search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.
    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது. விழாவில் கோவில் அறக்கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் வருகிற 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா, 9-ந் தேதி தேரோட்டம், 10-ந் தேதி சனீஸ்வரர் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா, 11-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவின் எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அய்யா வைகுண்ட சாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 27-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி கொலுவீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்கினார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் தலைமைப்பதியை சுற்றிவந்து முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு கூடியிருந்த திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டாம் திருவிழா பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    முத்திரி கிணற்றங்கரையில் இருந்து புறப்பட்ட குதிரை வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களான செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் வழியாக இரவு 9 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. கிராமங்களுக்கு வாகனம் செல்லும் போது அப்பகுதி அய்யாவழி பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து ஆசி பெற்றனர். இரவு 10 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யா வைகுண்ட சாமியின் தவக்கோல காட்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. கலிவேட்டை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை நடைபெறும் பத்தாம் திருவிழாவில் அய்யா வைகுண்ட சுவாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் இரவு வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் நடைபெறுகிறது.
    ஆகாச கருடன் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள்.
    ஆகாசக் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

    மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவும் என்கிறார்கள் ஜோதிடர்கள். இதற்கு சாகா மூலி என்ற பெயரும் உண்டு.

    இந்தக் கிழங்கில் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. வீட்டிற்கும் நமக்கும் ஏற்படும் திருஷ்டி, தோஷங்களைப் போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம் முதலான மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள்.

    பெரும்பாலான வீடுகளில் இந்த கிழங்கை திருஷ்டிக்காக வீடுகளில் கட்டி தொங்க விடுகின்றனர். வராந்தாவின் மேல் தளத்திலோ அல்லது நிலவரையின் நடுப்பகுதியிலோ இதனை கட்டி வைப்பதால் வீட்டிற்குள் எந்தவித விஷமுள்ள ஜந்துக்களும், சிறிய பூச்சிகளும் கூட வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதன் வாசம் அவைகளுக்கு பிடிப்பதில்லையாம். உங்கள் வீட்டில் எந்த வகையான விஷ பூச்சிகளும் வராமல் இருப்பதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முக்கியமாக பில்லி, சூனியம், ஏவல் போன்ற எத்தகைய தீய சக்திகளும் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்த கிழங்கு அதனை உட்கிரகித்து தன்னை தானே தற்கொலை செய்து கொண்டு அழிந்து விடும். அதாவது கொடிகள் வளராமல் காய்ந்துவிடும். இதனால் அந்த வீட்டில் இருப்போர் பல பிரச்சனைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். பின்னர் அதற்குரிய பரிகாரங்கள் மேற்கொண்டு அல்லது பூஜைகள் செய்து விட்டு புதியதாக ஒரு கிழங்கை வாங்கி இதே போல் கட்டி வைத்து விடலாம்.

    மாறாக உங்கள் வீட்டில் தீய சக்திகளன்றி நல்ல சக்திகள் இருக்குமேயானால் இந்த கிழங்கு முளைவிட்டு பசுமையான கொடிகளாக வளரக்கூடியது. மிகவும் அழகாக காட்சியளிக்கும். பசுமை தன்மை இருக்கும் வரை உங்கள் இல்லம் மகிழ்ச்சிகரமான இல்லமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இதன் விசித்திரமான தோற்றம், வித விதமான தோற்றம் காரணமாக இதனை கட்டி தொங்க விட்டால் அதன் நிழல் கருடன் பறப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும். இதனால் பாம்புகள் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். ஆகாயத்தில் கருடன் பறப்பது போன்ற தோற்றமுடையதால் இந்த பெயர் பெற்றது என்று கருதப்படுகிறது.

    வீட்டில் திருஷ்டி முழுவதும் கழிந்துவிடும். இல்லத்தில் பொன்னும் பொருளும் சேரும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
    திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.
    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ர பதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப்படி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர் சார்பாக கொடிமர கயிறு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி தொடங்கியது. கொடிப்பட்டம் வெள்ளி பல்லக்கில் வைத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோவிலின் உள் பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வரச் செய்து பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு பஞ்ச வாத்தியங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது.

