search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம்

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த நாகவழிபாட்டு தலங்களில் ஒன்றாகவும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திகழ்ந்து வருகிறது. நாகர்கோவில் நகரின் பெயர்வரக்காரணங்களில் ஒன்றாகவும் இந்த கோவில் இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று 9-ம் திருவிழா நடந்தது. இதையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். பக்தி பரவசத்துடனும், பக்தி கோஷங்கள் முழங்கவும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ரதவீதிகளை சுற்றி வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் மகேஷ், முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ், முன்னாள் கவுன்சிலர் சாகுல்ஹமீது, பா.ஜனதா நகர தலைவர் ராஜன், இந்து கோவில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நாஞ்சில் ராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    தேரோட்டத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் நேற்று காலை 11 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8 மணி முதல் 10 மணி வரை நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9.45 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ம் நாள் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும், மாலை 5 மணிக்கு சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை சங்கீத நாத இசை சங்கமம், இரவு 8.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கொம்மண்டை அம்மன் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது.
    Next Story
    ×