search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாசி பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.
    X
    மாசி பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டி விரதம் தொடங்கினர்.
    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 2-ம் திருநாளான நேற்று அதிகாலையில் உலுப்பக்குடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி நத்தம் சந்தனகருப்பு கோவிலை வந்தடைந்தனர். அங்கிருந்து பக்தர்களை மேளதாளம் முழங்க, சிங்கார வர்ணக்குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் நிர்வாகத்தினர், பூசாரிகள் மற்றும் கிராம மக்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தீர்த்தக் குடங்களை தலையில் சுமந்தபடி பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

    அதைத்தொடர்ந்து காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி 12-ந்தேதியும், அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை அணியும் நிகழ்ச்சி 13-ந் தேதியும் நடக்கிறது. 14-ந்தேதி காலையில் அக்னிசட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து காந்திநகர் பொதுமக்கள் சார்பில் கழுகுமரம் ஊன்றும் நிகழ்ச்சியும், காமராஜ்நகர் பொதுமக்கள் சார்பில் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    பின்னர் கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த நாள் காலையில் அம்மன் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும், வண்ணமலர்களால் அலங் கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 16-ந்தேதி அம்மன் கோவிலுக்கு வந்து இருப்பிடம் சேரும் நிகழ்ச்சியுடன் மாசி பெருந்திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், திருக்கோவில் பூசாரிகள் தனசேகரன், சின்னராஜ், நடராஜன், கணேஷ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    மேலும் பக்தர்கள் பாதுகாப்புக்காக மர தடுப்புகள் அமைக்கும் பணியை தமிழ்மாநில கட்டிடத்தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் நத்தம் நயினப்பன் செய்திருந்தார். கரந்தமலையில் இருந்து தீர்த்தம் எடுத்துவரும் பக்தர் கள் வசதிக்காக நத்தம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. சுகாதார பணிகள், குடிநீர் வினியோகத்தை நத்தம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி செல்வா, சுகாதார ஆய்வாளர் கருணாகரன் மேற்பார்வையில் பணியாளர்கள் செய்தனர். மேலும் பக்தர்கள் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×