search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுதீட்சணருக்கு காட்சி தந்த ராமர்
    X

    சுதீட்சணருக்கு காட்சி தந்த ராமர்

    சிறுபிள்ளையாக இருக்கும் போது செய்யும் தவறுகள் அனைத்தும், அவர்கள் அறியாமையால் செய்த தவறுகள்தான் என்றாலும், அதற்கும் சிறிய தண்டனை உண்டு என்பதையும், ஆனால், அந்தத் தண்டனை அவர்களுக்குப் பிற்காலத்தில் நல்லதையே தேடித்தரும் என்பதையும் சுதீட்சணர் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு விளக்குகின்றன.
    சிறுவயதில் பெற்றோரை இழந்த சுதீட்சணன் எனும் சிறுவனை, அகத்திய முனிவர் சீடனாக ஏற்றுத் தனது ஆசிரமத்தில் வைத்துக் கொண்டார். இறைவனுக்கு வழிபாடு செய்யும் அனைத்து வழிபாட்டு முறைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவனும் இறைவழிபாட்டைச் சிறப்பாகச் செய்து வந்தான். இருப்பினும் சிறுபிள்ளைகளுக்கே உரிய குறும்பு அவனிடமும் இருந்தது.

    இந்நிலையில் ஒருநாள் சுதீட்சணனை அழைத்த அகத்தியர், அவனிடம் சாளக்கிராமத்தில் செய்யப்பட்ட நாராயணன் சிலை ஒன்றைக் கொடுத்தார். தான் ஒரு இறைத்தலத்திற்குச் செல்வதாகவும், தான் திரும்பும் வரை அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், தினமும் காலையில் நதியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, சிலையைச் சுத்தம் செய்து அலங்கரித்து வழிபாடு செய்ய வேண்டுமென்றும் சொல்லிச் சென்றார்.

    விளையாட்டுத்தனம் போகாத சிறுவன், நதியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சிலையை சுத்தம் செய்வதை விட, சிலையை நதிக்குக் கொண்டு சென்று சுத்தம் செய்து, அலங்கரித்து வழிபாடு செய்வது என முடிவு செய்தான். அப்படியே செய்தும் வந்தான். நதிக்கரையில் நாவல் மரம் ஒன்று இருந்தது. அங்கு வரும் சிறுவர்களுடன் சேர்ந்து சுதீட்சணனும் நாவல் மரத்தின் மேல் கல்லெறிந்து, கீழே விழும் பழங்களை எடுத்துச் சாப்பிடுவான். ஒருநாள் அந்த மரத்தின் உச்சியில் பெரிய நாவல் பழம் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது.

    சாபம்

    அந்தப் பழத்தை எப்படியும் பறித்துவிட வேண்டுமென்று நினைத்த அவன், அந்த மரத்தினருகில் கல் ஏதாவது இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தான். அவனுக்குச் சரியான கல் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் தான் கையில் வைத்திருந்த சாளக் கிராமத்திலான சிலையை மரத்தின் மேல் வீசினான். மரத்திலிருந்து அந்த நாவல் பழம் விழுந்தது. ஆனால், சிலை மரத்தின் கிளைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.

    சுதீட்சணன், அகத்தியர் வந்து சிலையைக் கேட்டால், என்ன பதில் சொல்வது என்று நினைத்து அச்சமடைந்தான். அங்கிருந்த சிறுவர்களிடம், மரத்தின் மேலேறி அந்தச் சிலையை எடுத்துத் தரும்படி கேட்டான். மரத்தின் பொந்தில் இருந்த பாம்புக்குப் பயந்து அவர்கள் மரத்தில் ஏற மறுத்து விட்டனர்.

    இதையடுத்து சுதீட்சணன் வருத்தத்துடன் ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றான். அங்கு அவன் எதிர்பாராத விதமாக, அகத்தியர் வந்து விட்டிருந்தார். அவர், ‘சுதீட்சணா! நாராயணர் சிலைக்குத் தினமும் வழிபாடு செய்தாயா? அதனை எடுத்து வா’ என்றார்.

    சுதீட்சணன் நாராயணன் சிலையை நாவல் பழம் பறிப்பதற்காக மரத்தின் மேல் வீசியதையும், அப்போது சிலை மரத்தின் கிளையில் மாட்டிக் கொண்டதையும் சொன்னான்.

