search icon
என் மலர்tooltip icon
    • வரதராஜ பெருமாளுக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து சுகந்த பரிமல திவ்ய வஸ்துக்களுடன் வசந்த உற்சவ விழா தொடங்கியது.
    • வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    தருமபுரி,

    தருமபுரி கோட்டை வரலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில் ஸ்வஸ்தி ஸ்ரீ சோப கிருது வருடம் சித்திரை மாதம் 28 -ம் நாள் முதல் வரதராஜ பெருமாளுக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து சுகந்த பரிமல திவ்ய வஸ்துக்களுடன் வசந்த உற்சவ விழா தொடங்கியது.

    இந்நிலையில் கடைசி நாளான நேற்று வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் வசந்த உற்சவ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • லாரிகளில் அளவுக்கு அதிகமான கலவைகள் கொண்டு செல்வதால் சாலைகளில் வழிந்தவாறு ஜல்லி கற்கள் சிதறி விழுகிறது.
    • வாகனங்கள் ஜல்லி மீது ஏறுவதால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதி வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு தொழில்சாலைகள், வீடுகள், மற்றும் அரசு பணிகளுக்கும் அதிக அளவில் சிமெண்ட் ஐல்லி கலவை லாரிகள் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, ஓசூர்-பேரிகை சாலை மற்றும் சூளகிரி- உத்தனப்பள்ளி சாலை என பல்வேறு சாலைகளில் செல்கிறது.

    லாரிகளில் அளவுக்கு அதிகமான கலவைகள் கொண்டு செல்வதால் சாலைகளில் வழிந்தவாறு ஜல்லி கற்கள் சிதறி விழுகிறது. இதனால் வாகனங்கள் ஜல்லி மீது ஏறுவதால் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது.

    ஜல்லி கலவைகள் ஏற்றி செல்லும் லாரிகள் சாலையில் ஜல்லி கற்கள் சிதராதவாறு தார்பாய்களை மூடி கொண்டு செல்ல வேண்டும். இதனை மீறினால் அந்த வாகனங்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • அந்த வழியாக வந்த ஒற்றை யானை தாக்கி தூக்கி வீசியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன்தொட்டியைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது67). விவசாயியான இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள வனபகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த 12-ந்தேதி, பெரியார் நகர் அருகே ஒரு ஸ்வீட்ஸ் கடை பகுதியில், மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திலக் (24) என்ற வாலிபர், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இது சம்பந்தமாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட திலக், அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் பாபு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டனர்.

    இது சம்பந்தமாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துவிட்டனர்.

    இந்நிலையில், திலக் கொலை தொடர்பாக, மோகன் பாபுவின் தந்தை திம்மராயப்பா என்பவரை சந்தேகத்தின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, தனது மகன் மோகன் பாபுவை கொலை செய்ததற்கு பழி தீர்க்கும் வகையில் தான், தான் மத்திகிரியை சேர்ந்த சசி என்பவர் மூலம் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    இது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், திலக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாகூர், சஸ்பெண்டு செய்துள்ளார்.

    • நேற்று லட்சுமி சிலைக்கு முன்பாக வலம்புரி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • கலச குடத்தில் இருந்த புனித நீரை விநாயகர் சிலை மீது ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்ட போது, நகராட்சி அலுவலக வளாகத்தின் முன், லட்சுமி சிலை வைக்கப்பட்டு, நகராட்சி அலுவலர்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று லட்சுமி சிலைக்கு முன்பாக வலம்புரி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதையொட்டி நகராட்சி ஆணையாளர் வசந்தி, பூஜை செய்யப்பட்ட கலச குடத்தை சுமந்து சாமி சிலையை வலம் வந்தார். பின்னர் கலச குடத்தில் இருந்த புனித நீரை விநாயகர் சிலை மீது ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி இளநிலை உதவியாளர்கள் அறிவழகன், செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் செந்தில்குமார் செழியன், மின் பணியாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இது குறித்து நகராட்சி ஆணையாளர் வசந்தி கூறுகையில், இங்கு லட்சுமி சிலை மட்டும் இங்கு இருந்தது. இங்கு பல பிரச்சினைகள் நடந்துள்ளது. ஆகவே பிரச்சினைகள் நீங்கி, அனைத்தும் சுமூகமாக நடக்கவும், குழப்பங்கள் நீங்கி அனைவரும் நன்றாக இருக்கவும், பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டியும் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்றார்.

    கிருஷ்ணகிரி,

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம் என்று கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக அனைத்து உரங்களும் தேவையான அளவு சங்கங்களில் இருப்பு உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் அடிப்படையிலும் கடன் பெறாத விவசாயிகளுக்கு ரொக்க விற்பனை அடிப்படையிலும் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    எனவே விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி சாகுபடிக்கு தேவையான உரங்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் கூட்டுறவு சங்கங்களில் உரம் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம் ஆகிய வட்டாரங்கள் கட்டுப்பாட்டு அறை எண் 7338720527&ல் ஓசூர் சரக துணை பதிவாளரை தொடர்பு கொள்ளவும்.

    கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப் பள்ளி மற்றும் மத்தூர் ஆகிய வட்டாரங்கள் கட்டுப்பாட்டு அறை எண் 7338720526-ல் கிருஷ்ணகிரி சரக துணை பதிவாளரை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×