என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அய்யா வைகுண்டசாமி அவதார தின விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சாமித்தோப்பை நோக்கி அவதார தின விழா ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    அய்யா வைகுண்டசாமி அவதார தின விழாவையொட்டி ஒவ்வொரு வருடமும் நாகர்கோவிலில் இருந்து சாமித்தோப்பை நோக்கி அவதார தின விழா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த வருட அவதார தின விழா ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது.

    இதற்கிடையே நேற்று காலையில் திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்ட அவதார தின வாகன பேரணி இரவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைந்தது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து அய்யாவழி பக்தர்கள் அவதார தின விழா ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக நாகராஜா திடலில் குவிந்தனர்.

    இன்று காலை 6 மணிக்கு அவதார தின விழா ஊர்வலம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து புறப்படுகிறது. இந்த ஊர்வலத்தை அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பால. ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். வக்கீல் ஜனா.யுகேந்த் தலைமை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் முத்துக்குடை முன்செல்ல கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக தலைமைப்பதியின் முக்கிய பகுதியான முத்திரிகிணற்றங்கரையை வந்தடைகிறது. அங்கிருந்து தலைமைப்பதியின் பெரிய ரத வீதி மற்றும் தலைமை பதியையும் சுற்றிவந்து தலைமைப்பதியில் கிழக்கு வாசல் முன்பு ஊர்வலம் முடிவடைகிறது.

    மேலும் வைகுண்ட சாமி அவதார தின விழாவை முன்னிட்டு தலைமைப்பதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தலைமைப்பதி வளாகத்தில் ஆங்காங்கே பந்தல்கள் தோரணங்கள் கட்டி, இரவு நேரங்களில் மின் விளக்குகளின் ஜொலிப்பில் காட்சி அளித்தது.

    அவதார தின விழாவில் பல மாவட்டங்களில் இருந்து அய்யாவழி மக்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், செல்வராஜன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஊர்வலம் செல்லும் வழியில் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக திருவனந்தபுரத்தில் கிள்ளிப்பாலம் சிங்காரதோப்பு பதியில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு வாகன பேரணி தொடங்கியது. பேரணியை பாலபிரஜாபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அய்யா வைகுண்டர் ஆராய்ச்சி மைய தலைவர் எஸ். அகிமோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் பி.முருகேசன் மற்றும் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயர் 32 அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார் என்பது சிறப்பு. இந்த கோவிலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி.

    மூர்த்தி : ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர்.

    தலச்சிறப்பு : இத்தலத்தில் ஆஞ்சநேயர் 32 அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார் என்பது சிறப்பு. இவருக்கு சாற்றப்படும் வடை மாலை மிகச் சிறப்புடையது. இந்த வடை மாலைக்கு ஆறாயிரம் வடைகள் தயார் செய்யப்பட்டு மாலையாக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

    தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தான் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பிறகு கோயில் கட்டிடம் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு இம்மாதிரி கட்டப்பட்ட முதல் கோயில் இது தான் என்று கருதப்படுகிறது. தொண்ணூறிரண்டு அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டு தங்கத்தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆகம சாஸ்திரப்படி கோயில் கட்டபட்டது. ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர் ஆகியவர்களுக்கு பிறகு சந்நதிகள் கட்டப்பட்டன.

    தல வரலாறு : இத்தலம் 1995-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகளால், இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டு இப்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது. "ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி'' என்ற பெயருடன் ஆஞ்சநேயர் எழுந்தளியுள்ளார்.

    நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

    கோயில் முகவரி :
    அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்,
    ராம் நகர், நங்கநல்லூர்,
    சென்னை - 600 061.
    திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளக்கரையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன.
    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் இருந்து வைத்திய வீரராகவர் ஸ்ரீதேவி, பூ தேவி சமேதராக புறப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து குளக்கரையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன.

    பின்னர் மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பக்குளத்தில் 3 முறை உலா வந்தார். கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை வலிய படுக்கை பூஜை நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் ஐ.ஜி. அன்பு நேரில் ஆய்வு செய்தார்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு தீபாராதனை, அதைத்தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவது, பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து யானை மீது சந்தனக்குட ஊர்வலம் பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைகிறது. 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசையும், 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், பகல் 12 மணிக்கு யானை மீது களப பவனியும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்ற மகா பூஜை நடைபெறுகிறது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குமரி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை தென் மண்டல ஐ.ஜி.அன்பு மண்டைக்காட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அவர் கடற்கரை, கோவில் வளாக பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதன்பிறகு போலீசாருக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? எனவும் போலீஸ் மெஸ்சிற்கு சென்றும் ஆய்வு நடத்தினார். அப்போது எஸ்.பி.பத்ரி நாராயணன், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
    பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள்.
    சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி வந்தனர்.

    இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா வரும் மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குண்டம் விழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) கோபி செட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி 7-ந் தேதி இரவு வரம் கேட்டல் மற்றும் பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்குகிறது.

    அதனைத்தொடர்ந்து 15-ந் தேதி அம்மன் சப்பரம் திருவீதிஉலாவும், திருகம்பம் சாட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து 21-ந் தேதி இரவு தீக்குண்டம் வார்ப்பு விழாவும், 22-ந் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கர்நாடக, தமிழக பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு விழா நடப்பதால் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    மயிலாப்பூர் சாய்பாபா கோவில் சீரடி சாய்பாபா மீது கொண்ட பக்தியினால் ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி அவர்களால் 1941 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தலச்சிறப்பு

    இக்கோவிலில் துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ள இடம் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. மற்ற பாபா கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் நீங்களே சன்னதியில் பாபாவின் வெண்பளிங்குச் சிலையை தொட்டு வணங்கலாம். மாலை, சால்வைகள் சார்த்தலாம். அவர் பாதங்களை தொட்டு கீழே விழுந்து வணங்கலாம். கோவிலில் நுழைந்து அவர் சன்னதி முன் நிற்கும் போது ஒரு தெய்வீக அலையை, உணர்வை நிச்சயம் அனுபவிக்கலாம்.

    பாபாவின் சன்னதி, துவாரகாமாயி அனா, குருஸ்தான் மற்றும் பின்புறம் உள்ள நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியை உள்ளடக்கிய ஹால் ஆகியவை கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்தாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது. நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியின் மேல் உள்ள வெண் பளிங்குச்சிலை அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன பாபாவின் உற்சவ மூர்த்தி ஆகியவை மனதில் பக்தி பரவச மூட்டும் வகையில் அமைந்துள்ளது.

    தல வரலாறு : இக்கோவில் சீரடி சாய்பாபா மீது கொண்ட பக்தியினால் ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி அவர்களால் 1941 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சீரடி சாயிபாபாவை பற்றி பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இவர் பாபா பற்றியும், அவரது உபதேசங்களையும் கட்டுரையாக எழுதி உள்ளார். இவரது அரிய முயற்சியால் உருவான ஆலயம் இன்று அதி நவீன வளர்ச்சி அடைந்துள்ளது.

    நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

    கோயில் முகவரி : அருள்மிகு சாய் பாபா திருக்கோவில்,

    51B, V C கார்டன் தெரு, அலமேலு மங்கபுரம், மயிலாப்பூர், சென்னை - 600 004.
    கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வாழைப்பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 வாழைப்பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைய வேண்டியும், கோடை வெப்பம் மற்றும் வறட்சியில் இருந்து மக்களை காக்க வேண்டியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்க வேண்டியும் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து உற்சவர் ராமர், லெட்சுமணர், சீதை, அனுமனுக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.
    வியாழக்கிழமை விரதம் இருந்தால் திருமண தடை நீங்கும் என்ற ஐதீகம் உண்டு. இந்த விரதத்தை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்? எப்படி விரதம் இருக்க வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

    பொதுவாக வியாழக்கிழமை என்றாலே அது குருபகவானுக்கு உகந்த நாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே..."சுக்லபட்சம்" என சொல்லப்படும் வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு வருடத்தில் இதுபோன்ற வியாழக்கிழமை 16 முறை வரும். இந்த வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். இதுபோன்ற விரதத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செய்து வந்தால் குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் அந்த ஒரு நபருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரகஸ்பதி என குறிப்பிடப்படும் வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள், அன்றைய தினத்தில் காலை எழுந்தவுடன் தலைக்கு குளித்து, மஞ்சள் நிற ஆடையை அணிந்து, எதையும் அருந்தாமல் அருகே உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று குரு பகவானை வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிறப்பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகளை வைத்து நைவேத்தியம் செய்து, சந்தனம் மஞ்சள் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    அதாவது மஞ்சள் நிறத்திலேயே அனைத்தும் பயன்படுத்தி மகிமை பெறுவதற்கான அறிகுறி இது. அதன்பின்னர் குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறந்தது. முக்கியமாக இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அன்றைய தினத்தில் உணவு எதுவும் உண்ணக்கூடாது. மேலும் அன்றைய நாள் முழுவதும் குரு பகவான் தொடர்பாக மந்திரங்கள் சொல்லி பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.

