என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சசிகுமார் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லியாக மாரி 2, தடம் படத்தில் நடித்த வித்யா பிரதீப் நடிக்க இருக்கிறார்.
    சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். இந்த படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பசங்க 2, அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    இதில் தடம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இவர் இந்த படத்தில் உள்ள வில்லி வேடம் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்தார்.



    இதனை அறிந்த அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் வித்யா பிரதீப்பை பரிந்துரை செய்துள்ளார். இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமாரும் வித்யா பிரதீப்பின் திறமையை கண்டு வியந்து போக, சசிகுமாருக்கு வில்லியாக இப்படத்தில் தோன்றவுள்ளார்.
    ரத்ததானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாற்றுத்திறனாளி பிரகாஷை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
    மும்பை, ஒர்லி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மாற்றுத்திறனாளி. தமிழரான இவர், விளையாட்டு மற்றும் சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 26 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்து உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரகாஷ் மும்பையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் ரத்ததானத்தில் உலக சாதனை புரிந்த பிரகாசை பாராட்டினார். இது குறித்து பிரகாஷ் கூறியதாவது:-



    ரத்த தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரத்த தானம் செய்து வருகிறேன். இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து 18 மாநிலங்களில் ரத்த தானம் செய்து உள்ளேன். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரத்த தானம் செய்ய திட்டமிட்டு உள்ளேன். மாற்றுத்திறனாளியான என்னால் ரத்த தானம் செய்ய முடியும் போது மற்றவர்களாலும் செய்ய முடியும் என்பதை உணர்த்தவே இதுபோல் செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
    பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார்.
    இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரியங்கா டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.



    பிரியங்கா சோப்ரா தன் கணவர் அமெரிக்காவுக்கு அதிபராக ஆவதற்கும் விரும்புவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    ‘நாங்கள் இருவருமே மாற்றத்தை விரும்புபவர்கள். அதை எங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். எங்கள் இருவருக்கும் இப்போது அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் உயர் பதவிகளில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே இருக்கிறது’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
    திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்டு வந்தார். என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய வி‌ஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும் என்று கூறியிருந்தார்.



    இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ‘இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தக் கூடாது என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
    உலக கோப்பை போட்டி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்காக இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. மேலும் 5 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை தவிர சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.

    இந்த பணிகளுக்கு இடையே மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் அதிகம் வெளியில் தெரியாத சமூக சேவகர்களை யூடியூபில் அடையாளப்படுத்த இருக்கிறார்.

    சினிமா மற்றும் சமூக பணிகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்திய அணியின் வெற்றிக்காக ஒரு ஆன்தம் பாடலை உருவாக்கி இருக்கிறார்.



    இந்த பாடல் நாளை இந்தியாவின் முதல் போட்டியின்போது வெளியாக இருக்கிறது. கிரிக்கெட் போட்டியின் நேரலையின்போது இதன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பாடலின் சில வரிகள் கொண்ட புரோமோ (முன்னோட்டம்) ரிலீசாகி சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, தற்போது மும்பையில் தங்கைக்காக வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த டாப்சி பாலிவுட் பக்கம் சென்றார். தனது உடல் எடையை வெகுவாக குறைத்து கடினமாக உழைத்து பாலிவுட்டில் தனக்கென்று ஒரு பெயர் எடுத்துள்ளார்.

    டாப்சி கடந்த 2017- ம் ஆண்டு மும்பையில் சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கினார். அந்த அபார்ட்மென்டில் அவர் தனது தங்கை ‌ஷகுனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் குடியிருக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு அபார்ட்மென்ட் விற்பனைக்கு வருவதை அறிந்தார்.



    இதையடுத்து அவர் அந்த அபார்ட்மென்ட்டை ரூ. 6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். தங்கைக்காக அந்த 3 படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டை வாங்கிய டாப்சி அதை அலங்கரிக்கும் பொறுப்பையும் தங்கையிடமே விட்டுள்ளார்.
    ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.



    இதனை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்து திரையுலகுக்கு விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு விஷால் கூறி உள்ளார்.
    2014ம் ஆண்டு வெளியான காட்ஸில்லா படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ் படத்தின் விமர்சனம்.
    டைட்டன்ஸ்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அனைத்து நாட்டு விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு மோனார்க் (Monarch) என்ற அமைப்பை இயங்கி வருகிறது. இந்த அமைப்பு உலகில் பல வகையான டைட்டன்ஸ்கள் இன்னமும் உறைந்து போய் உயிரோடு இருப்பதை கண்காணித்து வருகிறார்கள். 