    அதைக் கேட்ட அகத்தியருக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டது. உடனே அவர், ‘சுதீட்சணா! நான் உன்னிடம் கொடுத்துச் சென்ற வேலையைச் சரியாகச் செய்யத் தவறி விட்டாய். இனி நீ என் சீடனாக இருக்க முடியாது. செய்த குற்றத்திற்காக நீ காட்டிற்குள் சென்று தனியாக வாழ்ந்து துன்பப்படுவாய்’ என்று சாபமிட்டார்.

    சுதீட்சணன், ‘சுவாமி, சிறுவனான நான் விளையாட்டுத்தனமாகச் செய்த தவறை மன்னித்து, எனக்களித்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று வேண்டினான்.

    அவனுடைய வேண்டுதலில் கோபம் தணிந்த அகத்தியர், சிறுவன் மீது பரிதாபம் கொண்டார். அவர், ‘சுதீட்சணா, நீ சொல்வதும் சரிதான், சிறுவனான உனக்கு இப்படியொரு சாபத்தை நான் தந்திருக்கக் கூடாது. இருந்தாலும், கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெறமுடியாது. நீ நான் கொடுத்த நாராயணன் சிலையுடன் வந்தால், உன் சாபம் நீங்கிவிடும்’ என்றார்.

    சுதீட்சணன் சிலையை எடுத்து வந்து அகத்தியரிடம் கொடுத்து, தனது சாபத்தை நீக்கிவிடலாம் என்று நினைத்து நதிக்கரைக்குச் சென்றான். பின்னர் அந்த நாவல் மரத்தின் மீது ஏறினான். ஆனால், அங்கிருந்த பாம்பு அவனை மேலே ஏறவிடாமல் விரட்டியது. அதைக் கண்டு பயந்து போன அவன், அங்கிருந்து காட்டுக்குள் ஓடினான்.

    விமோசனம்

    காட்டிற்குள் சென்ற சிறுவன், அகத்தியரின் சீடனாக இருந்ததால் அவனுக்குக் காட்டிற்குள்ளிருந்த முனிவர்கள் அனைவரும் மதிப்பளித்து மரியாதை செய்து வந்தனர். காட்டிற்குள் வீணாகக் காலம் கழிந்து விடக் கூடாது என்று நினைத்த அவன், தனது குருவின் விருப்பப்படி நாராயணன் சிலை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று, நாராயணனை நினைத்துத் தவம் செய்து வந்தான்.

    ஐம்பதாண்டு காலம் கடந்துவிட்ட நிலையில், சுதீட்சணனும் முனிவராக மாறிவிட்டார். முனிவரான அவர் சாளக்கிராமத்தில் நாராயணன் சிலையைச் செய்து வழிபடத் தொடங்கினார். அவர் வழிபாடு செய்த அந்தச் சிலையை, இரண்டு குரங்குகள் எடுத்துச் சென்று அருகிலிருந்த ஏரி ஒன்றில் கொண்டு போய் வீசிவிட்டன. மறுநாளும் சுதீட்சணர் புதிதாகச் சிலை செய்து வழிபட்டார். அந்தச் சிலையையும் குரங்குகள் எடுத்துக் கொண்டு போய் ஏரியில் போட்டன.

    இப்படியே அவர் செய்யும் ஒவ்வொரு சிலையையும் குரங்குகள் ஏரியில் கொண்டு போய் வீசிக் கொண்டே இருந்தன. அகத்தியருக்குப் பிடித்த நாராயணர் சிலையை, தான் தொலைத்து விட்டதால்தான் குரங்குகள் தனக்கு இப்படித் தினமும் இடையூறு செய்வதாக நினைத்து அவர் வருத்தமடைந்தார்.

    குரங்குகள் இப்படிச் செய்ததைப் பொறுக்க முடியாத நிலையில் சுதீட்சணர் ஒருநாள், ‘குரங்குகளே! நான் தினமும் செய்து வழிபடும் சிலைகள் தண்ணீரில் மூழ்கிவிடுவதால்தானே, நீங்கள் அதை எடுத்துக் கொண்டு ஏரியில் மூழ்கச் செய்து விளையாடுகிறீர்கள். இனி நீங்கள் இருவரும் எந்தப் பொருளைத் தண்ணீரில் வீசினாலும், அது உள்ளே செல்லாமல், தண்ணீரில் மிதக்கும்’ என்று சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற அந்தக் குரங்குகளே நளன், நீலன் ஆகும்.

    அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சீதையைத் தேடி ராமன், லட்சுமணன் ஆகியோர் வானரப்படைகளுடன் இலங்கைக்குச் செல்ல முயன்ற போது, அனுமனுடன் சென்ற அந்த இரு குரங்குகளும், பிற குரங்குகள் கொண்டு வந்து தந்த கற்களைத் தண்ணீரில் போட்டன. அந்தக் கற்கள் கடல் நீரில் மிதந்ததால், ராமரும் அவரது வானரப்படைகளும் இலங்கை செல்வதற்கு எளிய முறையில் பாலம் அமைக்கப்பட்டது.

    சுதீட்சணர் அந்தக் குரங்குகளுக்கு அளித்த சாபம்தான், இப்படி எளிமையான முறையில் பாலம் அமைக்க உதவியது என்பதை அறிந்த ராமன், சுதீட்சணர் இருக்கும் இடம் தேடி வந்து அவருக்கு நன்றி சொன்னார். நாராயணரே, ராமனாக அவதரித்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த சுதீட்சணர், அவரை அழைத்துக் கொண்டு தனது குருவான அகத்தியரிடம் சென்றார்.

    ராமனே தன்னுடைய ஆசிரமம் தேடி வந்திருப்பதை நினைத்து அகத்தியர் மகிழ்ச்சியடைந்து அவரை வணங்கினார். அவருடன் வந்த சுதீட்சணர், ‘குருவே! நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது, தாங்கள் எனக்களித்த சாபத்தால், நானும் பல ஆண்டுகள் காட்டிற்குள் தனியாக இருந்து விட்டேன். எனது சாபம் நீங்க, தாங்கள் என்னிடம் கொடுத்த நாராயணனின் சிலையைக் கொண்டு வர வேண்டுமென்று சொன்னீர்கள். ஆனால், நான் உண்மையான நாராயணரையே உங்களிடம் கொண்டு வந்து விட்டேன்’ என்றார்.

    அகத்தியரும், ‘சுதீட்சணா, நீ சொல்வது சரிதான். நாராயணனுடன் நீ வந்து விட்டதால் நான் உனக்கு அளித்த சாபம் நீங்கிவிட்டது’ என்றார். சுதீட்சணரும், ‘என்னுடைய சாபத்தினை நீக்கி அருள் புரிந்த தாங்கள் மீண்டும் என்னைத் தங்களது சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார். அகத்தியரும் அவரை மீண்டும் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

    சிறுபிள்ளையாக இருக்கும் போது செய்யும் தவறுகள் அனைத்தும், அவர்கள் அறியாமையால் செய்த தவறுகள்தான் என்றாலும், அதற்கும் சிறிய தண்டனை உண்டு என்பதையும், ஆனால், அந்தத் தண்டனை அவர்களுக்குப் பிற்காலத்தில் நல்லதையே தேடித்தரும் என்பதையும் சுதீட்சணர் பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு விளக்குகின்றன.

    தண்ணீரில் மிதக்கும் கற்கள்

    சுதீட்சணர் அளித்த சாபத்தின்படி நளன், நீலன் எனும் குரங்குகள் ராமர் தனது படையுடன் இலங்கை செல்வதற்காக அமைத்த பாலத்திற்குப் பயன் படுத்தப்பட்ட கற்கள் தண்ணீரில் மிதப்பதைத் தற்போதும் காணமுடியும்.

    ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் அந்த மிதக்கும் கற்களில் சில கற்கள் இருக்கின்றன. அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கற்களை மிதக்க விட்டிருக்கிறார்கள். இன்னும் சில கற்கள் அங்கே வருவோர் கைகளால் தொட்டுப் பார்ப்பதற்காகத் தனியே வைக்கப்பட்டிருக்கின்றன.

    1964–ம் ஆண்டில் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி சிதைவிற்குப் பிறகு அந்தப் பகுதிக்கு வந்த வடநாட்டு சாதுக்கள் தனுஷ்கோடிக் கடலில் கரைப்பகுதியில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு வியப்படைந்தனர். அவர்கள் அங்கு மிதந்து கொண்டிருந்த கற்களில் சுமார் இரண்டாயிரம் கற்களைச் சேகரித்துச் சென்றனர்.

    அவர்கள் வடநாட்டிற்கு எடுத்துச் சென்ற கற்கள் பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரக கிருஷ்ணர் கோவில், ரிஷிகேஷ், பத்ரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் போன்ற இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன.
    Next Story
    ×