என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    'திமிரு பிடிச்சவன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
    ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். 

    தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். அறிமுக இசையமைப்பாளர் சைமன் கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். 



    இப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ரம்ஜான் தினத்தன்று எதிர்பார்த்த அளவு தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இப்படத்தை ஜூன் 7ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது.
    நடிகர் சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து ஹன்சிகாவின் 50 வது படமான "மகா" திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு விமானியாக நடித்துள்ளார். இப்படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகள் இந்த வார இறுதிக்குள் எடுத்து முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

     

    இப்படத்தை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சிம்பு இடையிலான காதல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
    புதுமுக கலைஞர்கள் நடிப்பில் அண்ணன் - தம்பி பாசத்தோடு காதலையும் கலந்து குலசேகரபட்டினம் என்ற புதிய படம் வேகமாக வளர்ந்து முடிவடைந்துள்ளது.
    ஆ.ஜார்ஜ் வில்லியம், ஜேம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் என்ற நிறுவனத்தின் சார்பில் குலசேகரபட்டினம் படத்தை தயாரித்து வருகிறார்.

    இந்தப் படத்தை பல முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆள்வான், கிராமத்து பண்பாடு, கலாசாரத்தோடு அண்ணன்-தம்பி பாசத்துடன் காதலையும் கலந்து நெஞ்சை நெகிழ வைக்கும் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.

    இதில் கதாநாயகனாக ஜேம்ஸ் என்ற புதுமுக நடிகர் தனது முதல் படத்திலேயே அண்ணன்-தம்பி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார். வில்லனாக படத்தின் இயக்குனர் ஆள்வினும், காமெடி வேடத்தில் ஜூனியர் டி.ராஜேந்திரன் என்பவரும் நடித்திருக்கிறார்கள். உமா, பிரியா, மதுபாலா, ஜெயக்குமார், பூபதி போன்ற புதுமுக கலைஞர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.



    இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, சுப்பம் மாதரம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில், பசுவந்தனை கிராமம் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.

    ஒளிப்பதிவை விஜய் கவனிக்க, தஞ்சை செல்வா, பிரவீன், சங்கர் என்ற மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சில படங்களில் இசையமைப்பாளர்களாக பணியாற்றியவர்கள். பாடல்கள் - தஞ்சை சிகரன், எடிட்டிங் - கே.துரைராஜ், நடனம் - பவர்சிவா, கலை - மணி, கதிர், ஜெயக்குமார், மக்கள் தொடர்பு - பெருதுளசி பழனிவேல், இணைத் தயாரிப்பு - பிரபா வில்லியம், தயாரிப்பு - ஆ.ஜார்ஜ் வில்லியம், எழுத்து, இயக்கம் - ஆள்வான்.
    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான படம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    கடந்தாண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய காலா மற்றும் 2.0 ஆகிய 2 படங்கள் வெளியானது. 2 படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் உலகளவில் சுமார் 750 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்தது. 



    இந்நிலையில் இப்படம் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படம் சீனாவில் வருகிற ஜூன் 12-ம் தேதி சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதன்மூலம் இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பிரபல இயக்குநரான பா.இரஞ்சித், மக்களை அரசியல் மற்றும் சட்டரீதியாக விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம் என்று கூறியிருக்கிறார்.
    கலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார்.

    அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய "நீலம் பண்பாட்டு மையம்" இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.



    வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் "டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி" என்ற இரவு பாடசாலையினை தொடங்கி வைத்திருக்கிறார். 

    "இந்த இரவு பாட சாலையின் மூலம், அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அறிவார்ந்தவர்களாக நெறிப்படுத்துவதே நோக்கம். இதைப்போலவே தமிழகம் முழுக்க இருக்கிற கிராமங்களிலும் இதனை செயல்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க ஒத்துழைத்த ஜெய்பீம் பேரவை மற்றும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியோருக்கு நன்றிகள்" என்றார் இயக்குநர் பா.இரஞ்சித்.
    பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் என்னுடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் தயாரிப்பாளருக்கு லாபம் தான் என கூறினார்.
    சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ரசிகர்கள் கொடுக்கும் நம்பிக்கை தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஜெயிக்கும் போது ஒரு அணியாக நிற்பது போல் தெரியும். தோற்கும் போது  தான் தனியா நிற்கிறோம் என்பது புரியும்.

    ஆனா தோற்கிறதோ தனியா நிற்கிறதோ பிரச்சனையல்ல. நிற்கிறோம்கிறது தான் பிரச்சனை. நான் நிற்கிறேன். கடைசி படம் சரியாக போல. ஆனா அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. இதெல்லாம் ஒரு விளையாட்டு தான். ஒரு மேட்சுல அவுட்டாயிட்டோம் தோத்துட்டோம் அப்படினா அந்த மேட்ச் தான் முடியும், லைஃப் முடியாது.



