search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றப்பட்டு, தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.
    X
    பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றப்பட்டு, தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடம் நேற்று தொடங்கியது. தேரோட்டம் 8-ந்தேதி நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் ஆண்டுதோறும் தைப்பெருந்திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 5 மணிக்கு நினைத்ததை முடிக்கும் விநாயகருக்கும், ஸ்ரீ பூதநாதருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காலை 7.35 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி, ஸ்ரீகாரியம் சேதுராம், திருப்பணி மன்ற நிர்வாகிகள் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வேலப்பன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரெங்கநாதன், பூதப்பாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர்ஆலிவர்தாஸ், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் பாண்டியன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு சாமியும், அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் வீதி உலா நடந்தது. விழா நாட்களில் காலை சாமியும், அம்பாளும் வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.

    9-ம் திருவிழாவான வருகிற 8-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அப்போது திருத்தேர்களில் விநாயகர், சாமி, அம்பாள் ஆகியோர் எழுந்தருளி வலம் வருவார்கள். இரவு பக்தி இசை, சப்தாவர்ணம் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 9-ந்தேதி காலை சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆங்காரவல்லி சப்தாவர்ணம்( மண்டகப்படி முன்பு ஸ்ரீ பூதலிங்கசாமியிடம் இருந்து ஸ்ரீ அழகிய சோழவநங்கை அம்மன் விடைபெறும் காட்சி) நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்களும் திருப்பணி மன்ற நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×