search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் வெளளத்தில் பொற்கொடி அம்மன் புஷ்பரதம் வந்த காட்சி.
    X
    பக்தர்கள் வெளளத்தில் பொற்கொடி அம்மன் புஷ்பரதம் வந்த காட்சி.

    பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா

    அணைக்கட்டு அருகே வேலங்காடு வல்லண்டராமம் பொற்கொடிஅம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் மீது சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    அணைக்கட்டு அருகே உள்ள வேலங்காடு வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் புஷ்பரத ஏரித்திருவிழா வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாகும். ஏரியில் எழுந்தருளியிருக்கும் பொற்கொடி அம்மனுக்கு இந்த விழா எடுக்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் அவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளும் நோய் நொடியின்றி இருக்க பல நூறு ஆண்டுகளாக இந்த விழாவை வல்லண்டராமம், அன்னாச்சிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராம மக்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.

    அதன்படி சித்திரை மாதம் கடைசி புதன்கிழமையான நேற்று திருவிழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே அங்கு வர தொடங்கினர்.

    ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவண்டியில் பசுந்தழைகள் கட்டி தென்னை ஓலையை கூடாரம்போல் அமைத்தும், டிராக்டர், வேன், ஆட்டோக் களிலும் குடும்பத்துடன் உறவினர் களையும் அழைத்துக்கொண்டு வந்தனர். இந்த விழாவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனை புஷ்பரதத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. இதனையடுத்து வல்லண்டராமம், அன்னாச்சிபாளையம் ஆகிய கிராமங்களில் வாணவேடிக்கையுடன் புஷ்பரத உலா நடந்தது.

    அந்த புஷ்ப ரதத்தை 300-க்கும் மேற்பட்ட பக்தர் கள் சுமந்தவாறு ஏரிகோவிலை பகல் 1.30 மணிக்கு வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவைகளை பலியிட்டு வழிபட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏரியில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.


    சிறப்பு அலங்காரத்தில் அம்மன்


    விழாவிற்கு வந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் அழைத்து வந்திருந்தனர். கால்நடைகளுடன் அவர்கள் கோவிலை வலம் வந்து வழிபட்டனர். வறண்டு காணப்பட்ட வல்லண்டராமம் ஏரி பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது.

    அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும், உபயதாரர்களும் தண்ணீர், மோர், பானகம் ஆகிவற்றை தாரளமாக வழங்கினர். மேலும் டிராக்டர்களிலும் குடிநீர் எடுத்து வந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இத்திருவிழாவில் அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், வேலுார் திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் வேலழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இத்திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக வேலூர் அணைக்கட்டு ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி 2 இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 115 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆங்காங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், உதவி ஆணையர் எஸ்.சுப்பிரமணியம், ஆய்வாளர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் பரந்தாமன் கண்ணன் மற்றும் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பணங்காடு ஆகிய கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×