search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2002-ம் ஆண்டு நடந்தது. அதைத்தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் திருப்பணிகள் முழுவீச்சில் முடிக்கப்பட்டது. தற்போது கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி துர்க்கைஅம்மன் உற்சவம் நடந்தது. தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், கணபதி, முருகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் கும்பாபிஷேகத்திற்கான ஹோமம் மற்றும் பூஜைகள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் யாக பூஜைகள் நேற்று மாலை தொடங்கியது. இதற்காக கோவிலின் 5-ம் பிரகாரத்தில் 27 ஆயிரம் சதுர அடியில் மூலவருக்கு 33 குண்டங்களும், அம்மனுக்கு 25 குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 50 குண்டங்களும் என 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று காலை சாந்தி ஹோமம், அக்னி சங்க்ரஹணம், தீர்த்த சங்க்ரஹணம், பரிவார மூர்த்திகள் அஷ்டபந்தன சாற்றுதல், பூர்ணஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணியளவில் யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது. யாகசாலை பூஜைகளில் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.

    கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் மற்றும் அண்ணாமலையார் கோவில் பிரம்ம தீர்த்தத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், யாக கலசங்களில் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சாமி, அம்மன், பரிவார சன்னதிகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) கோவில் பிரகாரங்களில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. வருகிற 6-ந் தேதி காலை 9.05 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    யாகசாலையில் நேற்று மாலை பூஜை தொடங்கியதை அடுத்து கோவில் கருவறையில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வருகிற 6-ந் தேதி வரை கருவறையில் சாமி தரிசனம் கிடையாது. பிம்பத்தில் இருந்து கும்பத்தில் சாமி எழுந்தருளுவதால், பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய இயலாது என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

    யாகசாலை பூஜையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் யாகசாலை பூஜை நடைபெறும் பகுதியில் தீயணைப்பு வாகனம் மற்றும் மருத்துவ குழுவினருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. யாகசாலையின் அருகே மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×