search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  நாளை அய்யா வைகுண்டர் 185-வது அவதார தினம்
  X

  நாளை அய்யா வைகுண்டர் 185-வது அவதார தினம்

  இந்து மதத்தில் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘அய்யாவழி’. இதை அருளியவர் அய்யா வைகுண்டர். நாளை அய்யா வைகுண்டர் 185-வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
  இந்து மதத்தில் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘அய்யாவழி’. இதை அருளியவர் அய்யா வைகுண்டர். 19-ம் நூற்றாண்டில் அவதரித்தவராக ‘அய்யாவழி’ மக்களால் வணங்கப்படுகிறார்.

  இவர் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களின் ஒரே உருவமாக கருதப்படுகிறார். குமரி மாவட்டம் சுவாமிதோப்பில் தவம் செய்து, மக்களைக் காத்தவர். மனித உருவில் பரம்பொருள் அவதரித்ததோ திருச்செந்தூர் திருக்கடலில்!

  மற்ற அவதாரங்களில் ஆயுதங்கள் ஏந்தி அசுரர்களை அழித்து வதம் செய்த பரம்பொருள், இந்த அதிசய ஆண்டிக் கோல அவதாரத்தில் அன்பால் ஆயுதமின்றி அழித்ததாக ஐதிகம்.

  மண்ணுலகில் கலி நீசர்களின் அட்டூழியம் கட்டவிழ்ந்து போகும்போது, இறைவனின் திருஅவதாரம் நிகழும். தசாவதாரத்தில் வரிசையாக ஆயுதம் ஏந்தி அசுரர்களை அழித்த பகவான், ஆயுதமே ஏந்தாமல் கலியுக மகா பாதகங்களை அடக்கியதே இந்த வைகுண்ட அவதாரத்தின் தனிச் சிறப்பு.

  கேரள மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து சாதாரண மக்களைக் காத்து, சமத்துவ சமுதாயம் அமைய வழி செய்தவர் வைகுண்டர். இவர், ‘அகிலத் திரட்டு’, ‘அருள் நூல்’ எனும் இரு அரிய பொக்கிஷங்களை அருளி இருக்கிறார்.

  அவற்றில் இடம்பெற்றிருக்கிற கணிப்புகள் மெய்வாக்காக அப்படியே பலித்து வருகின்றன. ‘முள்ளு முனையதிலே குளம் வெட்டி வயலும் பாய்ச்சி முன்மடை பாயக் கண்டேன்’ என்கிற வரி, இன்றைய ஆழ்துளைக் கிணறை நினைவுபடுத்துகிறது. முப்போகம் விளைந்து வரும் நஞ்சை நிலங்களை ‘உவர்’ பொங்கி அழிக்கும் என தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

  இப்படி எத்தனையோ பலிக்கும் வாக்குகளை சொன்ன பகவான் வைகுண்டரின் திருவாக்குகளில் ஒன்று...‘கனத்த பூமி வெடிக்குதடா’ என்பதாகும். இது, நில அதிர்ச்சியை உணர்த்துகிறது. அதேபோல -‘காடு நாடாகுமென்று நாரணன் சொன்ன சொல் காலமும் சரியாச்சே!’... எனவும், ‘நாடெல்லாம் காடாகும்’ என்றும் சொல்லி இருக்கிறார். அவை நாளும் மெய்யாகி வருகின்றன.

  ‘அண்டபகிரண்டம் வெல்லவொரு ஆயுதம் வந்திருக்குதப்பா’ என்பது சீறிப் பாய்ந்து- கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது. பெருமழை குறித்து வைகுண்டர் பாடிய தீர்க்கதரிசன வாசகங்களும் இப்போது 21-ம் நூற்றாண்டில் அப்படியே பலித்திருக்கின்றன.
  ‘காளி வெள்ளம் வருகிறது; கப்பல் செய்து வைத்திருங்கோ’ மற்றும்...

