வழங்கவும் இல்லை; அதை திரும்பப் பெறவும் இல்லை. மாறாக, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை செயல்படுத்தாமல் இருப்பதற்காக செப்டம்பர் 22-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை நடத்தி வந்த ஏமாற்று நாடகத்தை இப்போது தி.மு.க. அரசு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

    நெய்யுக்கும், பன்னீருக்கும் வழங்கி வந்த தள்ளுபடியை தி.மு.க. அரசு திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு முன் நெய், பன்னீர் ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டனவோ, அதே விலை மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தி.மு.க. அரசுக்கு மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை. அதனால் தான் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டண உயர்வு, 175 சதவீதம் வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, வாகன வரி உயர்வு, நிலங்களின் வழிகாட்டி மதிப்பு மறைமுகமாக உயர்வு என அடுக்கடுக்காக மக்கள் மீது சுமைகளை சுமத்தியது. அவற்றின் தொடர்ச்சியாக இப்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் நெய் விலையை தி.மு.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து தி.மு.க. தப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டம் அமளியுடன் தொடங்கியது.
    • எம்.பி.க்களை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று (டிசம்பர் 1) தொடங்கியது. நேற்று எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இன்று காலை பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் SIR பணிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டம் அமளியுடன் தொடங்கியது. அப்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தல். எம்.பி.க்களை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

    SIR குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் 12 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை ஆகிய 2 அவைகளிலும் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது.
    • உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நெல், வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை தனியார் உப்பளத்தினர் ஆக்கிரமித்ததோடு, தங்களது தேவைக்கு ஏற்ப தண்ணீர் செல்லும் வழியை மறித்து பாலங்கள் அமைத்துள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனால் மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக மேல்மாந்தை பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் உப்பள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என பலமுறை அப்பகுதி விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், தற்போது வரை உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

    மேலும், இப்பகுதியில் 2 நாட்கள் பெய்த இந்த தொடர் மழைக்கே நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணத்தால், விவசாயப் பயிர்கள் பெருமளவில் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.

    ஆனால் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உப்பள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    மேலும், விவசாயிகள், எஞ்சியுள்ள பயிர்களையாவது பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத மழைக்குள்ளாகவே இங்குள்ள உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

    • நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.
    • இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    215 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மழை பாதிப்பால் இதுவரையில் முகாம்களில் யாரும் தங்க வைக்கப்படவில்லை. உணவு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.

    நேற்றிரவு ஒரு லட்சத்து 54 ஆயிரம் பாக்கெட் இரவு உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.

    மாநகராட்சி சமையல் கூடங்களில் சுகாதாரமாக உணவு தயாரிக்கப்பட்டு சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 5 லட்சத்து 1,600 உணவு பொட்டலங்கள் இதுவரையில் வழங்கப்பட்டன.

    • சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
    • கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை எழிலகத்தில உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

    * ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம்.

    * நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

    * பயிர்சேத விவரங்களை உடனடியாக கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    * கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    * தற்போதைய மழையில் 85 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    * கனமழையால் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * நீர்நிலைகள் தூர்வாராதது தொடர்பாக இ.பி.எஸ். அரசியலுக்காக பேசுகிறார்.

    * நாளை காலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    * சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. குழுவிற்கு 30 பேர் என 330 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முருங்கைக்காயின் விலை ஒரு மாதத்தில் 10 மடங்கு உயர்ந்துள்ளது.
    • கனமழை பெய்ததால் காய்கறிகளின் விலையும் கேரளாவில் அதிகமாகியிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில மக்களின் உணவில் தவிர்க்க முடியாத ஒன்று முருங்கைக்காய். சாம்பார், அவியல் மட்டுமின்றி பல்வேறு வகை உணவு வகைகளில் முருங்கைக்காயை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் முருங்கைக்காயின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை இருந்த ஒரு கிலோ முருங்கைக்காய், தற்போது 600 ரூபாயாக அதிகரித்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனின் போது தென்மாநிலங்களில் முருங்கைக்காயின் தேவை அதிகரிக்கும்.