    அதேபோன்று அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் ஆடைகள், இனிப்புகள் என மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். தானம் செய்து முடித்த பிறகு விரதத்தையும் முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு மூன்று வருடங்கள் வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து  வந்தால் வாழ்வில் குரு பகவானின் அருள் என்றென்றும் இருக்கும்.பல யோகங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

    குறிப்பாக திருமண தடை நீங்கும். ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகதோஷம் எதுவாக இருந்தாலும் கழிந்துவிடும். தொழில் வியாபாரத்தில் வருமானம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இது போன்று பல நன்மைகளை குரு பகவான் விரதம் மூலம் பெற முடியும் என்பது ஐதீகம்.
    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமியின் 190-வது அவதார தின விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி வரும் வாகன பவனி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    அய்யா வைகுண்ட சாமியின் அவதார தின விழாவை முன்னிட்டு வருடம்தோறும் திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சாமி தோப்பை நோக்கி அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் வாகன பேரணி நடைபெறுவது வழக்கம். இந்த வருட வாகன பேரணி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணியை பால.லோகாதிபதி தொடங்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை வகிக்கிறார். இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடலில் வந்தடைகிறது.

    அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது.

    இந்த வாகன பவனிக்கு ஜனா.வைகுந்த் தலைமை வகிக்கிறார். இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இதற்கிடையே இன்று மாலை 6 மணிக்கு ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை வகிக்கிறார். பையன் கிருஷ்ண நாமமணி முன்னிலை வகிக்கிறார். பையன் செல்லவடிவு தீபம் ஏற்றுகிறார்.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்து கொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் இன்று இரவு நாகர்கோவில் நாகராஜா திடலை வந்தடைகின்றனர். பின்னர் நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். அய்யாவழி அறிஞர்கள் பலர் பேசுகின்றனர். நூல் வெளியீட்டு, விழா குறுந்தகடு வெளியீட்டு விழா ஆகியவை நடைபெறுகிறது. சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    அய்யா வைகுண்ட சாமி 190-வது அவதார தின விழா ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    அவதார தின விழாவை முன்னிட்டு நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி கடந்த 28-ந்தேதி 70 அடி நீள மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டு, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கம்பத்தை பக்தர்கள் சுமந்து வந்து, திரவுபதியம்மன் கோவிலில் கொண்டு வந்து வைத்தனர்.

    சிவராத்தியையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் மகாசிவராத்திரி விரதம் இருந்தனர். அத்துடன் கோவில் நடை விடிய, விடிய திறந்து வைக்கப்பட்டது. கொடியேற்று விழாவையொட்டி நேற்று காலை ஆற்றங்கரைக்கு பக்தர்கள் கம்பத்தை எடுத்து சென்று, அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    இதை தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேள, தாளம் முழுங்க கம்பத்தில் கட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு செய்த பின் கொடிகம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    8-ந் தேதி காலை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 14-ந்தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடுகிறது. 17-ந்தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலமும் நடக்கிறது. 18-ந் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 19-ந் தேதி காலையில் நடக்கிறது. இதை தொடர்ந்து தேர் ஊர்வலமும், 20-ந் தேதிதேர் நிலை நிறுத்தலும், மாலையில் ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் நடக்கிறது. 21-ந் தேதி காலையில் மஞ்சள் நீராடுதலும், இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளில் புருஷா மிருக வாகனத்தில் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி வரை மகாசிவராத்திரியையொட்டி சுப்ரபாதம் இசைக்கப்பட்டது. மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் புருஷா மிருக வாகனத்தில் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

    நேற்று மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருச்சி உற்சவமும் நடந்தது. மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், குறைந்த எண்ணிக்கையில் முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    12 ராசிக்காரர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் தடையில்லா வருமானத்தை பெற முடியும் என்பது நிச்சயமான உண்மை.
    மேஷ ராசிக்காரர்கள் வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருவதால் உங்களுடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும்.

