search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு பெயர்ச்சி விழாவையொட்டி ராகு பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    ராகு பெயர்ச்சி விழாவையொட்டி ராகு பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா

    திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இங்கு நாகநாதசாமி, கிரிகுஜாம்பிகை அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவான், நாக கன்னி, நாக வள்ளி ஆகிய 2 துணைவிகளுடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சம் ஆகும்.

    நவக்கிரக பரிகார தலங்களில் நாகநாதசாமி கோவில், ராகுவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாளில் இக்கோவிலில் ராகு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ராகு பகவான் நேற்று மதியம் 1.24 மணிக்கு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி நேற்று கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் கடந்த 11-ந் தேதி இரவு யாகசாலை பூஜைகள் தொடங்கின. 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 2, 3-வது கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடானது.

    அப்போது ராகு பகவானுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து புனித நீரால் கட அபிஷேகம் நடந்தது. பெயர்ச்சி நேரமான 1.24 மணிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து ராகுபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் முதன்மையான மூர்த்தி என்று போற்றப்படும் கேதுபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். கேதுபகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவது வழக்கம்.

    அதன்படி நேற்று கேது பகவான் மதியம் 2.04 மணிக்கு மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கேதுபகவான் பெயர்ச்சி அடைந்தபோது தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×