என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி 7-வது நாளில் தேரோட்டமும், இரவு தெப்போற்சவமும் நடந்தது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 11 மணியில் இருந்து மாலை 3.30 மணிவரை தேரோட்டம் நடந்தது. அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் பங்கேற்று தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி நகரம் மற்றும் கிராமங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஓம் நமசிவாய.. ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. ஜெய் ஜெய் மாதா ஜெகன்மாதா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி, வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். சிறிய தேரில் கங்காதேவி, பெரிய தேரில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தேர்கள் மீது பக்தர்கள் உப்பு, மிளகுகளை வீசி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பலர் உப்பு, மிளகுகளை வீசி தங்களுக்கு நோய் நொடி வராமல் இருக்க வேண்டும் என வேண்டி கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களால் கோவிலின் மாடவீதிகள் நிரம்பின. பலர் தங்களின் வீட்டின் மேல்மாடியில் அமர்ந்து தேரோட்டத்தை கண்டு ரசித்தனர்.

    தேரோட்டத்தின்போது பக்தர்களிடையே தள்ளு முள்ளு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், குளிர்பானம், பானகம் ஆகியவை வழங்கப்பட்டது. அதன் பிறகு நேற்று இரவு 9 மணியளவில் கோவில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.
    தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.
    இந்த உலக வாழ்க்கை இன்பங்களால் நிரம்பியது. ஆனால் அந்த இன்பங்களின் மூலம் இறைவன் நம்மை சோதிக்கிறான் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    மனிதனை இறைவன் படைத்தது ஏன், எதற்காக?

    மனிதன் தன்னை வணங்க வேண்டும், தான் காட்டிய வழியில் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் கட்டளை, நோக்கம்.

    பூமியில் பிறந்த மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது தூதர்கள் மூலமும், மனிதகுலத்திற்கு வழிகாட்டியான திருக்குர்ஆன் மூலமும் அல்லாஹ் விளக்கி இருக்கின்றான்.

    ஆனால், மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம், நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பது சிந்திக்கத்தக்கது.

    இருப்பினும், நாம் எத்தனை தவறுகள் செய்தாலும், பாவங்கள் செய்தாலும் நம்மை மன்னிக்கும் குணமும், கருணையும் கொண்டவனாக அல்லாஹ் இருக்கின்றான். சர்வ வல்லமை உள்ள அல்லாஹ் கருணை மிக்கவன் என்பதை பல்வேறு திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் நாம் அறியலாம். அல்லாஹ்வின் கருணைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலகத்தை படைத்து, அது எப்படி இயங்க வேண்டும் என்று செயல்படுத்தி வருவது ஆகும். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறிக் கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து அதன்மூலம் பூமியை அது (வறண்டு) இறந்தபின் உயிராக்கி வைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான (ஊர்ந்து திரியும்) பிராணியை பரவ விட்டிருப்பதிலும், காற்று களைப் பலவாறாகித் திருப்பிவிட்டுக் கொண் டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத் திலும் சிந்திக்கும் சமூகத்தவர்க்கு சான்றுகள் இருக்கின்றன”. (திருக்குர்ஆன் 2:164)

    அல்லாஹ் மீது நம்பிக்கையும், இறையச்சமும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அறிந்த போதிலும் பெரும்பாலான மனிதர்கள் அதை பின்பற்ற ஆர்வம் காட்டுவதில்லை. உலக வாழ்க்கையில் நிரம்பி கிடக்கும் இன்பங்களின் மீதே மனிதனின் மனம் லயித்துக்கிடக்கிறது.

    பணம், சொத்துக்கள், பதவி, அழகு, ஆசை, பொறாமை... என்று பல்வேறு வகையில் மனித மனம் அலைபாய்கிறது. இதன் காரணமாக அவன் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றான். இறைவனுக்கும், இறை கட்டளைக்கும் மாறு செய்கின்றான். இதனால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் அவன் ஆளாகிறான்.

    அதுபோன்ற சூழ்நிலையில் பலர் மனந்திருந்தி, தான் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் அழுது மன்றாடி மன்னிப்பு கேட்பதுண்டு. அவ்வாறு தன்னிடம் மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்கும் பெருங்கருணை மிக்கவன் அல்லாஹ். இதை திருக்குர்ஆனில் இவ்வாறு இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்:

    “ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை யாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்”. (திருக்குர்ஆன் 4:110).

    தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.

    பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர், சென்னை.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதம் (மார்ச்) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியாக குறித்து அறிந்து கொள்ளலாம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    அதன்படி இந்த மாதம் (மார்ச்) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியாக 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தெப்போற்சவம் நடக்கிறது.

