என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகிவரும் "சூரரைப்போற்று" படத்தின் கதை குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு நடிகர் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் "சூரரைப்போற்று" படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

    இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது. 



    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்திய பேட்டியில் சூரரைப்போற்று படம் குறித்து நடிகர் சூர்யா கூறியதாவது: "சூரரைப்போற்று" வரலாற்று படம் என்று செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் இது உண்மையல்ல. இருப்பினும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இயக்குனர் சுதா கொங்காரா குறித்து பேசிய அவர், சுதா என் உடன்பிறவா தங்கை, ஆயுத எழுத்து படத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். இறுதிச்சுற்று படத்தின்போதே அவருடன் பணியாற்ற விரும்பினேன். இருப்பினும் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
    பிரபல இயக்குனராக கரு.பழனியப்பன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக வேட்டைக்காரனாக களமிறங்க இருக்கிறார்.
    இயக்குனர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் பணியாற்றிய சந்திரா இயக்குனராக அறிமுகமாகும் படம் 'கள்ளன்'. இதில் இயக்குனர் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடித்துள்ளார். படம் குறித்து சந்திரா கூறியதாவது: வெவ்வேறு காலக்கட்ட பின்னணியில் உருவான கதை இது. 1988-89-ல் ஒரு கதையும், 1975-ல் இன்னொரு கதையும் நடக்கும்.

    தேனி அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு வேட்டையாடுவதை தவிர, தனது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. வேட்டையாடுவதை அரசாங்கம் தடை செய்யும்போது, காலம் அவனுடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை பதிவு செய்துள்ளேன். 



    வேட்டைக்காரனாக கரு.பழனியப்பன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிதா அறிமுகமாகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
    அமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ராட்சசன் படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 3 மலையாள படங்களும் கைவசம் வைத்துள்ளார். ஆடை படத்தில் அரைகுறை உடையில் இருப்பதுபோன்ற முதல் தோற்ற புகைப்படம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்தனர்.



    யூ அல்லது யூஏ சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக ஏ சான்றிதழை அளித்துள்ளனர். இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்.
    இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன் என்று சென்னையில் நடைபெற்ற இசை விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
    இளைஞானி இளையராஜாவுக்கு இன்று 76-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சாலி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு முன்பு ரசிர்கள் திரண்டனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த இளையராஜா ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அதன்பின் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர். பின்னர் இளையராஜா நிருபர்களிடம் கூறும்போது:- எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றார். 

    இன்று மாலை இசை கொண்டாடும் இசை என்ற பெயரில் இசை நிகழ்ச்சி பூந்தமல்லியில் நடந்தது. இதில் இளையராஜா தான் பல்வேறு கால கட்டங்களில் இசை அமைத்த பாடல்களை பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அப்போது அவர் பல்வேறு சுவராசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

    இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன். இசைக்கலைஞர்கள் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.
    ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் `கள்ளபார்ட்' படத்தின் முன்னோட்டம். #Kallapart #ArvindSwami
    விக்ரம் நடித்து வெற்றி பெற்ற `ஸ்கெட்ச்' படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் `கள்ளபார்ட்' படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள். 

    வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். 

    வசனம் - ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவு - அரவிந்த்கிருஷ்ணா, இசை - நிவாஸ் கே.பிரசன்னா, கலை - மாயபாண்டி, எடிட்டிங் - இளையராஜா, ஸ்டன்ட் - மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை - வி.ராமச்சந்திரன், தயாரிப்பு - எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்,
    திரைக்கதை, எழுத்து, இயக்கம் - ராஜபாண்டி.

    சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Kallapart #ArvindSwami
    பல இந்தி படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப், டாப்சியின் கேம் ஓவர் படத்தின் விழாவில் பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
    தேவ் டி, குலால், கேங்ஸ் ஆப் வசிப்பூர் (1,2) போன்ற இந்தி படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப் தனது மனதில் பட்ட கருத்துக்களை எந்த தயக்கமுமின்றி வெளிப்படையாகக் கூறுபவர். 

    டாப்சியின் கேம் ஓவர் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனுராக் காஷ்யப் பேசியபோது, ‘பத்திரிகையில் பணிபுரியும் புகைப்பட கலைஞர்கள் வேறு ஒருவரின் தனிப்பட்ட இடங்களில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். 