    இந்த அமைப்பில் இருக்கும் வேரா பார்மிகா, டைட்டன்ஸ்களை எழுப்பும் கருவியை கண்டுபிடிக்கிறார். இந்த கருவி மூலம் டைட்டன்ஸ்களை கட்டுப்படுத்த முடியும். இந்த கருவி இருப்பதை அறிந்த வில்லன், வேரா பார்மிகா மற்றும் அவரது குழந்தையை கடத்தி விடுகிறார். 



    மோனார்க் குழு, வேரா பார்மிகாவின் முன்னாள் கணவரான கைல் சாண்ட்லரை காப்பாற்ற சொல்லி நாடுகிறார்கள். இந்நிலையில், அந்த கருவியை வைத்து ’கிடோரா’ எனப்படும் மூன்று தலை ட்ராகன் எழுப்பி விடுகிறார்கள். இந்த ட்ராகன் உலகில் உள்ள இடங்களை நாசம் செய்கிறது. 

    இது காட்ஸில்லாவிற்கு தெரிந்து அதை அழிக்க வருகிறது. இதே நேரத்தில் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக டைட்டன்ஸ்களை எழுப்பி விடுகிறார்கள். இறுதியில் காட்ஸில்லா, கிடோரா ட்ராகன் மற்றும் மற்ற டைட்டன்ஸ்களை அழித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    2014ம் ஆண்டு வெளியான காட்ஸில்லா படத்தின் தொடர்ச்சியாக காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். குழந்தைகளின் கோடை விடுமுறை முடியும் இந்த நேரத்தில் வெளியானாலும் குழந்தைகள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது. 

    ட்ராகன் பல இடங்களை நாசப்படுத்துவதும் காட்சிகளும், காட்ஸில்லா வரும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக இறுதி காட்சி பிரம்மாண்டத்தின் உச்சம் என்றே சொல்லலாம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ்’ கொண்டாட்டம்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது 5 நிமிட காட்சிக்கு பல லட்சங்கள் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. அவரது நடிப்பில் கடந்த வருடம் இரும்புத்திரை, சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம் ஆகிய படங்கள் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன. கணவர் நாகசைதன்யாவுடன் நடித்து கடந்த மாதம் திரைக்கு வந்த மஜிலி படமும் வசூல் குவித்தது.

    தற்போது நாகார்ஜுனா, ரகுல்பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் ‘மன்மதடு-2’ தெலுங்கு படத்தில் கவுரவ தோற்றத்தில் வருகிறார். 5 நிமிடம் மட்டுமே இந்த காட்சி இடம் பெறுகிறது. இதில் நடிக்க சமந்தா ரூ.35 லட்சம் சம்பளம் வாங்கியதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி நடிகர், நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.



    திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மார்க்கெட் சரிவது வழக்கம். ஆனால் சமந்தாவுக்கு அது ஏறுமுகமாகவே உள்ளது. அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. அவருக்கு பதிலாக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சமந்தாவை தேர்வு செய்கின்றனர். இதனால் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்.

    ஒரு படத்துக்கு ரூ.3 கோடி கேட்கிறார் என்கின்றனர். அந்த தொகையை கொடுத்தும் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்கின்றனர். தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறார். தமிழில் திரிஷா நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.
    காக்க காக்க, திருட்டு பயலே, நான் அவன் இல்லை படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜீவன், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அசரீரி படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் ‘அசரீரி’ படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் கூறும்போது, "டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. 



    இயக்குனர் ஜி.கே. கூறும்போது, "அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்" என்றார்.

    நடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, "ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவசரமாக அவர் ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில், அவர் இந்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். தற்போது நாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் இறுதி செய்வதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்" என்றார்.
    ஜூன் மாதம் விஜய் ஆண்டனி, அர்ஜுன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
    தமிழ் நாட்டில் கோடை வெயில் தணிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வர பட அதிபர்கள் தயாராகி உள்ளார்கள். இந்த மாதம் 10 படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 7-ந் தேதி ‘கொலைகாரன்’ படம் வெளியாகிறது.

    இதில் விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. வருகிற 14-ந்தேதி கொலையுதிர் காலம், கேம் ஓவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன.



    கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர். ஐராவுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இன்னொரு திகில் படமாக வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது. 

    வருகிற 21-ந்தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத், தனுசின் பக்கிரி, ஜீவாவின் கொரில்லா மற்றும் தும்பா ஆகிய 4 படங்கள் திரைக்கு வருகின்றன. 28-ந்தேதி ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி, யோகிபாபுவின் நகைச்சுவை படமான தர்மபிரபு ஆகிய படங்கள் வெளியாகின்றன.
    தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "தளபதி 63" படம் குறித்து புதிதாக வதந்திகள் பரவி வருகின்றன.
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தீபாவளி ரிலீஸ் என்பதால் படக்குழுவினர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். விஜய் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் சமீபத்தில் படமாக்கினார்கள். 



    இப்படத்தில் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. விஜய் தந்தையாக நடிக்கும் காட்சிகள் விரைவில் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது.  
    ×