search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாரம் முழுவதும் அகற்றப்பட்டதால் பெரிய கோவில் முழுத்தோற்றத்துடன் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    சாரம் முழுவதும் அகற்றப்பட்டதால் பெரிய கோவில் முழுத்தோற்றத்துடன் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

    1 ஆண்டுக்கு பிறகு முழு தோற்றத்துடன் காட்சியளிக்கும் பெரிய கோவில் கோபுரம்

    சாரம் முழுமையாக அகற்றப்பட்டதால் 1 ஆண்டுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் கோபுரம் முழுமையாக காட்சி அளிக்கிறது.
    பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகள் ஆகின்றன. தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வரும் தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர்.

    இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி கோவிலில் 1 ஆண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடந்தன. கோவிலில் தரைதளம் சீரமைப்பு, புல் தரை சீரமைப்பு, கருங்கல் தளம் அமைப்பு, கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, திருச்சுற்று மாளிகை சீரமைப்பு உள்பட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த கோவிலில் உள்ள விமான கோபுரம், கேரளாந்தகன் வாயில் கோபுரம், ராஜராஜன் வாயில் கோபுரம், விமான கோபுரம்(பெரிய கோபுரம்), அம்மன் சன்னதி கோபுரம் உள்பட அனைத்து சன்னதிகளின் கோபுரங்களில் சாரம் கட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் விமான கோபுரத்தில் சாரம் அமைக்கப்பட்டு 1 ஆண்டுக்கும் மேலாக இருந்தது.

    குடமுழுக்கு விழாவுக்கு பிறகும், கோபுரங்களில் கட்டப்பட்ட சாரம் தொடர்ந்து இருந்தது. இதனால் கோபுரத்தின் முழுமையான அழகை மக்களால் பார்த்து ரசிக்க முடியவில்லை. மேலும் தொலைவில் இருந்து பார்த்தாலும், சாரம் கட்டப்பட்டிருந்ததால், கருப்பு நிறத்தில் காணப்பட்டது.

    இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மற்ற கோவில்கள் மூடப்பட்டதை போல, பெரிய கோவிலும் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் மூடப்பட்டது. தினமும் நான்கு கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. பிரதோஷம் அன்று நந்தியெம்பெருமானுக்கு பக்தர்கள் இன்றி அபிஷேகம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சாரத்தை அகற்றுவதற்கும் தொழிலாளர்கள் வரவில்லை. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் பணிக்கு வந்ததால், கோபுரங்களில் இருந்த சாரம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இதையடுத்து சாரம் முழுமையாக அகற்றப்பட்டதை தொடர்ந்து 1 ஆண்டுக்குப்பிறகு நேற்று முதல் பெரியகோவில் கோபுரங்களின் அழகை முழுமையாக காண முடிகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×