என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் `அய்யா உள்ளேன் அய்யா' படத்தின் முன்னோட்டம்.
    சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை, வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் தற்போது "அய்யா உள்ளேன் அய்யா" என்ற படத்தை இயக்குகிறார்.

    இந்த படத்தில் அவரது பேரன் கபிலேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு எதிர்மறை நாயகனாக அவரது தம்பி மகன் பால சபரீஸ்வரன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சந்துரு, இசை - மகேந்திரன், தயாரிப்பு - வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஈரோடு செளந்தர்.


    படம் பற்றி இயக்குநர் கூறியதாவது,

    10-ஆம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருப்பான் என்பதால் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.

    மாணவர்களின் எதிர்காலம் என்பது 10-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு கால கட்டம் தான். அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக இது உருவாகிறது என்றார். படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய்யின் 25-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் நிலையில், இந்த படத்திற்காக விஜய் பெயரை நடிகர் ஜெய் கேட்டு வாங்கியிருக்கிறார்.
    பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்த ஜெய் நடிப்பில் நீயா 2 படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ் மற்றும் லவ் மேட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் லவ் மேட்டர் படம் ஜெய்யின் 25-வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வருகிறார். இதில் ஜெய் ஜோடியாக வைபவி சாண்டில்யா மற்றும் அதுல்யா நடிக்கிறார்கள்.



    சந்திரசேகரின் 70-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் இசையமைக்க, ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    படம் பற்றி நடிகர் ஜெய் கூறும்போது,

    விஜயகாந்த், விஜய்யை வைத்து அவர் இயக்கி, வெற்றி பெற்ற பல படங்களில் கதாநாயகர்களின் பெயர் விஜய். எனவே லவ் மேட்டர் படத்தில் கார்த்தி என்ற எனது கதாபாத்திரத்தை விஜய் என்று வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சந்தோஷமாக ஒத்து கொண்டார். லவ் மேட்டர் படத்தை பொறுத்தவரை கலகலப்புடன் நடிப்பதை என்னால் உணர முடிந்தது என்றார்.

    பேட்ட படத்திற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியிருக்கும் சசிகுமார், அடுத்ததாக ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    பேட்ட படத்திற்கு பிறகு சசிகுமார் நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

    இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப், மஞ்சுபெத்து ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக்கின் 14-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு ரோனி ராப்பில் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவையும், வெங்கட் ரமணன் படத்தொகுப்பையும், சிவகுமார் யாதவ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்த இளையராஜாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, என்னவானாலும் தான் இளையராஜாவின் ரசிகன் என்று கூறியிருக்கிறார்.
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. படத்தில் இளையராஜாவின் பிரபல பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள்.

    இதுபற்றி இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

    இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னவானாலும் இளையராஜாவின் ரசிகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த வீடியோவில் இளையராஜா இசையமைத்து தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த கண்மணி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின் பின்னணி இசையை வாசிக்கிறார்.

    கோவிந்த் வசந்தாவின் பெருந்தன்மையான இந்த கருத்தை வரவேற்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    விஜய் ரசிகர்கள் பலரும் தளபதி 63 படத்தின் அப்டேட் குறித்து படத் தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க, படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்நாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தளபதி 63 படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் நேசமணி, பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில், அந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு நேசமணிக்காக பிரார்த்திப்பதாக கூறி, அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.


    விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியை மையப்படுத்தி இந்த ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக விளங்கும் நடிகர் மோகன்லால் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    மலையாள சினிமாவில் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் தற்போதைய இளம் கதாநாயகர்களுக்கும் போட்டியாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

    தொடர்ந்து வித்தியாசமான மற்றும் அதிரடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான அரசியல் படமான லூசிபர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

    வருடத்திற்கு இவர் நடிப்பில் 3 முதல் 4 படங்கள் உருவாகி வருகின்றன. தற்போதும் கைவசம் 4 படங்களை வைத்திருக்கிறார். அதில் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும் கூறியிருக்கும் மோகன்லால் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கே.வீரக்குமார் இயக்கத்தில் வரலட்சுமி நடித்து வரும் `சேஸிங்' என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் வரலட்சுமி டூப் ஏதுமில்லாமல் சண்டைபோடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தற்போது கே.வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த படம் உருவாகிறது. 

