search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்த போது எடுத்த படம்.
    X
    நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்த போது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி

    நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் நேற்று தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது.
    நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ந் தேதி திருவிழாவில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சியும், அன்று இரவு சுவாமி-அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றன.

    விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், ஸ்ரீ தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளுடன் நேற்று மதியம் தாமிரபரணி ஆற்றுக்கு புறப்பட்டனர். சுவாமி நெல்லையப்பர் ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சென்று தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.

    அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.

    இன்று 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சவுந்திர சபா மண்டபத்தில், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×