    18-ந் தேதி ஸ்ரீ லட்சுமி ஜெயந்தி, தும்பூர் தீர்த்த முக்கொடியும், 29-ந் தேதி அன்னமாச்சார்யா வர்தந்தியும் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம்மவுண்டில் மறைசாட்சி தேவசகாயம் திருத்தலம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்களில் 10 நாள் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம்மவுண்டில் மறைசாட்சி தேவசகாயம் திருத்தலம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    முதல் நாளான நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி போன்றவை நடக்கிறது. இதில் அருட்பணியாளர் பென்கர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பென்சிகர் மறையுரையாற்றுகிறார்.

    மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம், தொடர்ந்து கொடி நேர்ச்சை, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறும். பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    5-ந்தேதி இரவு 7 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஆனந்த் தலைமையில் திருப்பலி நடைபெறும்.

    6-ந் தேதி அதிகாலை 5 மணி திருப்பலி, 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சியில் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.

    மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு திருப்பலி, மறையுரை, தொடர்ந்து மறைக்கல்வி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

    11-ந் தேதி இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 12-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, இரவு 7 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தொடர்ந்து 10.30 மணிக்கு தேர்பவனி போன்றவை நடைபெறும்.

    13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து திருவிழா திருப்பலி, காலை 7.30 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 9 மணிக்கு திருப்பலி, மாலை 3.30 மணிக்கு தேர் பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் போன்றவை நடைபெறும்.

    14-ந் தேதி இரவு 7 மணிக்கு அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா தலைமையில் தேரடி திருப்பலி, 8.30 மணிக்கு கொடியிறக்கம் போன்றவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், இணை பங்குதந்தை ஆன்றனிபுரூணே, பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. பவானி மட்டுமின்றி 18 பட்டி கிராம மக்களுக்கும் அதிதேவதையாக இருக்கும் செல்லியாண்டியம்மன் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் வகையறா கோவில்களின் திருவிழா கடந்த பிப்ரவரி 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22-ந் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. 23-ந் தேதி கொடிஏற்று விழா நடந்தது.

    நேற்று செல்லியாண்டியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான சேறு பூசும் விழா நடந்தது. காலை 10 மணிக்கு செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பவானி நகரின் எல்லையில் உள்ள எல்லைமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் அழைத்தல் பூஜை நடந்தது. குதிரை துளுக்கி அனுமதி அளித்ததும் எல்லையம்மன் கோவிலில் இருந்து படைக்கல ஊர்வலம் தொடங்கியது. முத்துக்குடை, குதிரையுடன் பூசாரி படைக்கலத்தை சுமந்து வர பக்தர்கள் செல்லியாண்டியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

    ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் எல்லைமாரியம்மன் கோவில் அருகே தண்ணீரில் நனைந்த சேற்றினை எடுத்து உடலில் பூசிக்கொண்டனர். இதுபோல் பக்தர்கள் பலரும் பல வண்ண சாயப்பொடிகளை உடலில் பூசிக்கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பவானி காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் உடலில் காய்கறிகளால் ஆன மாலைகளை அணிந்து அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    சிவபெருமான், அம்மன், பத்ரகாளி, துர்க்கை அம்மன் வேடங்களிலும் பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இளைஞர்கள் பலர் அலுமினிய நிறத்தில் உடலில் பெயிண்ட் பூசி வந்தனர்.

    ஊர்வலம் வந்த பாதை நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்து வழிபாடுகள் செய்தனர். மேலும் காய்கறிகள், உணவுப்பொருட்கள், உப்பு-மிளகு, புத்தாடைகளை வீசி நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
    சித்தூரில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    சித்தூர் பெஸ்த தெரு குருவப்பா வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியையொட்டி மயானக்கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று 189-ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. கோவிலில் இருந்து உற்சவர் அங்காள பரமேஸ்வரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, நையாண்டி மேளம் இசைக்க, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் ஹை ரோடு, காந்தி சாலை, சந்தப்பேட்டை ரோடு உள்பட முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்து, நீவா நதி கரையை அடைந்தது. அப்போது பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப அம்மனுக்கு பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து ஆடி, பாடி வந்தனர்.