  ‘மாரி வெள்ளம் அழிக்குதடா; மாயாண்டி சொல்லுகிறேன்’ போன்ற வரிகள் அதற்கு துல்லியமான சான்றுகளாகின்றன.

  ‘மாரி’ என்கிற மழை வெள்ளத்தால் பேரழிவு நேர்ந்திருக்கிறது. காளி போல் வெள்ளம் ஆவேசமாக பெருக்கெடுத்து அழித்தது. சென்னை நகருக்கு கப்பலில் நிவாரணப் பொருட்களும் வந்தன.

  வைகுண்டரின் பாடல் வரிகளில் இன்னும் எவ்வளவோ அற்புத ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. அவை பல எச்சரிக்கைகளை உலகுக்கு உணர்த்துகின்றன. இவரது அதிசய வாழ்வுக்கு பல வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

  ‘அய்யா வழி’யை ‘அன்பு வழி’ என்றும் குறிப்பிடுகிறார்கள். ‘அய்யா’ என்றால் தந்தை, தலைவன், குரு என பொருள்படும். ‘வழி’ என்றால் பாதை. எந்தவித பாரபட்சமும் காட்டாமல், சக மனிதர்களிடம் அன்போடு வழி நடப்பதையே இந்த வழிபாடு வலியுறுத்துகிறது.

  ‘அய்யா வழி’ என்பது ‘அன்பு வழி’. இது அருவ-சைவ வழிபாட்டு முறையாகும். இதன் தலைமை வழிபாட்டுத் தலம், வைகுண்டர் அமர்ந்து அருள்பாலித்த சுவாமிதோப்பில் உள்ளது. அதன் துணைத் தலங்கள், தமிழ்நாட்டில் எண்ணற்ற இடங்களில் இருக்கின்றன. சென்னை, மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் ‘அய்யா வழி’ வழிபாடு பரவி வருகிறது.

  அந்த காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் குமரி மாவட்டத்தின் ஊர்களும் இருந்தன. கேரள மன்னன் கொடுங்கோல் ஆட்சி செய்தான். நமது பெண்கள் தங்கள் தோளில் சேலை போடக்கூடாது, இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது, கழுத்தில் தங்கத்தாலி இருக்கக் கூடாது, ஆண்கள் மீசை வைத்தால் குற்றம், பனை ஏறினால் வரி செலுத்த வேண்டும், முட்டுக்கு கீழே வேட்டி - தலையில் தலைப்பாகை கட்டக்கூடாது, இருபாலரும் காலில் செருப்புப் போடக்கூடாது, உயர் சாதியினரின் தெருக்களில் நடக்கக்கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து மக்களை கொடுமைப்படுத்தினான்.  இதை வைகுண்ட பரம்பொருள் எதிர்த்தார். சாமானிய மக்களின் உரிமைகளைக் காத்தார். நோய் நொடியோடு வந்தவர்களுக்கு திருநாமத்தாலும், தண்ணீராலும் பிணிகள் போக்கினார். அவரது பெருமை

  பரவியது. மக்கள் வந்து வணங்கி, பலன் பெற்றுச் சென்றனர்.

  இதைப் பொறுக்காத மலையாள மன்னன், அவரை கட்டி இழுத்து வரும்படி தனது படை வீரர்களை அனுப்பினான். வழியெங்கும் கொடுமைப்படுத்தியபடியே அழைத்துப் போனார்கள். சுண்ணாம்புக் காளவாயில் போட்டார்கள். மிளகாய் வற்றல் புகையிலும், நெருப்பிலும் தள்ளினார்கள். இறைவன் மலர்ந்த முகத்தோடு வெளிப்பட்டார். கடைசியில் பசித்த புலி முன்னே அடைத்தார்கள். புலி... பாயவில்லை. பணிந்து நின்றது!

