search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உள்ளம் கவரும் அழகனுக்கு உலக நாடுகளின் வாசனை திரவியங்கள்
    X

    உள்ளம் கவரும் அழகனுக்கு உலக நாடுகளின் வாசனை திரவியங்கள்

    உலக அளவில் புகழ் பெற்ற ‘திருப்பதி ஏழுமலையானாக’ வீற்றிருந்து பக்தர்கள் மனதை ஆட்சி செய்வதோடு, அருளையும் வாரி வழங்கும் திருமலையானை காண அல்லும்பகலும் எண்ணற்ற பக்தர்கள் திருவேங்கடத்துக்கு வருகை புரிகிறார்கள்.
    பொதுவாக, பெருமாள் அலங்கார பிரியர் என்று சொல்லப்படுவார். அபிஷேகங்கள் நடப்பதை விடவும் அலங்காரங்கள்தான் பெருமாளுக்கு விஷேசமாக செய்யப்படும். ஆனால், சிவபெருமான் அபிஷேக பிரியராக சொல்லப்படுகிறார். அவருக்கு அலங்காரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அபிஷேகம் கண்டிப்பாக உண்டு.

    உலக அளவில் புகழ் பெற்ற ‘திருப்பதி ஏழுமலையானாக’ வீற்றிருந்து பக்தர்கள் மனதை ஆட்சி செய்வதோடு, அருளையும் வாரி வழங்கும் திருமலையானை காண அல்லும்பகலும் எண்ணற்ற பக்தர்கள் திருவேங்கடத்துக்கு வருகை புரிகிறார்கள். பல்வேறு காணிக்கைகளையும் அள்ளி தருகிறார்கள்.

    திருமலையில் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கும் திருவேங்கடவனுக்கு பயன்படுத்தப்படும் அலங்காரப்பொருட்கள் பற்றி அறிய வரும்போது விழிகள் வியப்பால் விரிகின்றன. வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக உயர்தரமான குங்குமப்பூ ஸ்பெயினில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கஸ்தூரி என்ற வாசனை பொருளானது அண்டை நாடான நேபாளத்தில் இருந்து தருவிக்கப்படுகிறது. உயர்தரமான பூனையின் உடலில் இருந்து பெறப்படும் புனுகு என்ற வாசனைப்பொருள் சீனாவில் இருந்து வாங்கப்படுகிறது.

    பாரிஸ் நகரில் இருந்து விமானங்கள் மூலமாக பல்வேறு வாசனாதி திரவியங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இருந்து விமானம் மூலம் பக்குவப்படுத்திய ரோஜா மலர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சீனாவிலிருந்து உயர்தரமான சூடம், அகில், சந்தன கட்டைகள், வாசனைப்பொருள் அம்பர், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையானுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அபிஷேகத்தின்போது தங்க தாம்பாளத்தில் சந்தனத்துடன், மற்ற வாசனை திரவியங்கள் சேர்த்து கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். அத்துடன் 50-க்கும் மேற்பட்ட வட்டில் (சல்லடை போன்ற அபிஷேகத் தட்டு) பால் அபிஷேகம் நடக்கும். அதன் பிறகு கஸ்தூரி சாற்றப்பட்டு, புனுகு தடவப்படும். தினமும் காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடக்கும் அபிஷேகத்துக்கு ஏறத்தாழ ரூ. ஒருலட்சம் வரை செலவு ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அபிஷேக சமயங்களில் ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணை திறப்பதாக ஐதீகம்.
    Next Story
    ×