    நீவாநதிக்கரையில் 55 அடி நீளத்தில் தட்சன் உருவப்பொம்மைைய சிறப்பு அலங்காரத்துடன் வடிவமைத்து வைத்திருந்தனர். தட்சனின் இரு கண்களில் 2 முட்டைகளை வைத்தனர். ஒரு பக்தர் மீது அங்காள பரமேஸ்வரியம்மன் அருள் வந்து ஆடி, கையில் வாளுடன் தட்சனை வாதம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி காண்பித்தார். பின்னர் அந்த மூட்டைகளை பக்தர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

    அந்த முட்டையை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும், குடும்ப கஷ்டம் தீரும், களிமண்ணால் செய்யப்பட்ட தட்சனின் மண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டால் உடல் நலப் பாதிப்பு சரியாகும். புதிய வீடு கட்டுபவர்கள் தட்சன் உருவ மண்ணை பூமி பூஜையில் வைத்து வீடு கட்டினால் நன்மை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்ேகற்று அம்மனை வழிபட்டனர். அப்ேபாது பக்தர்கள் கொள்ளு, நவ தானிய சுண்டல் ஆகியவற்றை படையலிட்டு வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில் கோவில் தர்ம கர்த்தா, பிரதான அர்ச்சகர் குமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனா். பக்தர்களுக்கு அன்னதானம், மோர், குளிர்பானம் ஆகியவை வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டு இருந்தது.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 32-வது ஆண்டு பிரதிஷ்டை-அசன பண்டிகை நடக்கிறது.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் பிரசித்தி பெற்ற சீயோன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    நாளை காலை 5.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெறுகிறது. இதில், அருட்திரு ஜஸ்டின் யேசுதாஸ் தேவ செய்தி அளிக்கிறார். இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்களுடன் ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் கலந்துகொண்டு இறைவனை ஆராதிக்கிறார்கள்.

    அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு ‘அசன விருந்து’ சிறப்பு ஆராதனையுடன் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து வழங்கப்படுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் எஸ்.செல்வராஜ், பொருளாளர் பீட்டர் தங்கதுரை மற்றும் சபை ஆயர் செல்விதாசன், கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஐக்கியம், ஓய்வுபெற்ற பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்துள்ளனர்.

    விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு சீயோன் ஆலய ஆயர் செல்விதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
    கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) தெப்பத்திருவிழாவும், 5-ந்தேதி கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
    கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த மாதம் 15-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 22-ந்தேதி கோவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கோனியம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிம்ம, அன்னம், வெள்ளையானை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோவிலில் நடப்பட்ட அக்னி கம்பத்திற்கு தினமும் பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.

    இதன்பின்னர் நேற்று முன்தினம் கோனியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓதுவார் கண்ணப்பனின் திருமுறை பாராயணத்தோடு பக்தர்கள் சூழ கோனியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக ராஜவீதி தேர்முட்டியில் உள்ள கோனியம்மன் திருத்தேர் அலங்கரிக்கும் பணி நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதையொட்டி கோவை கோனியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் உற்சவர் அதிகாலை பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.

    தேரோட்டத்தையொட்டி நேற்று காலை முதல் திருத்தேர் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அவர்கள் திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். அப்போது பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி திருத்தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 2.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரா சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் செந்தில் வேலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து தேர்நிலைத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஆடி அசைந்து ஒப்பணக்கார வீதியை நோக்கி வந்தது. திருத்தேரின் முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக திருத்தேரின் இருபுறமும் நீண்ட கயிற்றை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். திருத்தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மாலை 5.10 மணிக்கு தேர்நிலைத்திடலை வந்து அடைந்தது.

    கோவில் தேரோட்டத்தையொட்டி இந்து அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று கோவை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்தை ஒழங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் கூட்டத்தில் திருடர்கள் ஊடுருவி உள்ளனரா? என்பது குறித்து சீருடை அணியாத போலீசாரும் கண்காணித்தனர். இதுதவிர பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) குதிரை வாகனத்தில் கோனியம்மன் திருவீதி உலா வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) தெப்பத்திருவிழாவும், 5-ந் தேதி கொடியிறக்கமும், 7-ந்தேதி வசந்த விழாவுடன் மாசி தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிப்பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்ட சக்தி கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று காலை கோவிலை வந்தடைந்தது.

    அதன்பிறகு விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலையில் கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் உற்சவ அம்மனுக்கு 16 கரங்களுடன் ஆவேச அங்காளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 9.45 மணிக்கு உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றிலும் உலா வந்தார். 10 மணிக்கு பூசாரிகள் பிரம்ம கபாலத்தை (கப்பறைமுகம் என்று கூறுவார்கள்) எடுத்து ஆடியபடி மயானத்தை நோக்கி புறப்பட்டனர்.