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடுகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அதில், கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன், இதை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


    வரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தஷி இசையமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

    இது தவிர ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்’, ‘ராஜபார்வை’, ‘கன்னித்தீவு’, ‘கன்னிராசி’, ‘காட்டேரி’, ‘தெனாலி ராமன் பி.ஏ.பி.எல்’, ‘ரணம்’ உள்ளிட்ட படங்களும் வரலட்சுமியின் கைவசம் உள்ளது.

    தியேட்டர் அதிபர்கள் புதிய விகிதாசார முறையை செயல்படுத்தினால், அவர்களின் முடிவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.
    சென்னை:

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய ஒரு அபாயகரமான செயல் திட்டத்தை திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் இயங்குகிற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    அந்த அறிக்கையின்படி, ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 சதவீத வசூலையும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 சதவீத வசூலையும், மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50 சதவீத வசூலையும், அந்த படத்தை வினியோகம் செய்பவர்களுக்கு இவர்கள் தருவார்களாம். இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்த விகிதாசார முறை மட்டும் அமலுக்கு வருமானால், ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.



    இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், நிர்வாகிகளும் இல்லை என்றாலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதைப்பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு, அதற்கு பின்னர் அந்த முடிவுகளை பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

    தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான வேண்டுகோளை அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

    இவ்வாறு அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

    அங்காடித்தெரு படத்தில் அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகர் மகேஷ் தற்போது கருப்பு ஆடு படத்தில் புதிய தோற்றத்தில் நடித்து வருகிறார்.
    அங்காடித்தெரு படத்தில் அறிமுகமான மகேஷ் அதன் பின்னர் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது கருப்பு ஆடு என்ற படத்துக்காக உடல் எடையை ஏற்றி தோற்றத்தை மாற்றி இருக்கிறார். 

    படம் பற்றி இயக்குனர் விஜய் மோகன் கூறியதாவது:- ‘அங்காடித்தெரு மகேஷ் அந்த படத்துக்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கும் படம் இது. நாயகி அக்‌‌ஷதாவும் 4 ஆண்டுகளுக்கு மீண்டும் நடிக்கும் படம். மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறேன். சமூகவிழிப்புணர்வு கதையாக இருக்கும். சைக்கிளில் தெருத்தெருவாக சென்று ஐஸ் விற்கும் கதாபாத்திரத்தில் மகேஷ் நடிக்கிறார். 



    நாயகன் நாயகி காதலுக்கு மையமாக ஒரு ஆடு இருக்கிறது. அதனால்தான் கருப்பு ஆடு என்ற தலைப்பு வைத்தோம். மாரிமுத்து, தவசி, பால்ராஜ், திண்டுக்கல் தனம் உள்பட பலர் நடித்துள்ளனர். ரொனால்ட் ரீகன் இசை அமைக்க, அருண் பாரதி பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தொகுப்பை சி.எஸ் பிரேம் கவனிக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல் முருகன் வாழ்வின் யதார்த்தத்தை அருமையாக படமாக்கி இருக்கிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.
    டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொரில்லா’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா நாயகனாகவும், ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும், ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை மே 31ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 



    ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.
    ஆடுகளம் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை டாப்சியும் கேம் ஓவர் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ், நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    தனுஷும், டாப்சியும் இணைந்த நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்குப் பிறகு கேம் ஓவர் படத்தின் டிரைலரை வெளியிடுவதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
    அமெரிக்காவில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்காக யுவன் ஷங்கர் ராஜா - விஜய் சேதுபதி இணைய இருக்கிறார்கள்.
    அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    யு1 ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். 

    ஜூலை 6-ம் தேதி மாலை 6 மணிக்கு, கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி, விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ரஞ்சித், தன்விஷா, ரம்யா என்எஸ்கே, பவதாரிணி, ஆலப் ராஜு மற்றும் குழுவினர் பங்கேற்கின்றனர்.



    இவர்களுடன் நடிகர்கள் மிர்ச்சி சிவா, டிடி, ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ரைசா வில்சன், ஜனனி அய்யர், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சாரதி, விஷ்ணுப்ரியா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகின்றனர்.

    அமெரிக்காவில் இதுவரை இப்படியொரு பிரமாண்ட இசைக் கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சி நடந்ததில்லை எனும் அளவில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. 

    8 கே மைல்ஸ் மீடியா ஆதரவில் பினாகின் ஸ்டுடியோஸ், ஹேமா ரியல்டர்ஸ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    ×