என் மலர்tooltip icon

    இந்தியா

    • மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
    • வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன

    இந்நிலையில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே மலைகள் உள்ளது.
    • சபாநாயகர் அப்பாவு, "இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்" என கூறினார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசும்போது, "நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே மலைகள் உள்ளது. எனவே இங்கு சுரங்க பாதைகள் அமைத்து இரு அணைகளையும் ஒன்றாக ஆக்கினால் நெல்லை மாவட்ட மக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும்" என கோரிக்கை விடுத்தார்.

    அவருக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்" என கூறினார்.

    உடனே நயினார் நாகேந்திரன் அதற்கு "நான் அனுமதி வாங்கி தருகிறேன்" என்று தெரிவித்தார்.

    • சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகள் இணைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் கனமழைக்கு வாயப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மதிய வேளையில் வெயின் தாக்கம் 35 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாகக் கூடும்

    தமிழகத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். 

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையிலேயே செங்கோட்டையன் இருப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது சபாநாயர் அறையில் இருப்பதை தவிர்க்க 9.25 மணிக்கு சபைக்கு வருகிறார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இதனிடையே, சட்டமன்றத்தில் செங்கோட்டையனிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டெல்லி பயணம் தொடர்பாக கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏன் டெல்லி சென்றீர்கள் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கேட்டதாகவும் அதற்கு செங்கோட்டையன் பதில் எதுவும் கூறாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    தொடக்கத்தில் சபாநாயகர் அறையில் செங்கோட்டையன் அமர்ந்தது சர்ச்சையான நிலையில் தற்போது சபாநாயர் அறையில் இருப்பதை தவிர்க்க 9.25 மணிக்கு சபைக்கு வருகிறார். மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையிலேயே செங்கோட்டையன் இருப்பதாக கூறப்படுகிறது.

    • பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.
    • கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற எட்டையபுரம் சந்தைக்கு அடுத்து பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் விற்பனை நடந்து வருகிறது.

    இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படும். அதனை வாங்க அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள்.

    இதனால் இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்த சந்தையில் கூடுதலாக விற்பனை நடக்கும்.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். தற்போது பங்குனி உத்திரம் வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு, கிடாய் உள்ளிட்டவற்றை பலியிடுவார்கள். இந்த திருவிழா நெருங்கி வருவதால், இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

    இதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தரத்துக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலானோர் கிடாய்களை தான் கோவில்களில் நேர்த்திக்கடனாக பலியிடுவார்கள் என்பதால் இன்று கிடாய்களுக்கு மவுசு ஏற்பட்டது.

    அதே நேரம் இளம் ஆடுகளின் கறி சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும் என்பதால் குட்டி ஆடுகளையும் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.

    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை.
    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்திய மூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுடன் திருத்தணி இணைந்த நாள் இன்று. அதற்காக போராடிய தியாகிகளை நினைவுகூர்ந்து புகழ் அஞ்சலி செலுத்துகிறோம் .

    வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்கிறார். அவரது வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏன் இந்த போராட்டம் என்று கேட்கிறார்கள்.

    அடுத்த தலைமுறையை நல்ல முறையில் உருவாக்கும் கல்வித்துறையை சீரழித்து வருவதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 52 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழி கொள்கைகள் தான் உள்ளன. இப்போது தேர்தல் வரும்போது மும்மொழி திட்டத்தை கொண்டு வருவது ஏன்?

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வரவேண்டிய நிதி மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தும் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. இவற்றை கண்டித்து தான் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிதானமாகவும், பொறுமையாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும். யாரோ வாய்க்கு வந்தபடி கூறியதை கேட்டு அள்ளித் தெளிக்க கூடாது. டிக்கி நிறுவனம் என்பது இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் கழிவுகளை அகற்றி விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளை தேர்வு செய்து அவர்களை தொழில்முனைவோர் ஆக்கியுள்ளனர். இதில் பணியாற்றும் ஒருவர் எனது உறவினர். அவ்வளவுதான் மற்றபடி எனக்கும் இந்தத் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? மேலும் சொல்லப் போனால் உங்கள் பிரதமர் மோடியே இந்த திட்டத்தை பாராட்டி இருக்கிறார். அவர் பாராட்டிய திட்டத்தை அண்ணாமலை தவறு நடந்திருப்பதாக குறை கூறுகிறார்.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பா.ஜ.க. ஆளாத மாநிலங்கள் அனைத்திற்கும் இதுதான் நிலைமை. அதே போலதான் இந்த திட்டத்திலும் தவறு நடப்பதாக கூறுகிறார். உங்களிடம் விசாரணை அமைப்புகள் உள்ளன.

    அதன் மூலம் உண்மையை அறிந்து பேச வேண்டும்.எதையும் அரைகுறையாக பேசக்கூடாது. இந்தத் திட்டத்தில் பல மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டது என தேர்வு செய்து மத்திய மோடி அரசு விருது வழங்கி இருக்கிறது. அப்படியானால் தவறாக இந்த விருதுகள் கொடுக்கப்பட்டதாக அண்ணாமலை சொல்கிறாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, இதயத்துல்லா, தளபதி பாஸ்கர் மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
    • 2023-ம் ஆண்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று சென்னை திரு.வி.க. நகர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. தாயகம் ரவி பேசும் போது, நகர்ப்புறநலவாழ்வு மையம் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இவற்றில் 2023-ம் ஆண்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 208 மையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்புரான் திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது.
    • திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

    கூடலூர்:

    மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது. குறிப்பாக குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் வைக்கப்பட்டதால் வலதுசாரி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் எனவும் தெரிவித்தனர்.