    10.30 மணிக்கு மயானத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆவேச அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள், வயலில் விளைந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர்.

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் சிலர் அம்மன் வேடமிட்டும், கோழிகளை கடித்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    முன்னதாக அம்மன் வேடமிட்டிருந்தவர்களை கண்ட பக்தர்கள் சாலையில் படுத்தனர். அவர்கள் மீது அம்மன் வேடமிட்டவர்கள் நடந்து சென்று ஆசி வழங்கினர். இவ்வாறு செய்தால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை தொடர்ந்து இரவில் ஆண் பூதவாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் இன்று(வியாழக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி(சனிக்கிழமை)தீ மிதி திருவிழாவும், 7-ந் தேதி தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.

    இதையும் படிக்கலாம்...ராஜயோகம் தரும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள்
    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி வரலாம்.
    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. அந்த எளிமையான 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி வரலாம். அந்த நேரத்தில் இறைவனுக்கு துளசியும், சுத்தமான நீரும் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் விசேஷம். இதன் மூலம் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி ஏற்படுவதோடு, ராஜயோகம் கைகூடும். இறுதியில் நாராயணனின் திருவடிகளையும் அடைய முடியும்.

    அத்தகயை சிறப்புமிக்க 24 திருநாமங்களை இங்கே பார்க்கலாம்.

    ஓம் கேசவாய நமஹ

    ஓம் சங்கர்ஷனாய நமஹ

    ஓம் நாராயணாய நமஹ

    ஓம் வாசுதேவாய நமஹ

    ஓம் மாதவாய நமஹ

    ஓம் ப்ரத்யும்னாய நமஹ

    ஓம் கோவிந்தாய நமஹ

    ஓம் அனிருத்தாய நமஹ

    ஓம் விஷ்ணவே நமஹ

    ஓம் புருஷோத்தமாய நமஹ

    ஓம் மதுசூதனாய நமஹ

    ஓம் அதோக்ஷஜாய நமஹ

    ஓம் த்ரிவிக்ரமாய நமஹ

    ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ

    ஓம் வாமனாய நமஹ

    ஓம் அச்சுதாய நமஹ

    ஓம் ஸ்ரீதராய நமஹ

    ஓம் ஜனார்தனாய நமஹ

    ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ

    ஓம் உபேந்த்ராய நமஹ

    ஓம் பத்மநாபாய நமஹ

    ஓம் ஹரயே நமஹ

    ஓம் தாமோதராய நமஹ

    ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 2 ஆண்டுக்கு பின் தற்போது தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று மாசி அமாவாசையையொட்டி திரளாக பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை தங்களது முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள் மற்றும் மூலவர் வீரராகவ பெருமாளை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு வீரராகவர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு பின் தற்போது தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தெப்ப உற்சவத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தைச் சுற்றி வந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கட்சி அளிப்பார்.

    இன்று இரவு திருவள்ளூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ராஜாஜிபுரம் காளமேகம் தெருவில் உள்ள ஓம் ஸ்ரீ பவானி அம்மன், ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவள்ளூரை அடுத்த புட்லூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஒதப்பை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மேல் நல்லாத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம்.
    தஞ்சை மாநகரில் கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீசுவரர் என்னும் பெரு உடையார் கோவில் தொடங்கி, அதன்பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் தங்களது பக்தியினையும் கலை உள்ளத்தையும் வெளிப்படுத்த சிறியதும் பெரியதுமான நூற்றுக்கணக்கான சிவ, வைணவ ஆலயங்களை கட்டியுள்ளனர்.

    அவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல பழமையான தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் வெண்ணாற்றின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. குடந்தை - திருவையாறில் இருந்து தஞ்சைக்கு நுழையும் வழியிலும், தஞ்சை பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    அதன் நேர் எதிரே திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமான வீரநரசிம்மர் எழுந்தருளியிருக்கும் தஞ்சை மாமணிக் கோவில் இருப்பது சரித்திரப் புகழுக்குக் சான்றாகும்.

    சுவாமி அம்மன்

    மூன்று நிலை கொண்ட சிறிய ராஜகோபுரத்தை தரிசித்தபடி உள்ளே நுழைந்தால் பலி பீடம், கொடி மரம், நந்தி, நீண்ட மண்டபத்தைத் தாண்டினால் பெரிய உருவில் துவார பாலகர்கள் இருக்கிறார்கள். கருவறையில் தஞ்சபுரீசுவரர். இவர் மேற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பானதாகும்.

