search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் வழிபாடு
    X

    வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் வழிபாடு

    வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இன்று பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நடக்கிறது.
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் வீரப்பூர் ஜமீன்தார்களும், கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களுமான ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன், சுதாகர் என்ற சிவசுப்ரமணி, ரெங்கராஜா, அசோக் பாண்டியன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகளும், வீ.பூசாரிபட்டி பட்டயதார்களுமான பெரிய பூசாரி முத்து, குதிரைப் பூசாரி மாரியப்பன், சின்னப்பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை, பரம்பரை அர்ச்சகர் ரமேஷ் என்ற வெ.ரெங்கசாமி அய்யர் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    பின்னர் குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்து வர அருகே குடைபிடித்தபடி மாரியப்பன் பூசாரி நின்று வர, குதிரை வாகனத்தை பட்டியூர் கிராமங்களின் ஊராளிக்கவுண்டர் சமூக இளைஞர்கள் சுமந்து வந்தனர். அதேபோல யானை வாகனத்தில் பெரிய காண்டியம்மன் அமர்ந்து வர பெரியபூசாரி முத்து மகன் செல்வம் வாகனத்தில் நின்று குடைபிடித்தபடி வர காட்டையம்பட்டி கொடிக்கால் காரர்கள் வகை கட்டியூர் இளைஞர்கள் சுமந்து வர அதைத்தொடர்ந்து வேட்டைப்பூசாரி தங்காள் கரகம் சுமந்து வர கோவில் முன்பிருந்து வேடபரி குதிரைத் தேர் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டது.

    சாம்புவன் காளையில் அமர்ந்து முரசு கொட்டி முன் செல்ல அதைத் தொடர்ந்து குதிரை வாகனமும், யானை வாகனமும், தங்காள் கரகமும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக சென்றன. வேடபரி அணியாப்பூர் செல்லும் வழியில் இளைப்பாற்றி மண்டபம் முன்பு யானை வாகனமும், தங்காள் கரகமும் நின்று கொண்டன. குதிரை தேரில் பொன்னர் அணியாப்பூர் குதிரை கோவில் சென்று அம்பு போட்டு விட்டு திரும்பி மீண்டும் இளைப்பாற்றி மண்டபம் வந்ததும் தெய்வங்கள் அனைத்தும் இளைப்பாற்றி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

    அதிகாலை 4 மணி வரை இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்த தெய்வங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் வழிபட்டனர். அதிகாலை 4 மணிக்கு இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்து பெரியகாண்டியம்மன் பூ பல்லக்கிலும், பொன்னர் குதிரை வாகனத்திலும், தங்காள் கரகம் யானை வாகனத்திலும் மீண்டும் வீரப்பூர் கோவிலை வந்தடைந்ததும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வேடபரி நிகழ்ச்சியையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வீரப்பூர் கோவில் முன்பிருந்து பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது.
    Next Story
    ×