    அதன்பின் சர்ச்சைக்குரிய 17 காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இருந்தபோதும் இந்த படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளது என்றும், அதனை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் எம்புரான் படம் திரையிட்ட தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,

    இந்த திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் அறிக்கை வெளியிட்டு படக்குழுவினரிடம் அதனை நீக்க வலியுறுத்தினோம். இதுவரை நீக்கப்படவில்லை. ஆனால் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக 17 காட்சிகளை நீக்கி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர் .அப்படியானால் தமிழக விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பு இல்லையா? தமிழினத்திற்கு எதிரான கருத்துகளை உமிழும் வகையில் திரைப்படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு இந்த திரைப்படத்தை தணிக்கை செய்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • எம்.எல்.ஏ.க்கள் கூறும் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    • சாத்தியப்படும் பணிகள் அனைத்தையும் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக்கொண்டு தான் இருக்கிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திண்டுக்கல் சீனிவாசன் உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் பயன்பெற்று உள்ளனர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் 57 எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

    கட்சி பாகுபாடு இன்றி அந்த திட்டம் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு நிதி அதிகமாகும் என்ற காரணத்தை கூறி திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறார்கள். 10 திட்டங்களை வைத்தால் 2 திட்டங்கள் தான் எடுத்துக் கொள்கிறார்கள். நானும் எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன். அதில் 2 பணிகளை மட்டும் எடுத்து உள்ளனர். மற்றவற்றை சாத்தியம் இல்லை என கூறி நிராகரித்து உள்ளனர். எனவே எம்.எல்.ஏ.க்கள் கூறும் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு நானே இந்த திட்டத்தை ஆய்வு செய்து அறிவுரைகள் கூறி வருகிறேன். உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் எந்த கோரிக்கையும் வைக்காத எம்.எல்.ஏ.க்களிடம் திட்டங்களை கேட்டு பெற்று செயல்படுத்தி வருகிறோம்.

    உதாரணத்திற்கு அ.தி.மு.க. உறுப்பினர் விஜயபாஸ்கர் அந்த திட்டத்தில் எதுவும் கேட்கவில்லை. ஆனால் என்ன தேவைகள் உள்ளது என்று நாங்களாகவே கேட்டு உள்ளோம். இப்படி சாத்தியப்படும் பணிகள் அனைத்தையும் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக்கொண்டு தான் இருக்கிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், அதனை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்ப பெறுமாறு ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நேரில் சென்றும் அது பற்றி வலியுறுத்த உள்ளோம். காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம். ஆனால் மத்திய அரசு சார்பில் காலாவதியான சுங்கச்சாவடிகள் இருக்கும் சாலைகளில் சிறிய மேம்பாலங்கள், சாலை மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால் அவைகளை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாகவே காலாவதியான சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.

    சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தும் போது காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவும் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.
    • உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள சலூரு மண்டலம் மர்ரி வாணி வலசா கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 20).

    இவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அங்குள்ள தத்தி வலசை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவர் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் திருமணமானதை மறைத்து ஐஸ்வர்யாவை காதலிப்பதாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். ராம் பாபுவை முழுமையாக நம்பிய ஐஸ்வர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

    தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் ராம்பாபுவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த 27-ந் தேதி இருவரும் விசாகப்பட்டினம் சென்றனர். அரிலோவா என்ற இடத்தில் இருவரும் சந்தித்து பேசினர்.

    அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஸ்வர்யா கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்பாபு ஐஸ்வர்யாவின் கழுத்தை கயிறால் இறுக்கினார். இதில் ஐஸ்வர்யா துடிதுடித்து இறந்தார்.

    போலீசில் சிக்காமல் இருக்க ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆட ராம்பாபு முடிவு செய்தார்.

    இதுகுறித்து அவருடைய நண்பர் ஒருவரை வரவழைத்தார். ஒரு பைக்கில் உடலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஐஸ்வர்யாவின் உடலை துணியால் போர்த்தி நடுவில் தூக்கி வைத்துக் கொண்டு பைக்கில் சென்றனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்பதால் கிராமப் பகுதியில் வழியாக அவர்கள் நள்ளிரவில் இளம்பெண் பிணத்துடன் சென்று கொண்டிருந்தனர்.

    நடுவழியில் பைக்கில் பெட்ரோல் தீர்ந்து நின்றது. இதனையடுத்து அவர்கள் மற்றொரு நண்பர் மூலம் பெட்ரோல் கொண்டு வந்து நிரப்பினர்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண் உடலை 105 கிலோமீட்டர் கொண்டு சென்றனர். ஒரு முந்திரி தோட்டத்தில் ஐஸ்வர்யாவை தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டனர்.

    அந்தப் பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர. இதில் ஐஸ்வர்யா ராம்பாபுவை காதலித்தது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் ஐஸ்வர்யாவை கொலை செய்து பைக்கில் கொண்டு வந்து தூக்கில் தொங்க விட்டதாக ராம்பாபு தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் 10 கோரிக்கைகளை வழங்க வேண்டும்.
    • மதுரையில் நூலகம் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில், இன்று கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் நூலகங்கள் பற்றிப் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

    அன்பழகன் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கிற நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது என்ற கருத்தினை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதிலே குறிப்பாக, பொதுப் பணித்துறை சார்ந்த நான்கு ஆண்டு சாதனைகள் தொடர்பான புத்தகத்தில், ஏற்கெனவே இந்த அவையில் அறிவிக்கப்பட்டவாறு, திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்திற்கு தலைவர் கலைஞரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.

    நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரையில், தலைவர் கலைஞரின் திருக்கரங்களால் கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்திற்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமானப் பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்பதை எல்லோரும் அறிவர். இதுவரை சுமார் 16 லட்சம் பொதுமக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து, அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று என்னால் அறிவிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

    அதேபோன்று, திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்திற்கு கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன.

    கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

    எனவே, தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×