search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை : அந்த மூன்று பேரில் நாம் யார்?
    X

    தவக்கால சிந்தனை : அந்த மூன்று பேரில் நாம் யார்?

    இயேசுவின் அன்பிற்கு முடிவே கிடையாது. அந்த அன்பில் அனைவருக்கும் இடம் உண்டு. என் குடும்பம், நட்பு, சமூகம் ஆகிய இவற்றில் ஒருவர், தான் மற்றவரை எப்படி அன்பு செய்கிறேன்? என்று சிந்திக்க வேண்டும்.
    இயேசு பந்தியில் அமர்ந்திருக்கிறார். சீடர்கள் அவரோடு உடனிருக்கின்றனர். இயேசுவின் இரவு உணவு அது. அதுமட்டுமின்றி அவரின் இறுதி உணவும் கூட அதுவே ஆகும். உணவு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. தாவரங்கள், விலங்குகளுக்கு உணவு, வெறும் உடல் வளர்ச்சிக்காகவே பயன்படுகிறது. ஆனால் மனிதர்களாகிய நமக்கு, உணர்வு வளர்ச்சிக்காக மற்றும் உறவு வளர்ச்சிக்காக உணவு பயன்படுகிறது.

    நம் வாழ்வில், நாம் காணும் மூன்று உறவு நிலைகளை, மூன்று நபர்கள் வழியாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கின்றோம். (யோவா 13:21-33, 36-38) காட்டிக்கொடுக்கும் அன்பு (யூதாசு), மார்பில் சாயும் அன்பு (யோவான்), மறுதலிக்கும் அன்பு (பேதுரு) ஆகும். முதல்வகை உறவுநிலை, யூதாசு மனநிலையை கொண்டிருக்கும். உணவறையில் உடன் அமர்ந்திருந்தாலும் காட்டிக்கொடுக்க, “எனக்கு என்ன தருவீர்கள்?“ என்று விலை பேச துடிக்கும்.

    இரண்டாம் வகை அன்பு, யோவானின் அன்பு. மார்பில் சாய்ந்து இதயத்துடிப்பை கேட்கும் அளவிற்கு நெருக்கமாக இருக்கும். இந்த அன்பு துணிச்சல் மிக்கது. “யார்? என்ன? எது? ஏன்?“ என அனைத்தையும் அது கேள்வி கேட்கும். மூன்றாம் வகை அன்பு, பேதுரு போல மறுதலிக்கும். கொஞ்சம் அன்பு செய்யும். கொஞ்சம் விலகி கொள்ளும். தான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன் எனச்சொல்லும். ஆனால் ஓடிப்போய் விடும்.



    இந்த மூன்று வகை மனிதர்களின் அன்பையும் தாண்டி இயேசுவின் அன்பும் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதுதான் “இறுதி வரை செய்யும் அன்பு.“ இயேசுவின் அன்பிற்கு முடிவே கிடையாது. அந்த அன்பில் அனைவருக்கும் இடம் உண்டு.

    ஆகையால்தான் தன்னுடன் உண்பவர்கள் காட்டிக்கொடுத்தல், மார்பு சாய்தல், மறுதலித்தல் என மூன்று உறவு நிலைகளில் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் சமநிலையோடு இயேசு பார்க்கின்றார். மற்றவர்களின் அன்பால் அவர் மகிழ்ந்து குதிக்கவும் இல்லை. மற்றவர்கள் காட்டிக்கொடுத்தல் மற்றும் மறுதலிப்பால் அவர் சோர்ந்து கவலைப்படவும் இல்லை.

    என் குடும்பம், நட்பு, சமூகம் ஆகிய இவற்றில் ஒருவர், தான் மற்றவரை எப்படி அன்பு செய்கிறேன்? என் உறவு நிலை எப்படி இருக்கிறது? காட்டிக்கொடுக்கிறேனா? இதயத்துடிப்பை கேட்கிறேனா? மறுதலிக்கிறேனா? அல்லது இயேசு போல சமநிலையில் அனைவரையும் தழுவிக்கொள்கிறேனா? என்று சிந்திக்க வேண்டும்.

    அருட்திரு. அ.சாம்சன் ஆரோக்கியதாஸ், உதவி இயக்குனர்,

    திண்டுக்கல் பல்நோக்கு சமூகபணி மையம்.
    Next Story
    ×