search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புதுவேட்டக்குடி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    புதுவேட்டக்குடி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    புதுவேட்டக்குடி முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஐம்பொன் தகடு பதித்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சக்தி விநாயகர், செல்லியம்மன், மாரியம்மன், அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவிலில் புதிதாக ஐம்பொன் தகடு பதிக்கப்பட்ட தேர் உருவாக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து கோவிலின் தேர் திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முத்துமாரியம்மனுக்கு பல்வேறு பூஜைகளும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தனி தனி சப்பரத்தில் செல்லியம்மன், மாரியம்மன், அய்யனார் சாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.

    அதை தொடர்ந்து நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், களபம், விபூதி, பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 10 மணிக்கு முத்துமாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, செண்டை வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக வீதியில் பவனி வந்தது.

    மாட வீதி, ரதவீதி உள்பட நான்கு வீதி வழியாக பக்தர்கள் படை சூழ தேர் அசைந்து ஆடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் திரண்டு நின்று முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் தேர் மாலை 6 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் குன்னம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஆன்மிக சான்றோர்கள் நீர் மோர், அன்னதானம் வழங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவடைகிறது.
    Next Story
    ×