    இனி நான் நடிக்கும் படங்கள் என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாகத்தான் இருக்கும். நான் கடைசியா பண்ண படம் என்னுடைய தயாரிப்பாளருக்கு லாபகரமான படம் தான். அது பற்றி பேச வேண்டாம். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா என்றார். 
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர்.
    பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.

    இந்நிலையில் பாலிவுட் வரவான நடிகை அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அனுஷ்கா ‌ஷர்மா இந்தியில் தயாரித்து நடித்த, ‘பரி’ திகில் படம் ஹிட்டானது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் அனுஷ்கா ‌ஷர்மாவையே நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனை நடக்கிறது. 



    இந்திய கிரிக்கெட் வீரர் கோலியை காதலித்து மணந்த அனுஷ்கா சர்மா இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல் பரவியதால் தற்போது பாலிவுட்டில் அவரது மவுசு குறைந்திருக்கிறது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார் அனுஷ்கா ‌ஷர்மா.
    கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், படங்களை தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். 

    இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான "கனா" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரியோ நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. 



    இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது, தான் தயாரிக்கும் அடுத்த படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்க உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்தார். 
    தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய வரலாறு படைத்திருக்கிறது.
    தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார்.

    இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

    ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது.



    இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 10 கோடி பார்வைகளையும், 41 நாட்களில் 20 கோடி பார்வைகளையும், 69 நாட்களில் 30 கோடி பார்வைகளையும், 104 நாட்களில் 40 கோடி பார்வைகளையும் 157 நாட்களில் 50 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது.

    இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளை பெற்றுள்ளது. இதுகுறித்து தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில், “எங்களுடைய ரவுடி பேபி பாடலுக்கு நீங்கள் காட்டிய அன்பால் பேச்சின்றி திகைத்துப் போய் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
    இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார்.
    "பியார் பிரேமா காதல்" மற்றும் "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்" போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர், தற்போது அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் "தனுசு ராசி நேயர்களே" படத்தில் நடித்து வருகிறார். 

    இதனையடுத்து இந்தியில் வெளியாகி ஹிட்டான "விக்கி டோனர்" படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காதலையும், காமெடியையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார்.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். 



    இதன்பின்னர் பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாகவும், அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இயக்குனர் சசி இயக்கியுள்ள " சிவப்பு மஞ்சள் பச்சை" படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
    இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கை மாறி அமர்ந்ததால் சில நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டதற்கு இளையராஜா வேதனை தெரிவித்துள்ளார்.
    இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இளையராஜா இசை நிகழ்ச்சியில், நீண்ட காலம் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் பாடியதால் ரசிகர்களும் ஆர்வமாக டிக்கெட் எடுத்து வந்தனர்.

    குறைந்த கட்டண டிக்கெட் எடுத்தவர்கள் அதிக கட்டண டிக்கெட்டுகளுக்கான இடங்களில் சென்று அமர்ந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்தவர்கள் நொந்து போனார்கள். அவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சிலர் இதை வீடியோவாக்கி சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடலுக்கும் இடையில் சில நிமிடங்கள் இளையராஜா பேசினார். அந்த பாடல்கள் உருவான விதம், நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டார். அப்போது இந்த சம்பவம் குறித்தும் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.



    இதுபற்றி அவர் பேசியதாவது:-

    ‘என் இசையால் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். உங்களுக்காக தான் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் நின்று நான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். ஆனால் உங்களில் சிலர் செய்யும் செயல்கள் எனக்கு வேதனை அளிக்கிறது.

    நீங்கள் இப்படி டிக்கெட் மாறி அமர்ந்தால் அதிக கட்டணம் செலுத்தியவர்கள் என்ன செய்வார்கள்? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? உங்களுக்கான இடங்களில் அமர்ந்து இசையை கேட்டு மகிழுங்கள்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகிவரும் "சூரரைப்போற்று" படத்தின் கதை குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு நடிகர் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் "சூரரைப்போற்று" படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

    இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது. 



    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்திய பேட்டியில் சூரரைப்போற்று படம் குறித்து நடிகர் சூர்யா கூறியதாவது: "சூரரைப்போற்று" வரலாற்று படம் என்று செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் இது உண்மையல்ல. இருப்பினும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இயக்குனர் சுதா கொங்காரா குறித்து பேசிய அவர், சுதா என் உடன்பிறவா தங்கை, ஆயுத எழுத்து படத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். இறுதிச்சுற்று படத்தின்போதே அவருடன் பணியாற்ற விரும்பினேன். இருப்பினும் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
    ×