search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, வீதியுலா வந்த காட்சி.
    X
    நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, வீதியுலா வந்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம் இன்று நடக்கிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இவ்விழா நாளை (புதன்கிழமை) வரை நடக்கிறது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு, நெல்லளவு கண்டருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது.

    இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து உபய நாச்சியார்களுடன் புறப்பட்டு மாலை 5 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். இரவு 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணி முதல் 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்ப மைய மண்டபம் வந்து சேர்ந்து இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைகிறார்.



    தெப்ப உற்சவம் நடைபெறும் ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் 5½ ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்படும். தற்போது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாமல் இருக்கிறது.

    இன்று தெப்ப உற்சவம் நடைபெறுவதையொட்டி குளத்தை சுற்றியுள்ள தோப்புகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பம்புசெட் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு வாய்க்கால்கள் மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. மேலும் குளத்தின் அருகே புதிதாக போர்வெல் போடப்பட்டு அதன் மூலமும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இருந்த போதும் போதியளவு தண்ணீர் குளத்தில் நிரம்பவில்லை. இந்நிலையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், மழை பெய்து தெப்பக்குளத்தில் நீர் நிரம்பி தெப்ப உற்சவம் நடக்க வேண்டும் என்று வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் அமர்ந்து வருணஜபம் செய்தார்.
    Next Story
    ×