    அதன் காரணமாக விலையும் உயருவது வழக்கமானதாகும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.500 வரை உயர்ந்தது. ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகி இருக்கிறது.

    கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் முருங்கைக்காயின் விலை ஒரு மாதத்தில் 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய், தற்போது ரூ.380-க்கு விற்கப்படுகிறது. நாட்டு வகை முருங்கைக்காய் ரூ.420 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    விலை அதிகமாக இருப்பதால் சிறிய கடைகளில் முருங்கைக்காயை காண முடியவில்லை. பெரிய கடைகளில் கூட சில அளவு கிலோ முருங்கைக்காய்களே இருக்கின்றன. ஆனால் அதனை வாங்குவதற்கும் ஆள் இல்லை. இந்த விலை உயர்வு காரணமாக கேரள மாநிலத்தில் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் முருங்கைக்காய் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை சமைப்பது குறைந்துவிட்டது.

    கேரளா மாநிலத்துக்கு பெரும்பாலான காய்கறிகள் தமிழ்நாட்டின் தென்காசி, மேட்டுப்பாளையம், கம்பம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது அந்த இடங்களில் கனமழை பெய்ததால் காய்கறிகளின் விலையும் கேரளாவில் அதிகமாகியிருக்கிறது.

    • பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.
    • ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி கி.வீரமணி அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு #DravidianModel நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ. மழை பெய்துள்ளது.
    • பேசின்பாலம், மணலி புதுநகரில் தலா 20 செ.மீ., நுங்கம்பாக்கம் 17. செ.மீ. என அதிகனமழை பெய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 13 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ்அவுஸ் 23 செ.மீ., பேசின்பாலம், மணலி புதுநகரில் தலா 20 செ.மீ., நுங்கம்பாக்கம் 17. செ.மீ. என அதிகனமழை பெய்துள்ளது.

    தமிழகத்தல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் எண்ணூரில் 26 செ.மீ. மழை பெய்து உள்ளது.

    பாரிமுனை-25 செ.மீ., ஐஸ்அவுஸ்-22, மணலிபுதூர், பொன்னேரி தலா 21 செ.மீ., பேசின்பாலம், சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர் தலா 20 செ.மீ., மணலி, செங்குன்றம் தலா 19 செ.மீ., விம்கோ நகர், வடபழனி, டி.ஜி.பி. ஆபிஸ், மேடவாக்கம் தலா 18 செ.மீ., அயனாவரம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கத்திவாக்கம் தலா 17 செ.மீ.,

    புழல், சாலிகிராமம், சைதாப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம் தலா 16 செ.மீ., பெரம்பூர், அமைந்தகரை தலா 15 செ.மீ., எம்.ஜி.ஆர். நகர், சோழவரம், நாராயணபுரம், அடையார் தலா 14 செ.மீ., காசிமேடு, வேளச்சேரி, அண்ணா பல்கலைக்கழகம் தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும்.
    • கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

    பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இரு தரப்பில் இருந்தும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்தனர். பல கடிதங்கள் அளிக்கப்பட்டன.

    இதையடுத்து, பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 1-ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அன்புமணி ராமதாசின் பதவிக்காலம் கடந்த 28-5-2025 அன்று காலாவதியாகிவிட்டது என்றும், புதிய தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 30-5-2025 முதல் ராமதாஸ் கட்சியின் புதிய தலைவராக இருப்பதாகவும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் தேர்தல் கமிஷன் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் 1-8-2026 வரை செல்லுபடியாகும். மேலும் அன்புமணி ராமதாசே கட்சியின் தலைவராக உள்ளார்.

    ராமதாஸ் கட்சியின் தலைவராக இருப்பதாகக் கூறினால், கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான விஷயத்தைத் தீர்க்க பொருத்தமான கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் இருந்து கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

    இந்நிலையில், பா.ம.க.வை மீட்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குழு அமைத்துள்ளார். குழுவில் ஜி.கே.மணி, சதாசிவம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    அன்புமணியிடம் இருந்து பா.ம.க.வை மீட்க ராமதாஸ் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
    • 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை தொடரும்.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

    இந்நிலையில் 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×