என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘சர்கார்’ படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ‘இது என்ன மாயம்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்‘ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

    இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். நரேந்திரநாத் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.



    அடுத்து போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இந்த நிலையில், கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார். தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து இப்படி மாறியிருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் மெலிந்த உடலமைப்பை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கீர்த்தி சுரேஷின் இந்த ஒல்லியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    செல்வசேகரன் இயக்கத்தில் விக்ராந்த் - அர்த்தனா பினு நடிப்பில் உருவாகி இருக்கும் `வெண்ணிலா கபடி குழு 2' படத்தின் முன்னோட்டம்.
    சாய் அற்புதம் சினிமாஸ் சார்பில் பூங்காவனம், ஆனந்த் இணைந்து தயாரித்துள்ள படம் `வெண்ணிலா கபடி குழு 2'.

    2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.

    மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இசை - செல்வகணேஷ், ஒளிப்பதிவு - இ.கிருஷ்ண்சாமி, படத்தொகுப்பு - அஜய், கலை - சக்தி வெங்கட்ராஜ், சண்டைப்பயிற்சி - சூப்பர் சுப்பராயன், பாடல்கள் - கபிலன், விஜயசாகர், நடனம் - தினேஷ், தயாரிப்பு - பூங்காவனம், ஆனந்த், எழுத்து - சுசீந்திரன், இயக்கம் - செல்வ சேகரன்.



    படம் குறித்து இயக்குனர் செல்வ சேகரன் கூறுகையில்,

    1987-ஆம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளோம்.

    நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பை தத்ருபமாக படமாக்கியுள்ளோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக "வெண்ணிலா கபடி குழு 2" படம் அமையும் என்றார்.

    வெண்ணிலா கபடி குழு 2 டீசர்:

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்பார்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன், ரஜினியின் இளமை ரகசியம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மற்றொரு வேடத்திலும் வருகிறார். அதை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரஜினி குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:


    ரஜினி சார் அருமையானவர். அவரது சுறுசுறுப்பு அவரை இளமையாக வைத்திருக்கிறது. தளபதி படத்திற்குப் பிறகு அவரை படம் பிடிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் நிலையில், தளபதி 64 படத்தை இயக்கப்போவது யார் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடக்கிறது.

    விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ், அருண்ராஜா காமராஜ் பெயர்கள் அடிபட்ட நிலையில், விஜய் - லோகேஷ் கனகராஜ் உடன் இணைவது உறுதியாகி இருப்பதாக விஜய்க்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இந்த படம் குழந்தைகள் ரசிக்கும்படியாக பேண்டஸி கலந்த திரில்லர் பாணியில் உருவாகுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா நடிப்பதாகவும், ராஷ்மிகா மந்தானா நடிப்பதாகவும் சில வதந்திகள் பரவி வருகிறது. விஜய், தளபதி 63 படத்தை முடித்த பிறகு படத்தின் நாயகி மற்றும் மற்ற கதபாத்திரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

    அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா, வர்ஷா பொலம்மா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கு இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கைவசம் படங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் சமூக வலைதளத்தில் 100 நாள் உடற்பயிற்சி சவாலை ஏற்றிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் கையில் தற்போது புது படம் எதுவும் இல்லை. கமல்ஹாசனுடன் நடிக்க ஒப்பந்தமான இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. 

    அவர் நடிப்பில் உருவான பாரிஸ் பாரிஸ் படம் மட்டும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளராக மாறி தெலுங்கில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கவில்லை.



    புது வாய்ப்புகளுக்காக கவர்ச்சி படங்களாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடும் காஜல் அடுத்து புது சவால் ஒன்றை விடுத்துள்ளார். தொடர்ந்து 100 நாள்கள் உடற்பயிற்சி செய்யும் சவால் ஒன்று இணையத்தில் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த சவாலை காஜல் அகர்வால் ஏற்றிருக்கிறார். மேலும், தனக்கு உடற்பயிற்சி அளிக்கும் பயிற்சியாளரைப் புகழ்ந்து பதிவு ஒன்றும் பகிர்ந்து இருக்கிறார்.

