search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா இன்று தொடங்குகிறது

    காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா இன்று (புதன்கிழமை) வீரகாளியம்மன் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச தேர்த்திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி இன்று இரவு 9 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு வீரகாளியம்மன் திருவீதி உலா காட்சியும், 3-ந்தேதி மாலை 4 மணிக்கு வீரகாளியம்மன் தேர்த்திருவிழாவும் நடக்கிறது.

    4-ந்தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார். பகல் 12 மணிக்கு விநாயகர் வழிபாடு, கொடியேற்றம், 2 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல், 9-ந்தேதி காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சாமி திருமலை வலம் வரும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் பல்வேறு சமுதாய மக்களின் மண்டபக்கட்டளை நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி 10-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம், காலை 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளல், மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படும்.

    பக் தர்களால் தேர் இழுத்து செல்லப்பட்டு சிறிது தூரம் சென்ற பின்னர் அங்கு நிறுத்தப்படும். அதன் பின்னர் 11-ந்தேதி மாலைத்தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்படும். 12-ந்தேதி 3-வது நாளும் மாலை தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வந்து நிலையை அடையும். தேர் வடம் பிடிக்கப்பட்டு மலையை சுற்றி வரும் 3 நாட்களும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு 3 நாட்களும் பல்வேறு காவடி குழுக்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படும். 15-ந்தேதி பகல் 11 மணிக்கு நந்தவனத்தோட்டத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவமும், 19-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், சாமி திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், உதவி ஆணையர் எஸ்.வி.ஹர்ஷினி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×