search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை தொடங்குகிறது

    ஊத்துக்குளி அருகே உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி தைப்பூச தேர்த்திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த விழாவில் மலைத்தேரோட்டத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரளான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நாளை(வியாழக்கிழமை) காலை கதித்த மலையில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சியும் மாலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 6-ந்தேதி மாலை மயில்வாகனத்தில் சாமி திருவீதி உலா மற்றும் 9-ந்தேதி மாலை 4 மணிக்கு வெற்றி வேலாயுதசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். 10-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகம், காலை 5 மணிக்கு சாமி ரத ஆரோகணம் திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் மாலை திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    11-ந்தேதி இரவு பரிவேட்டை, 12-ந்தேதி கோயிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி உலாக்காட்சியும் நடைபெறும். இதனை அடுத்து 13-ந்தேதி கதித்தமலை வெற்றி வேலாயுத சாமிக்கு காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், ரத ஆரோகணம் அதனை தொடர்ந்து மலைத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு மகாதரிசனம் மற்றும் சுப்பிரமணியசாமி வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தைப்பூசத்தேர் திருவிழாவையொட்டி தினமும் கலை மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறும். தேர்வடம் பிடிக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பகலில் மட்டுமே நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக இன்று(புதன்கிழமை) காலை கணபதிஹோமம் மற்றும் இரவு கிராமசாந்தி ஆகியவை நடைபெறுகிறது.

    Next Story
    ×