என் மலர்
சினிமா செய்திகள்
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர், தற்போது தெலுங்கு திரைக்கதை ஒன்றை கேட்டு பிடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார்.
ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடல் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார் பிரியா வாரியர். பாடல் வெளியானதற்கும் படம் வெளியானதற்கும் இடையே சுமார் ஒரு வருட இடைவெளி உருவானது. பாடல் மூலம் கிடைத்த கவனம் மூலம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி அதுவே படத்தின் வெற்றிக்கு தடை போட்டது. அதிகபட்ச எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.
நடிகர், நடிகையும் இயக்குநரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். அந்தப் படத்தை தொடர்ந்து பிரியா வாரியர் வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது கன்னட திரைப்படம் ஒன்றில் அவரை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அறிமுக இயக்குநர் ரகு கோவி திருச்சூரில் உள்ள பிரியா வாரியரின் வீட்டில் அவரை சந்தித்து கதை கூறியுள்ளார். பிரியா வாரியருக்கு திரைக்கதை மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தெலுங்கு திரைக்கதை ஒன்றை கேட்ட பிரியா வாரியர் திரைக்கதை பிடிக்க வில்லை என்பதால் அதை தவிர்த்துள்ளார்.
உலக முழுவதும் ட்ரெண்டான நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பழிவாங்கப்பட்டிருக்கிறார்.
விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ப்ரெண்ட்ஸ். இதில் வடிவேலு நேசமணி கதாபாத்திரத்திலும், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரமேஷ் கண்ணாவின் கைதவறி விழும் சுத்தியல் வடிவேலு தலையில் பட்டு மயக்கமடைவார்.
இந்த காமெடியை மையப்படுத்தி ட்விட்டரில் பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வந்தனர்.
இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தனர். இது உலகளவில் டிரெண்டானது. பல மீம்ஸ்கள் உருவாக்கி பகிரப்பட்டு வந்தது. நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பழி வாங்கப்பட்டிருக்கிறார்.
#JusticeForContractorNaesamani#பழிவாங்கப்பட்டார்கிருஷ்ணமூர்த்தி#Pray_For_Neasamani 😜🤪😁 pic.twitter.com/FJnoMmbCmf
— Sathish (@actorsathish) May 30, 2019
காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் கண்ணாவை சுத்தியால் அடிப்பது போன்ற வீடியோ ஒன்றை பதிவு செய்து, பழிவாங்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி என்று கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இந்தி படமான கேங்ஸ் ஆப் வசிபூர் படத்தில் அறிமுகமான ஹூமா குரேஷி அதனைத் தொடர்ந்து ஜாலி எல்.எல்.பி, தீத் இஷ்கியா போன்ற முக்கியமான படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களின் பிரதான நடிகையானார்.
பின்னர், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலி ஜரினாவாக ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து தீபா மேத்தா இயக்கிய சர்வதேச படமான லைலா என்ற வெப் சீரிசில் சித்தார்த்துடன் நடித்தார்.

இந்த நிலையில் ஹாலிவுட்டில் மற்றொரு புதிய படத்திலும் ஹூமா குரேஷி முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஜோம்பி வகை படத்தில் டேவ் படிஸ்டாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஹூமா குரேஷி. இப்படத்தை 300, பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், ஜஸ்டிஸ் லீக் போன்ற பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜாக் ஸிட்னர் இயக்கவுள்ளார்.
வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலகளவில் டிரெண்டாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், தயாரிப்பாளர் சங்கத்தில் தன்னை அழிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் வடிவேலு பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி காமெடி 2 நாட்களாக உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வடிவேலு வசனம் பரபரப்பானதால் நிருபர்கள் வடிவேலுவை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டனர். இது தொடர்பாக வடிவேலு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
‘எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வார்கள். அதுபோல இந்த நேசமணிக்கு கிடைத்த புகழ் எல்லாமே பிரண்ட்ஸ் பட டைரக்டர் சித்திக்கையே சேரும். நேசமணி என்று ஒரு கேரக்டரை உருவாக்கியதே அவர்தான்.
படப்பிடிப்பில் நடிக்கும்போது காமெடியில் எனக்கு தோணும் சின்னச் சின்ன ஐடியாக்களை அவரிடம் சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொன்னது இல்லை. சந்தோஷமாக என் விருப்பத்துக்கு நடிக்கவிட்டார். அப்படி ஒரு பெருந்தன்மை கொண்ட டைரக்டர் சித்திக்.
மேலும் கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, சுராஜ், வி.சேகர் ஆகியோரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகைச்சுவை மன்னர்கள்.

