search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாசி மக தீர்த்தவாரி விழாவையொட்டி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டபோது எடுத்த படம்.
    X
    மாசி மக தீர்த்தவாரி விழாவையொட்டி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டபோது எடுத்த படம்.

    வில்லியனூர் அருகே கங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசி மக தீர்த்தவாரி விழா

    வில்லியனூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற கங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசி மக தீர்த்தவாரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி உற்சவம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது.
    புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள திருக் காஞ்சி நகரில் காசியிலும் வீசம் அதிகம் என்று கூறப்படும் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தீர்த்தவாரி விழா (பிரம்மோற்சவம்) 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இதில் மாசி மாத மக நட்சத்திர தினத்தன்று கங்கைவராக நதீஸ்வரர் உற்சவ மூர்த்தி சங்கராபரணி ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சங்கராபரணி ஆற்றில் புனித நீராடுவார்கள். இங்கு புனித நீராடுவதால், பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. கங்கைவராக நதீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம்கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று காலை 10 மணி அளவில் கோவில் கொடி மரத்துக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் மூலவர் கங்கைவராக நதீஸ்வரர், காமாட்சி அம்மன் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கங்கைவராக நதீஸ்வரர், இந்திர விமானத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 10-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள். 11-ந் தேதி காலை 6.30 மணிக்கு பிரதான உற்சவமான மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

    இந்த உற்சவத்தில் புதுவை மாநிலம் மற்றும் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மயிலம் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் இருந்து பல்வேறு உற்சவ மூர்த்திகள் வந்து தீர்த்தவாரி நடைபெறும். இதில் புதுவை மாநிலம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்துகொண்டு சங்கராபரணி ஆற்றில் புனிதநீராடுகிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×