
நேற்று செல்லியாண்டியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான சேறு பூசும் விழா நடந்தது. காலை 10 மணிக்கு செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பவானி நகரின் எல்லையில் உள்ள எல்லைமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் அழைத்தல் பூஜை நடந்தது. குதிரை துளுக்கி அனுமதி அளித்ததும் எல்லையம்மன் கோவிலில் இருந்து படைக்கல ஊர்வலம் தொடங்கியது. முத்துக்குடை, குதிரையுடன் பூசாரி படைக்கலத்தை சுமந்து வர பக்தர்கள் செல்லியாண்டியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் எல்லைமாரியம்மன் கோவில் அருகே தண்ணீரில் நனைந்த சேற்றினை எடுத்து உடலில் பூசிக்கொண்டனர். இதுபோல் பக்தர்கள் பலரும் பல வண்ண சாயப்பொடிகளை உடலில் பூசிக்கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பவானி காய்கறி சந்தையை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் உடலில் காய்கறிகளால் ஆன மாலைகளை அணிந்து அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சிவபெருமான், அம்மன், பத்ரகாளி, துர்க்கை அம்மன் வேடங்களிலும் பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இளைஞர்கள் பலர் அலுமினிய நிறத்தில் உடலில் பெயிண்ட் பூசி வந்தனர்.
ஊர்வலம் வந்த பாதை நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்து வழிபாடுகள் செய்தனர். மேலும் காய்கறிகள், உணவுப்பொருட்கள், உப்பு-மிளகு, புத்தாடைகளை வீசி நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.
இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.