search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செஞ்சி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி பறக்கும் காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
    X

    செஞ்சி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி பறக்கும் காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

    செஞ்சியில் உள்ள கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    செஞ்சியில் உள்ள கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் 37-ம் ஆண்டு தைப்பூச பெருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தைப்பூசத்தை யொட்டி காலை 8 மணிக்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் அறங்காலரான குருசாமிக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தீ மிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் தங்களது உடம்பில் அலகு குத்தி ரதம் மற்றும் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தப்படி கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வந்தனர். இது தவிர பறக்கும் காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் பழனியாண்டவர் கோவிலில் 95-வது ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதையடுத்து அதே ஊரில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக பழனியாண்டவர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து மாலை 6 மணிக்கு தீ மிதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தங்களது உடம்பில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×