    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் நிலையில், இந்த படத்தில் எஸ்.பி.பி ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
    விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இளையராஜா இசயைில் படத்தின் பாடல்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    காப்புரிமை பிரச்சனை காரணமாக இளைராஜா - எஸ்.பி.பி. இடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில், இருவரும் சமீபத்தில் சந்தித்து கட்டித் தழுவிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில், இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடவிருப்பது இசை ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பழனிபாரதி எழுத்தில் “ வா வா என் மகனே “ என்னும் வரிகளில் தாலாட்டு பாடலாக இது உருவாகிறது.



    முன்னதாக நீண்ட இடைவேளைக்கு பிறகு இளையராஜா இசையில், ஜேசுதாஸ் ஒரு பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தில் சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார்.

    விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்து, பின்னர் கூட்டி நடிப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.
    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடித்த தேவி-2 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியதாவது,

    “பிரபுதேவா, தமன்னாவை வைத்து நான் இயக்கிய தேவி படம் நன்றாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தேன். ஒரு மனிதருக்குள் இரண்டு பேய்கள் புகுந்து ஆட்டி படைப்பதுபோல் திரைக்கதை அமைத்தேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தால் தேவி 3-ம் பாகம் எடுப்பேன்.



    தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம்.

    ஜெயலலிதா தனது 16-வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். எனவே அவரது 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்தும், பின்னர் கூட்டியும் நடிக்கிறார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும் வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார் என்பதே படத்தின் கருவாக இருக்கும் என்றார்.

    இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட விமர்சனங்களை உருவாக்கியது.

    இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருந்தனர். மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்தி பதிப்பையும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்குகிறார். இந்தியில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடக்கும் ஃபென்டாசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது.

    தன்னுடைய புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவருக்கு கோபமாக பதிலடி கொடுத்து பதிவு செய்திருக்கிறார் நடிகை திரிஷ்யா ரகுநாத்.
    நடிகைகள் சமூகவலை தளங்களில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. மலையாள நடிகை திரிஷ்யா ரகுநாத். ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 

    உடலை இறுக்கப்பிடித்திருக்கும் ஈரமான உடையில் கவர்ச்சியான ஒரு படத்தை வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர் ஒருவர், ’உங்கள் இமேஜை நீங்களே ஏன் இப்படி கவர்ச்சி படத்தை வெளியிட்டு கெடுத்துக்கொள்கிறீர்கள்? ஒரு சகோதரனாக இதை சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி தந்திருக்கிறார் திரிஷ்யா.



    ‘நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் ஓப்பனாக சொல்லணும்ன்னா என்னுடைய மார்பகத்தை நான் மூடிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை நான் வெட்டி எறியமுடியாது. அது எல்லாம் உடலில் இயற்கையாக அமைந்தது. அதை ஒருபோதும் நான் வெளிக்காட்டவில்லை. முடிந்தவரை மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிக்கோங்க.. நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என கோபமாக பதில் அளித்தார்.
    காதல் கண் கட்டுதே, ஏமாலி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அதுல்யாவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது.
    ‘சாட்டை 2’, ‘நாடோடிகள் 2’ என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி. அதே நேரம் டுவிட்டரிலும் பிசியாக இருக்கிறார். `காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர். அதன் பிறகு `ஏமாலி’ என்கிற படத்தின் வாயிலாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். 

    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிர்ந்து வருவார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.



    இது குறித்து தனது பக்கத்தில், ‘’எனக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அன்பு, ஆதரவை தவிர பெரியது வேறு எதுவும் இல்லை. எனக்கு ஆதரவு மற்றும் அன்பை அளித்த அனைவருக்கும் நன்றிகள்’’ என தெரிவித்துள்ளார்.
    அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராட்சசி’ டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள்.

    அதன்படி வெளியான ‘ராட்சசி’ டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும் இதில் ஜோதிகா, கீதா ராணி என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த டிரைலரில் ஜோதிகா பாட்டில் உடைப்பது, கம்பீரமாக பேசுவது என நடிப்பில் அசத்தி இருக்கிறார். கீதா ராணி ரொம்ப திமிர்ல என்ற வசனம் ரசிக்க வைத்திருக்கிறது. 



    இந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
    தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேவி 2’ படத்தின் விமர்சனம்.
    தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.

    அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.

    நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 



    தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார். 



    அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.
    ×