    மாத்தூர் தந்திரி சங்கரநாராயணரு கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம், அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது. விழாவில் 11-ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல் 12-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா,11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் வரசித்தி விநாயகர் திருவீதி உலா நடந்தது. நேற்று காலையில் 5.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து உற்சவர் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    பின்னர் விநாயகர் மாடவீதிகளை வலம் வந்தார். நேற்று இரவு மங்களகிரி விமான புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவ விழாவையொட்டி காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. இன்று காலை சூரிய பிரமை பிறப்பாடு நிகழ்ச்சி நடந்தது மாலையில் சந்திரபிரமை புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் தினமும் மங்கள கிரி விமானம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனம், குதிரை வாகனம், மயில்வாகனம் ஆகியவற்றில் வீதி உலா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந்தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். அன்று இரவு 7 மணிக்கு ஒய்யாரி உற்சவம் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. 12-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகர் வீதி உலாவும், 10 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

    13-ந் தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அதன்பிறகு 14-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா வருகின்ற 13- தேதி வரை நடக்கிறது
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா வருகின்ற 13- தேதி வரை நடக்கிறது அதில் நேற்று முதல் 11-ந்தேதி வரை 9 நாட்கள் வசந்த உற்சவமாகவும், 12-ந்தேதி, விசாக விழாவும் நடக்கிறது திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலையில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கும், சண்முகர் சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத சண்முக பெருமானுக்கும் காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    மேலும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதேபோல தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 12-ந் தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது.விழாவையொட்டி மதுரை மாநகர் மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக பால்குடம், பன்னீர் குடம், பறவைக் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி என்று பல்வேறு வித விதமான காவடிகள் எடுத்துவந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். அப்போது குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். வருகின்ற 13-ந்தேதி மொட்டையரசு திடலுக்கு சுவாமி புறப்பாடுநடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    மதுரையை அடுத்த அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலய பூஜையுடன் திருப்பணி தொடங்கியது.
    மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் கள்ளழகர் கோவிலின் உபகோவிலான பிரசித்தி பெற்ற ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வற்றாத நீரூற்றாக வழிந்து கொண்டிருப்பது நூபுர கங்கை எனும் புனித தீர்த்தமாகும். ராக்காயி அம்மன் திருப்பாதம் பகுதியில் மேற்கு திசைபார்த்து வழிந்து கொண்டிருக்கும் தீர்த்தம் அபூர்வமானது. இந்த திருத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்த அரசும், அறநிலையத் துறையும் முடிவு செய்தது. அதன்படி பல ஆண்டு காலத்திற்கு பின்பு நேற்று முன்தினம் இந்த கோவிலில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

    இதை தொடர்ந்து நேற்று காலையில் புண்யாகவாசனம், மகாபூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க தொடங்கியது, மேலும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த நூபுர கங்கை புனித தீர்த்த குடங்களை கோவில் உள் பிரகாரத்திலே ஊர்வலமாக பட்டர்கள் எடுத்து சென்றனர். பின்னர் பாலாலய பூஜைகள், முகூர்த்தக்கால் நடும் பணியும் நடந்தது. இதை தொடர்ந்து திருப்பணி தொடங்கியது. இந்த பூஜைகள் நிகழ்வின்போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் காலை 11 மணிக்கு பிறகு காத்திருந்த ஏராளமான பக்தர்கள் நூபுர கங்கையில் நீராட ேகாவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட வரிசையில் சென்று நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடி, பாலாலய பூஜைகள் நடைபெற்ற யாகசாலையையும் பார்த்து தரிசனம் செய்து சென்றனர். விழாவில் முன்னதாக துணை ஆணையர் ராமசாமி, நகை சரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள்செல்வன், மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். பகை விலகும். ஆபத்து அகலும்.
    ஓம் நமோ பகவதே, கருடாய;
    காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
    கால நல லோல ஜிக்வாய பாதய
    பாதய மோஹய மோஹய
    வித்ராவய வித்ராவய ப்ரம
    ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ
    வைகாசி வசந்த விழாவையொட்டி புதுமண்டபத்தில் உலா வந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதம் தோறும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த திருவிழா புதுமண்டபத்தில் நடக்கும். குறிப்பாக இந்த ஆண்டு, புதுமண்டபத்தில் இருந்த அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு, அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வெகு விமரிசையாக திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுபோல், புது மண்டபம் வண்ண வண்ண மலர்களாலும், பழங்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வைகாசி வசந்த திருவிழா நேற்று மாலை தொடங்கியது. கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடன் பரிவார மூர்த்திகளுடன் புறப்பட்டு அம்மன் சன்னதி, கீழ ஆவணி மூல வீதி வழியாக புதுமண்டபத்திற்குள் எழுந்தருளினர்.

    அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வந்து பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர், சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. கடைகள் இன்றி... கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த விழாவில் புதுமண்டபத்தில் தண்ணீர் இன்றி, ஏராளமான கடைகளுக்கு இடையே சாமி உலா வரும். இந்த நிலையில் இந்தாண்டு புதுமண்டபத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு பழங்காலத்தில் நடைபெற்றது போல மண்டபத்தைச் சுற்றி அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, உலா நடந்து மைய மண்டபத்தில் சாமி-அம்மன் எழுந்தருளினர்.கடைகள் அகற்றப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் புதுமண்டபத்தில் அமர்ந்து சாமியை தரிசிக்க முடிந்தது.

    இந்த வைகாசி வசந்த உற்சவமானது வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. முதலாம் நாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும். பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். 12-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும்.
    நாளை வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    நாளை வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து தரிசியுங்கள். நம் கஷ்டங்களையும் வாழ்வில் ஏற்பட்ட நஷ்டங்களையும் தீர்த்தருள்வான் கந்தகுமாரன்.

    மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.

    சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!

    சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.

    வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

    நாளை முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை விரதம் இருந்து வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!
    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விவசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருச்சியை அடுத்த குமாரவயலூரில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகப்பெருமான் அருணகிரிநாதரின் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருளியச் செய்த தலமான இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் இரவு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா நடக்கிறது.

    9-ம் திருநாளான வருகிற 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் ரதாரோகணம் எனப்படும் தேரோட்டம் மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடக்கிறது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், 14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், “ஆதிரத்தினேஸ்வரர்” எனப் பெயர் வந்தது. இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.
    மூலவர்     -  ஆதிரத்தினேஸ்வரர்
    அம்மன்     -  சினேகவல்லி
    தல விருட்சம்  -  வில்வம்
    தீர்த்தம்     -  சூரிய புஷ்கரணி, க்ஷீர குண்டம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்
    பழமை     -  1000 வருடங்களுக்கு முன்

    வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன், “வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்” என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் “அஜகஜபுரம்” ஆனது. தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.

    இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, “கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும்” என வரம் பெறுகிறான். அத்துடன் “பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்” என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை “அஜகஜசேத்திரம்” ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார். இதுவே காலப்போக்கில் “திரு” எனும் அடைமொழியோடு “திருவாடானை” என ஆனது.

    ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு.

    அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், “திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்” என்றார். அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு, தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.

    ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார். “சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல இரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும்” எனக் கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், “ஆதிரத்தினேஸ்வரர்” எனப் பெயர் வந்தது. இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.

    பாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. இத்தலத்திற்கு பாரிஜாதவனம் வன்னிவனம் வில்வ வனம் ஆதிரத்னேஸ்வரம் அஜகஜபுரம் பதுமபுரம் முத்திபுரம் என்பன வேறு பெயர்களாகும். கோயில் கோபுரம் மிக உயர்ந்தது 9 நிலை 130 அடி உயரம் கொண்டதாகும். இங்கு விநாயகர், முருகர், சூரியன், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விசுவநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர் மாணிக்கவாசகர், பைரவர், சந்திரன், தண்டாயுதபாணி முதலிய சந்நிதிகள் உள்ளன. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர்.

    அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, “சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்” பாடியுள்ளார். சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று.

    திருவிழா:

    வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.

    பிரார்த்தனை:

    சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

    சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.

    நேர்த்திக்கடன்:

    திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோயில்களில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கிறார்கள்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    இருப்பிடம் :

    மதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. தேவகோட்டையிலிருந்து 10 கி.மீ கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். மதுரை காரைக்குடி தேவகோட்டை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
    ×