search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தருமபுரம் யாழ்முரிநாதசாமி கோவில் கும்பாபிஷேகம்
    X

    தருமபுரம் யாழ்முரிநாதசாமி கோவில் கும்பாபிஷேகம்

    காரைக்கால் தருமபுரத்தில் உள்ள யாழ்முரிநாதசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் தருமபுரம் கிராமத்தில், திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான தேனாமிர்தவல்லி சமேத யாழ்முரிநாதசாமி கோவில் உள்ளது. எமதர்ம ராஜனின் மகனான தர்மன் பூஜித்த இத்தலம் நான்முகன், தருமபுத்திரன் ஆகியோர் வழிபட்ட பெருமை கொண்டது. அதுமட்டுமின்றி திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் அவதரித்தது, திருஞானசம்பந்தர் ‘யாழ் முரித்திருப்பதிகம்’ பாடி அருளியது ஆகியவை இத்தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பவை ஆகும்.

    இக்கோவிலில் கடைசியாக கடந்த 1969-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 48 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக தற்போது இங்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடத்தப்பட்டு புதிதாக 5 நிலை ராஜகோபுரமும், விநாயகர், மகாலட்சுமி மற்றும் நவக்கிரகங்களும் புதிதாக விமானங்களும் அமைக்கப்பட்டன. 63 நாயன்மார்கள், தொகையடியார்கள் மற்றும் சந்தானசாரியார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    கும்பாபிஷேகத்துக்காக கடந்த 3-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. நேற்று காலை தருமை ஆதீனம் 26-வது குருமகாசன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் 6-வது கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதன்பின் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் விமானங்கள் மற்றும் ராஜ கோபுரத்திலும், மூலஸ்தானத்திலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் தருமபுரம் இளைய ஆதீனம் மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகள், திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரசாமி தேவஸ்தான கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக் கண்ணன், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசனா, முன்னாள் அமைச்சர்கள் ஏ.வி.சுப்ரமணியன், நாஜிம், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், மண்டல போலீஸ் சூப்பிரண்டுகள் வம்சீதரரெட்டி, குணசேகரன், கோவில்கள் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் மகா அபிஷேகமும், திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    Next Story
    ×