    அதே மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் ஆனந்தவல்லி அம்மன் அருளாட்சி செய்கிறார். அம்மன் சன்னிதி அருகில் ஆடவல்ல பெருமானின் செப்புத் திருமேனி திகழ்கின்றது. சோழர் காலக் கற்றளியாக விளங்கும் இத்திருத்தலத்தில் முன்மண்டபம் மராட்டிய அரசி காமாட்சி பாய் என்பவரால் நிறுவப்பட்டுள்ளது.

    தேவகோட்டத்தில் துர்க்கை, லிங்கோத்பவர், பிரம்மன் இருக்கிறார்கள். துர்க்கைக்கு எதிரில் சிறிய கோவிலில் சண்டிகேசுவரர் அமர்ந்திருக்கிறார். வெளிச்சுற்றில் சுவாமிக்கு எதிரே கிழக்கு பார்த்தபடி விநாயகர், வில் ஏந்திய முருகப்பெரு மான், அய்யப்பன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன.

    தட்சணாமூர்த்தி சன்னிதிக்கு எதிரேயும் கொடிமரத்துக்கு அருகேயும் தலவிருட்சமான வன்னிமரங்கள் உள்ளன. அதனடியில் வன்னி லிங்கமும் இருக்கின்றன. பக்கத்தில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது.

    கோவிலின் திருச்சுற்றில் வடக்கு மதில் ஓரம் தெற்கு நோக்கிய படி பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார். எல்லா தோஷங்களையும் போக்கும் வல்லமை படைத்தவராக விளங்குவதால் பக்தர்களை ஈர்த்து அருள் பாலித்து வருகிறார்.

    குபேரன் வழிபாடு

    இத்திருக்கோவிலில் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்பு உள்ளது. இது குபேரன் வழிபட்ட தலம். ஆம்.. செல்வத்துக்கு அதிபதியான குபேரன் செல்வங்களை எல்லாம் இழந்து வாடினார். செல்வங்களை மீட்பதற்காக ஒவ்வொரு சிவாலயமாகத் தங்கி வழிபாடு செய்து வந்தார்.

    இந்த தஞ்சபுரீஸ்வரிடம் தஞ்சமடைந்து வழிபாடு செய்து வந்தபோது அவருக்கு மீண்டும் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்றதாகவும், அதனால் இந்த இறைவன் 'குபேரபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு சொல்கிறது.

    அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி சிந்தையைக் கவருகிறது. அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம்.

    தஞ்சம் அடைந்தவரைக் காக்கும் இறைவன்

    தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால் இறைவன் தஞ்சபுரீஸ்வரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் என்ற காரணப் பெயர் விளங்குவதாகவும் பெருமையுடன் சொல்கிறார்கள்.

    தஞ்சகன் வதம்

    எழில் சூழாத சமீ வனம் எனப்படும் இந்த வன்னிக் காட்டில் பராசர முனிவர் முதலான ரிஷிகள் சிவபூஜை செய்து தவம் இருந்த போது, அவர்களுக்கு அசுரர்கள் இடையூறு செய்து வந்தனர். முனிவர்கள் சிவனை வேண்ட, சிவனின் ஆணைப்படி சிவசக்தியான ஆனந்தவல்லி அம்மன் ஏகவீரா, ஜயந்தி, மர்தினீ, சண்டகாதினி ஆகிய சக்திகளாக உருவெடுத்து, தண்டகன், வீரன், வஞ்சகன், தஞ்சகன் ஆகிய அசுரர்களை அழித்தாள்.

    தஞ்சகன் என்னும் அரக்கன் மரணத் தருவாயில் தன்னுடைய பெயரால் இவ்வூர் விளங்க வேண்டும் என்று மனமுவந்து வேண்டினான். அதனால் 'தஞ்சபுரி' என்று பெயர் வந்ததாகவும் இறைவன் தஞ்சபுரீசுவரர் என்றழைக்கப்படுவதாகவும் தஞ்சை நகரின் புகழ் கூறும் 'அளகாபுரி மகாத்மியம்' என்ற நூல் விளக்குகிறது.

    'அளகை' என்றால் குபேரன் என்பதனால் அளகாபுரி என்பது குபேரனின் ஊர் என்பது புலனாகிறது. இதன் மூலம் குபேரன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு பேறு பெற்ற செய்தி உறுதியாகிறது. அருகே உள்ள வெண்ணாறு தீர்த்த நதியாக விளங்குகிறது.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட  இத்திருக்கோவிலில் பிரதோஷம், திருவாதிரை, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
     
    டாக்டர்.ச.தமிழரசன்,
    தஞ்சாவூர்.
    ×