    ரிஷப ராசிக்காரர்கள் வேலைக்கு செல்லும் பொழுது வழியில் இருக்கும் பசுக்களுக்கு தானமாக ஏதாவது தீவனத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும். உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும்.

    மிதுன ராசிக்காரர்கள் உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்க அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று பச்சைப் பயறு தானம் செய்து வரலாம். அது போல் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் கொடுத்து வழி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

    கடக ராசிக்காரர்கள் உங்கள் வீட்டில் வெளிப்புறமான இடங்களில் அல்லது மொட்டை மாடிகளில் மண் சட்டியில் தண்ணீரை எப்பொழுதும் நிரப்பி வையுங்கள். அதனை குடிக்க வரும் பறவைகளுக்கு தாகம் தீர்ந்தால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும். சிவன் கோவிலுக்கு திங்கள் கிழமையில் பசும்பால் வாங்கி அபிஷேகம் செய்து வரலாம்.

    சிம்ம ராசிக்காரர்கள் இரவு தூங்கும் பொழுது தலைக்கு பக்கத்தில் ஒரு செம்பு சொம்பில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் தெளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி வருமானம் பெருகும் என்பது ஐதீகம். கிழக்கு பகுதியில் செடிகள் வைத்திருந்தால் அந்த செடிகளுக்கு ஊற்றலாம் நல்ல பலன் கிடைக்கும். செம்பு அல்லது பித்தளை மட்டும் பயன்படுத்துவது உத்தமம்.

    கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானுடைய பச்சை நிறத்தை புதன் கிழமைகளில் உடுத்திக் கொள்வது அதிர்ஷ்டத்தைத் தரும். புதனுடைய அனுகிரகம் இருந்தால் தான் வருமான தடைகள் நீங்கும். ஒரு சிறு கைகுட்டையாவது அன்றைய நாளில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கோவிலில் இருக்கும் பசுக்களுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவு கொடுப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

    துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்தாலும், வந்த வழியே சென்று விடும். இந்த சூழ்நிலை மாறி செல்வ செழிப்பு உண்டாக திங்கள் கிழமை தோறும் அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இளநீர், பசும்பால், பன்னீர் போன்றவற்றை உங்களால் முடிந்த அளவிற்கு தானம் செய்யலாம்.

    விருச்சிக ராசிக்காரர்கள் நிறைய வருமான ரீதியான பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி வரும் நாட்களில் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக, முருகன் கோவிலுக்கு சஷ்டி நாட்களில் அபிஷேகப் பொருட்கள் மற்றும் கடலை பருப்பு நைவேத்தியம் செய்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

    தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் நிற உடை உடுத்தி, வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, படிக்கத் தெரியாதவர்கள் அதனை பாடல்கள் மூலம் ஒலிக்கச் செய்வது நன்மை தரும். பின்னர் ஐந்து முக குத்து விளக்கு ஒன்றில் தாமரை தண்டு திரியை போட்டு, நெய் தீபம் ஏற்றிவர வருமானத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும். பகைவர் தொல்லை நீங்கி செல்வ செழிப்பும் ஏற்படும்.

    மகர ராசிக்காரர்கள் துளசிச் செடியை வளர்ப்பது யோகம் தரும். கட்டாயம் இதை செய்யுங்கள். துளசிச்செடி இல்லாதவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணை தீபம் ஏற்றி வரலாம். துளசி செடி வைத்திருப்பவர்கள் சனிக்கிழமைகளில் துளசி செடிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர வருமானத்தில் இருக்கும் தடைகள் யாவும் நீங்கும்.

    கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் சனி பகவானை வணங்குவது மிகவும் விசேஷமானது. கோவிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நேராக நீர்க்காமல், ஒரு புறமாக நின்று எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து சனிக்கிழமையில் உங்களால் முடியும் பொழுது செய்து வந்தால் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

    மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது விசேஷமானது. உங்கள் ராசிக்கு குரு மற்றும் தட்சிணாமூர்த்தி செல்வ செழிப்பை கொடுப்பார்கள். அன்றைய நாளில் மஞ்சள் நிற உடை அல்லது மஞ்சள் கைக்குட்டையாவது கையில் வைத்துக் கொண்டு, இவர்களுக்கு மஞ்சள் நிற நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது யோகத்தை தரும்.
    ×