  அப்போதுதான் கேரள மன்னனுக்கு புத்தி வந்தது. தான் தண்டிக்க நினைத்தது மனிதனை அல்ல; மாலவனை என்பதை உணர்ந்தான். மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு வணங்கினான். ஆண்டிக் கோலம் கொண்ட அய்யா வைகுண்டர், சாமானிய மக்களின் வாழ்வு செழிக்க வேண்டி... சுவாமிதோப்பில் தவம் மேற்கொண்டார்.

  அந்த மண்ணில்தான் அவர் அருளிய ‘அன்பு வழி’யின் தலைமைப் பதி இருக்கிறது. அருகில் அவரால் உருவாக்கப்பட்ட முத்திரி பதக்கிணறு உள்ளது. இதில் நீர் இறைத்து நீராடி, வைகுண்டரை வழிபட்டால்... தீராத நோய்கள் தீரும். துன்பங்கள் அகலும். இல்லத்தில் இனிமை மலரும். தாமரை மலருடன் கூடிய திருநாமமே அய்யா வழியின் சின்னமாக இருக்கிறது. அருவ வழிபாடு இதன் இன்னொரு சிறப்பு.

  மாசி 20-ந்தேதி (மார்ச் 4), வைகுண்டரின் 185-வது அவதார தினம். அன்று சுவாமிதோப்பில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். மார்ச் 3-ந்தேதி திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நாகர்கோவில் சென்று அடைவார்கள். அங்கு தங்கிவிட்டு, அதிகாலையில் தலைமைப்பதி நோக்கி புறப்படுவார்கள்.

  சென்னை மணலி புதுநகரில் ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம் (தர்மபதி) இருக்கிறது. 4-ந்தேதி காலை 6 மணிக்கு பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்ப நாயக்கன் தெருவில் (பாண்டியன் தியேட்டர் பஸ் நிறுத்தம்) இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார சாரட்டில் அய்யா அருளிய ‘அகிலத்திரட்டு’ ஆகமத்தை பாதயாத்திரையாக தர்மபதிக்கு எடுத்துச்செல்வார்கள். மதியம் கோவிலில் சிறப்பு வழிபாடும், அன்னதர்மமும் நடக்கும். மாலையில் வைகுண்டர் ஜோதி ஏற்றப்படும்.

  செங்குன்றத்தை அடுத்த இடைப்பாளையம் அலங்காரபதியில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மதியம் உச்சிப்படிப்பும்,இரவு வாகன பவனியும் நடக்கும். அருள்வாக்கும் உண்டு.

  சென்னையில் நுங்கம்பாக்கம் (புஷ்பா நகர்), அம்பத்தூர் (ஓரகடம்), செங்குன்றம் (இடைப்பாளையம்), திருமுல்லைவாயில் (சோழம்பேடு), கே.கே. நகர். (எம்.ஜி.ஆர். நகர்), விருகம்பாக்கம், தரமணி, அம்பத்தூர் ஐ.சி.எப். காலனி (அயனப்பாக்கம்), அம்பத்தூர் புதூர் (பானு நகர்), மேற்கு தாம்பரம் (நடுவீரப்பட்டு), திருவொற்றியூர் (மாணிக்கம் நகர்), பூந்தமல்லி (ரகுநாதபுரம்), சித்தலப்பாக்கம் (ஒட்டியம்பாக்கம்), குளத்தூர் (பொன்னியம்மன்மேடு), சூளைமேடு பெரியார் பாதை, கோயம்பேடு மேட்டுக்குப்பம், மேடவாக்கம் (பெரும்பாக்கம்), போரூர் (காரப்பாக்கம்), கவுரிவாக்கம், காஞ்சிபுரம் (பள்ளத்துப்பதி) உள்பட பல இடங்களில் அய்யா ஆலயங்களை வழிபடலாம். இங்கும், கும்மிடிப்பூண்டியில் சரண்யாநகர் துளசிப்பதி, பெரியார்நகர் அழகுப்பதியிலும் அவதார தின கொண்டாட்டம் நடைபெறும்.

  - வணங்காமுடி
  Next Story
  ×