    நான் தனிப்பட்ட வேலையை செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் என்னை புகைப்படம் எடுத்தால் எனது அந்தரங்கத்தில் ஊடுருவுவதாகத் தான் அர்த்தம்' என்றார். புகைப்பட கலைஞர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இந்த விழாவில் அனுராக் காஷ்யப்பை மட்டும் புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் மறுத்துவிட்டனர்.
    பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
    பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமாக படைக்கும் ராஜமவுலி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் கதையை, சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் இயக்கி வருகிறார். 

    இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் ஐதராபாத் நகரத்தில் தொடங்கியது. ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தை சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்துள்ளார். 

    படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் டெய்ஸி எட்கர் ஏப்ரல் மாதம் படத்திலிருந்து விலகினார். எனவே அவரது கதாபாத்திரத்தில் யாரை நடிக்கவைப்பது என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது. 



    பரினீதி சோப்ரா அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    2016ம் ஆண்டில் "மிஸ் சவுத் இந்தியா" அழகி பட்டம் பெற்ற மீரா மிதுனின் பட்டம் பறிக்கப்பட்டது என மிஸ் சவுத் இந்தியா அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
    8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். திரைத்துறையில் நுழைவதற்கு முன்பாகவே பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் குயின் ஆப் சவுத் இந்தியா உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். 

    தற்போது நடிப்புடன் சேர்த்து அழகிப் போட்டிகளை ஒருங்கிணைத்து வருகிறார் மீரா மிதுன். ‘மிஸ் தமிழ்நாடு டிவா 2019’ என்ற அழகிப் போட்டியை ஜூன் 3 -ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அழகிப் போட்டியை நடத்தக்கூடாது என்று அவரை சிலர் மிரட்டுவதாக அவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். 



    தொழில் போட்டி காரணமாக தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக நிருபர்களிடம் கூறினார். இந்நிலையில் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை தவறுதலாக பயன்படுத்துவதாகக் கூறி மீரா மிதுனிடம் இருந்து பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விவேக், விஜய் 63 முழுவதும் மிரட்டல் என்று கூறியிருக்கிறார்.
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் சமீபத்தில் படமாக்கினார்கள்.

    இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி ரிலீஸ் என்பதால் படக்குழுவினர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். 



    இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விவேக், ரசிகர் ஒருவர் ‘தளபதி 63’ படம் குறித்து கேள்வி கேட்டதற்கு, ‘விஜய் 63 கம்பிளிட் மிரட்டல்’ என்று கூறியிருக்கிறார்.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம், சவுந்தரராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    வரலட்சுமி நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘சேஸிங்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சரத்குமார் சென்று படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
    தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருபவர் வரலட்சுமி. தற்போது இவரது நடிப்பில் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் உருவாகி வருகிறது. இப்படத்தை கே.வீரக்குமார் இயக்கி வருகிறார். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடும் வீடியோவை வரலட்சுமி பகிர்ந்தார்.



    வரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருந்தார்.

    தற்போது இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகரும், வரலட்சுமியின் தந்தையுமான சரத்குமார் சென்றிருக்கிறார். வரலட்சுமியின் சண்டைக் காட்சியை பாராட்டியதும் மட்டுமில்லாமல், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
    'மத்திய சென்னை', 'காட்டுப்பய காளி' ஆகிய படங்களில் நடித்த ஜெய்வந்த், காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு கூலிங்கிளாஸ் வழங்கியிருக்கிறார்.
    கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது. அதிலும் குறிப்பாக  போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது.

    நாம் அனைவரும் நமது கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்ற வகையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படாவண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தருகிறார்கள்.



    அத்தகைய மாமனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், முதற்கட்டமாக எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு கூலிங்கிளாஸ் வழங்கியிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

    ஜெய்வந்த் 'மத்திய சென்னை', 'காட்டுப்பய காளி' ஆகிய திரைப் படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது 'அசால்ட்' எனும் அதிரடி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    காஞ்சனா முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கில் இருந்து விலகிய ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் அந்த படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார்.
    தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.

    பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் இந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

    அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.



    மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது. 

    தன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்‌ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.
    ×