என் மலர்tooltip icon

    இந்தியா

    • எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
    • எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது.

    திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாறு அணையை பற்றி இடம்பெற்றுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, ஆங்கிலேய அரசுக்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் மன்னர், 999 வருடங்களுக்கு இலவயமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்கார்கள் போய்விட்டனர். மன்னராட்சியும் போய் விட்டது; ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது என்று ஒரு வசனம்.

    இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம்.

    அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால்தான் சரி என்று ஒரு வசனம்.

    இப்படி வசனங்கள் இடம் பெற செய்து காட்சி அமைப்புகளை சித்தரித்து முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்று எம்புரான் திரைப்படத்தில் திட்டமிட்டு கருத்து திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில அக்கறை உள்ள சக்திகள் முயற்சித்து வருகின்றன.

    2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையிடப்பட்டது.

    கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோஹன் ராய் என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

    ஒரு அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. ஏற்கனவே முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை நிலவி வந்த சூழலில் இந்த படம் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தானது என்று சித்தரித்துக் காட்டியது.

    இது முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு மற்றும் கேரளத்தில் உள்ள செல்வந்தர்களால் செய்யப்படும் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் நான் அறிக்கை தந்தேன்.

    படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படவிருந்த சென்னை தனியார் திரையரங்கில் நுழைந்து படப்பெட்டிகளையும் எடுத்துச் சென்ற மல்லை சத்யா உள்ளிட்ட கழக கண்ணின் மணிகள் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் மீண்டும் எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் எம்புரான் திரைப்படம் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.

    • கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன்.
    • அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல என தெரிவித்தார்.

    லக்னோ:

    சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது, விரைவில் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் என தகவல் வெளியானது.

    இதற்கிடையே, பிரதமர் மோடிக்குப் பிறகு அமித்ஷா அல்லது உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இருவரில் ஒருவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளனர் என செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் இப்போது மாநில முதல் மந்திரியாக இருக்கிறேன். இதுவும்கூட கட்சி தான் என்னை உத்தரப் பிரதேச மக்களுக்காக இந்த பொறுப்பை வழங்கியுள்ளது.

    அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல. நான் ஒருபோதும் என்னை முழு நேர அரசியல்வாதியாகக் கருதியது இல்லை. கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன். ஆனால் உண்மையில் நான் ஒரு யோகி. இங்கு இருக்கும் வரை இந்த வேலையை செய்வேன். ஆனால் இந்த வேலையும் ஒரு கட்டத்தில் முடிந்துவிடும்.


    நான் முதல் மந்திரியாக இருக்கவே கட்சி தான் காரணம். தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் நான் இங்கே தொடர்ந்து முதல் மந்திரியாக இருக்கமுடியுமா?

    தேர்தலில் யாரைக் களமிறக்கலாம் என்பதைக் கட்சியின் பாராளுமன்ற குழு தான் முடிவு செய்யும். எல்லா விவாதமும் அங்கு தான் நடக்கும்.

    பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். எனவே சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லக் கூடாது. ஆனால், வேண்டும் என்றே இதுபோல பேசுபவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார்.

    • மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5460.90 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
    • தமிழகத்தில் 157.68 ச.கி.மீ., ஆந்திராவில் 133.18 ச.கி.மீ., குஜராத்தில் 130.08 ச.கி.மீ., கேரளாவில் 49.75 ச.கி.மீ. பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    மத்திய சுற்றுக்சூழல் அமைச்சகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வழங்கியுள்ள அறிக்கையில், நாட்டில் (மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்) 13 ஆயிரம் ச.கி.மீ. (13,05,668.1 ஹெக்டேர்) காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அளவு டெல்லி, சிக்கிம், கோவை மாநிலங்களின் ஒட்டுமொத்த அளவைவிட அதிகமாகும்

    அந்தமான், அசாம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, சண்டிகார், சத்தீஸ்கார், தாதர்&நகர் மற்றும் டாமன்&டையு, கேரளா, லட்சத்தீவு, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், சிக்கிம், மத்திய பிரதேசம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இதில் மார்ச் 2024 வரையிலான தரவுகளில், மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5460.90 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 3620.9 ச.கி.மீ. பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    கர்நாடகாவில் 863.08 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 575.54 ச.கி.மீ., அருணாச்சல பிரதேசத்தில் 534.9 ச.கி.மீ., ஒடிசாவில் 405.07 ச.கி.மீ., உத்தர பிரதேசத்தில் 264.97 ச.கி.மீ., மிசோரமில் 247.72 ச.கி.மீ., ஜார்க்கண்டில் 200.40 ச.கி.மீ., சத்தீஸ்கரில் 168.91 ச.கி.மீ. நிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் 157.68 ச.கி.மீ., ஆந்திராவில் 133.18 ச.கி.மீ., குஜராத்தில் 130.08 ச.கி.மீ., கேரளாவில் 49.75 ச.கி.மீ. நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    • பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன.
    • புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்

    புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புல்டோசர்கள் கொண்டு மக்கள் வசிக்கும் வீடுகளை இடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் முந்தைய காலங்களிலும் கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் உ.பி. அரசின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

     

    இந்நிலையில் பிரயாக்ராஜ் நகரில் வீடுகள் மேம்பாட்டு வாரியத்தால் இடுத்துத் தள்ளப்பட்டது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உச்சல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் வாரியம் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளுவது மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது. பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன.

    உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை இப்படி இடித்து தள்ளுவது ஏற்க முடியாதது. இத்தகைய செயல்பாடுகள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.  

    • ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    • பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.

    ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.03.2025 அன்று 3,45,862 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 9,81,849 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 9,492 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 280 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 39,65,992 பயணிகள் (Online QR 1,59,364; Paper QR 19,41,919; Static QR 2,89,959; Whatsapp - 5,84,041; Paytm 4,46,116; PhonePe – 3,60,001; ONDC – 1,84,592), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 42,52,456 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிதாக 4 சுற்றுலா மாளிகை கட்டப்படும்.
    • ஏற்காடு உள்பட 3 இடங்களில் புதிதாக 3 ஆய்வு மாளிகைகள் கட்டப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பேசியதாவது:

    முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் பொதுப்பணித் துறை சார்பில் 7 புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

    கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஓசூரில் புதியதாக 4 சுற்றுலா மாளிகைகள் ரூபாய் 21.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

    கடலூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 6 கோடி மதிப்பீட்டிலும், காஞ்சிபுரத்தில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டிலும், திருவள்ளூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 9.90 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும்.

    கல்வராயன் மலை, ஏற்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் புதியதாக 3 ஆய்வு மாளிகைகள் ரூபாய் 9.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 5 கோடி மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 2 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும் என தெரிவித்தார்.

    • விமான போக்குவரத்து அமைச்சம் பரந்தூர் விமான நிலைய பணிக்கு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
    • பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் புதிய விமான நிலையத்திற்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    சமீபத்தில் டெல்லியில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான பாதுகாப்பு ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும், கொள்கை அளவில் ஒப்புதலுக்காக விமானப் போக்கு வரத்து அமைச்சகத்திற்கு இந்தத் திட்டத்தைப் பரிந்துரைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கான முறையான அனுமதி அறிவிப்புக்கு முந்தைய முக்கிய கட்டமாக கூறப்படுகிறது. விமான போக்குவரத்து அமைச்சம் பரந்தூர் விமான நிலைய பணிக்கு அனுமதி அளித்ததும் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே பரந்தூர் விமான நிலையகட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால் அடுத்த ஆண்டு(2026) முதல்கட்ட கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

    • நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
    • ரூ.2 லட்சம் கடன் வாங்கிய ஒருவர் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்தி நகைக்கடனைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    மக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. ஏழை மக்கள், விவசாயிகள், சிறு தொழில் பிரிவுகளில் உள்ள சிறு வணிகர்கள் தங்கள் உடனடித் தேவைகளுக்கு நகைக் கடன்களை பெரிதும் நம்பியுள்ளனர்.

    அடகு கடைகளிலோ அல்லது கமிஷன் முகவரிடமோ நகையை அடமானம் வைத்தால், அவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறைந்த வட்டியில் கிடைப்பதாலும், பாதுகாப்புக் காரணமாகவும் இவர்கள் வங்கிகளில் இருந்து நகைக் கடன்களைப் பெறுகிறார்கள்.

    இருப்பினும், நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி, நகைக் கடன் காலத்தின் முடிவில், கடன் வாங்குபவர் வட்டியை மட்டுமே செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம்.

    ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைக் கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளைப் பெற்ற பின்பு, மறுநாள்தான் மீண்டும் மறு அடமானம் வைத்துதான் கடன் பெறமுடியும். இதன் காரணமாக, ஏழை மக்கள், விவசாயிகள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அது அவர்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

    வட்டி மட்டும் செலுத்தி நகைக் கடனை புதுப்பிக்கும் முறை ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உதாரணமாக, ரூ.2 லட்சம் கடன் வாங்கிய ஒருவர் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்தி நகைக்கடனைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

    ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் வழிகாட்டு முறைகளால் விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் தனியார், தனிநபர்கள், அடகு தரகர்கள் மற்றும் கமிஷன் முகவர்களிடமிருந்து கடன் வாங்கும் சூழ்நிலையை உருவாக்குவதோடு அவர்களுடைய வாழ்வாதாரத்தை சுரண்டுவதற்கும் வழி வகுத்துவிடும்.

    ரிசர்வ் வங்கி மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் சூழலை உருவாக்க விரும்புகிறது என்பதையும் அதன் காரணமாக இந்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இது "குழந்தையை குளியல் நீரோடு வீசுவது" போன்றதாகும். அதாவது தேவையில்லாத ஒன்றை நீக்குவதாக நினைத்து பயனுள்ள ஒன்றையும் அகற்றிவிடுகிறோம்.

    எனவே, நிதியமைச்சர் நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகள் பழைய நடைமுறைகள் தொடர உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

    • சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பது நடைமுறையில் உள்ளது.
    • தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பதிவுத்துறையின் தொடர் நடவடிக்கையால் பாமர மக்களும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பணத்தாலும், மனத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களில் சொத்து மதிப்பை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிதாக உருவாக்கவுள்ள மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினால் மனைப்பிரிவிற்கு மதிப்பு நிர்ணயம் செய்ய உள்ள சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பது நடைமுறையில் உள்ளது.

    தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்த்தினால் கூட தமிழ்நாடு அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கும் வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது.
    • வெடிவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருந்து 13 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே வெடிவிபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
    • போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.

    ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.

    போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

    விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும்.

    போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.

    இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜய் உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
    • தண்ணீர் பந்தல் அமைப்பது மட்டுமின்றி தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் த.வெ.க. நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டு இருந்தார். அவரது உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    எனினும் பல இடங்களில் தண்ணீர் பந்தல் இல்லாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களை நிர்வாகிகள் ஆய்வு செய்து 234 தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதி வீதியாகவும் தண்ணீர் பந்தல் கட்சி சார்பில் அமைக்க வேண்டும்.

    தண்ணீர் பந்தல் அமைப்பது மட்டுமின்றி தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தொண்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருக்கிறார்.

    ×