நான் வாழக்கூடாது, என்னை சாகடிக்கவேண்டும் என்று என்னை அழிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைபடவில்லை.
சினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகன், மகளுக்கு திருமணம் செய்து கடமையை முடித்தேன். ஒரு வழியாக வாழ்க்கையை செட்டில் செய்துட்டேன். இனிமேல் சினிமாவில் நடிக்கிறது கடவுள் கையில் தான் இருக்கிறது.
இம்சை அரசன் 2-ம் பாகத்தில் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனது பங்களிப்பு இல்லாமல் அந்த படத்தை எடுக்க முடியாது. மொத்த படத்தையும் நான்தான் முதுகில் சுமக்க வேண்டும்.
ஆனால் ‘நான் சொல்கிறபடி மட்டும் நடிங்க என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்க நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதற்கு காரணம்.
அதை புரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி? இப்போது நான் நடிக்காமல், வீட்டுலேயே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை. அப்படியே இருந்துவிட்டு போகிறேன். மற்றபடி, நான் நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறதை இன்னும் பார்க்கவில்லை.
மோடி பதவி ஏற்கும் செய்திதான் எனக்கு தெரியும். நேசமணியை நான் இன்னும் பார்க்கவில்லை’.
இவ்வாறு அவர் கூறினார்.
அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லிசா’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், தனது அடுத்த படத்தை அஞ்சலி கவனமாக தேர்வு செய்து நடிக்கிறாராம்.
நடிகை அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லிசா’. பேய்க்கதையை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பெரும்பாலான விமர்சனங்கள் நெகட்டிவாகவே கிடைத்தன.
இந்நிலையில் தனக்கு பேய்க்கதை ஒத்து வராது என நினைத்தாரோ என்னவோ, அதிரடியாக ரூட்டை மாற்றியிருக்கிறார் அஞ்சலி. அடுத்ததாக தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

இதுதவிர, அஞ்சலியின் நடிப்பில் நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ராட்சசி படத்தின் டிரைலரை படக்குழு இணைத்துள்ளது.
அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Surprise addition in #NGK#Kaithi Teaser & a Trailer of “.........”
— S.R.Prabhu (@prabhu_sr) May 30, 2019
Details soon 😊
இந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ராட்சசி படத்தின் டிரைலர், கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசரை சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படுகிறது. என்ஜிகே, ராட்சசி, கைதி ஆகிய மூன்று படங்களையுமே ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமராஜன், கனகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து இயக்குநர் கங்கை அமரன் ஆலோசித்து வருகிறார்.
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படம் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது.
படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகிய 3 பேரின் நகைச்சுவை காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசித்து பார்க்கப்பட்டது. அதிலும் வாழைப்பழ காமெடி, அந்த கேள்விய ஏன்டா என்கிட்ட கேட்ட உள்ளிட்ட காமெடிகள் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து கங்கை அமரன் கூறும்போது, “கரகாட்டக்காரன் 2-ம் பாகம் எடுப்பது குறித்து ராமராஜன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் பேசி வருகிறோம். இப்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகையும், மாடலுமான மீரா மிதுன் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். சென்னையை சேர்ந்த மாடலான இவர், மிஸ் தமிழ்நாடு டிவா 2019 என்ற அழகிப் போட்டியை வருகிற ஜூன் 3-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.
அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், அழகிப் போட்டியை தான் நடத்தக் கூடாது என்று அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மிஸ் தமிழ்நாடு போட்டியை நடத்தும் அஜித் ரவியுடன் தான் முன்பு பணிபுரிந்ததாகவும், தற்போது அதில் இருந்து விலகி தனியாக போட்டி நடத்துவதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் கொலை மிரட்டல் விடுப்பதாக மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.
அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் மட்டுமல்லாமல், புதுப்புது செல்போன் எண்களில் இருந்தும் மிரட்டல் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். போலீசாரும் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள மீரா மிதுன், தனது செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களைத் திருடியுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பிவிடப் போவதாக மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் விமர்சனம்.
சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர்.
இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பாலா சிங் மூலமாக சட்டமன்ற உறுப்பினரான இளவரசுவை சந்திக்கிறார் சூர்யா. அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணரும் சூர்யா, இளவரசுவின் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்.

இவ்வாறாக வேறு வழியின்றி அரசியலில் நுழையும் சூர்யா சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? அவரது ஆசை நிறைவேறியதா? முழு அரசியல்வாதி ஆனாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.

அரசியல்வாதி கதாபாத்திரங்களில் இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்துவிட்டுச் செல்கிறார். அப்பாவாக நிழல்கள் ரவி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.
இயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல்லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை.

பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரடியாக மிரட்டியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருப்பது படத்திற்கு பலம்.
மொத்தத்தில் `என்ஜிகே' நழுவலானது கெத்து கூட்டணி.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்ஜிகே படம் இன்று ரிலீசாகும் நிலையில், அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருப்பதாக சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் என்ஜிகே படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏 இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏
— Suriya Sivakumar (@Suriya_offl) May 31, 2019
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கிறது.
சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தில் அவருக்கு வில்லனாக பாரதிராஜா நடிப்பதாக வந்த செய்திக்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாக உள்ள படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் சில காரணங்களால் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்களை இயக்கி வரும் வெங்கட் பிரபு முதன்முறையாக அரசியல் திரில்லர் கலந்த கதையை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிம்புவுக்கு வில்லனாக களமிறங்குகிறார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் தூண்டியது. ’அப்போது என் தந்தை மாநாடு படத்தில் வில்லனாக நடிக்கவில்லை; வேறு நடிகரிடம் வில்லனாக நடிக்க கேட்டு வருகிறோம். இதுபோன்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என வெங்கட் பிரபு கேட்டுக்கொண்டார்.
தற்போது மாநாடு படத்தில் வில்லனாக பாரதிராஜா நடிக்கிறார் என்ற செய்தி பெரிய அளவில் பரவியதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தில் பாரதிராஜா நடிப்பது உண்மைதான். ஆனால் வில்லன் கதாபாத்திரம் கிடையாது என்று தெரிவித்தார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்தீப் கிஷன் நடிக்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான படங்கள் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. என்றாலும் இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்தில் மாநகரம், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் கதா நாயகனாக நடிக்க உள்ளார்.

ரவிக்குமாரின் உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்க உள்ளார். நாயகியாக முதல் பாகத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.






