என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘ஈட்டி’ படத்தை அடுத்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐயங்கரன்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்டார். வெளியான சில நேரங்களில் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக இயக்குனரை பாராட்டினார்கள்.



    தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து தணிக்கை குழுவினருக்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கி படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    திரையுலகினரிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘ஐங்கரன்’ திரைப்படத்தை வெகு விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் உயரமான கட்-அவுட் வைத்து இணையத்தில் டிரெண்ட்டாக்கி உள்ளனர்.
    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் முதன்முதலாக சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. 

    இந்தப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்துக்காக சூர்யா ரசிகர்கள் இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த மாதம் 17-ஆம் தேதி திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன.



    இதற்கு முன் சர்கார் படத்துக்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு திண்டுக்கல்லில் 190 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும் தான் மிகப்பெரிய கட்-அவுட்டுகளாகும். இவற்றை விட உயரமாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கட்-அவுட் வேலை இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதன் உயரம் சுமார் 215 அடி என்று கூறப்படுகிறது. இதற்கான விழா நாளை மாலை 4 மணியளவில் கொண்டாடப்படுகிறது. 
    சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ஜெனிலியா, தற்போது அவரது போஸ்டரை பார்த்து பாராட்டியிருக்கிறார்.
    சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியா கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தமிழில் மிகக் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஏற்று நடித்த அத்தனை பாத்திரங்களும் முக்கியமானவையாக உள்ளன. 

    2011-ம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்திற்கு பின் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஜெனிலியா இந்தி, மராத்தி மொழிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். 



    கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது விதமான தோற்றங்களில் வலம் வர உள்ளார். ஒவ்வொரு தோற்றத்தையும் படக்குழுவினர் போஸ்டர்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். ஒன்பதாவதாக வெளியான போஸ்டரில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் போன்ற தோற்றத்தில் உள்ளார். அதைப் பார்த்த ஜெனிலியா, “என்ன இது ஜெயம் ரவி? உங்களுக்கு வயதே ஆகவில்லை. பதினாறு வயது சிறுவனைப் போல் தோற்ற மளிக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, தன்னுடைய மருமகள் சமந்தாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
    சமந்தாவும் சின்மயியும் இணைபிரியாத தோழிகள். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் தமிழில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். 

    தெலுங்கில் இயக்குனரான இவர் தற்போது நாகார்ஜுனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை வைத்து ‘மன்மதுடு 2’ படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. 



    ‘மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி’ என்று நாகார்ஜுனா உற்சாகமாக கூறியிருக்கிறார். 
    `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் - அஜித் இணையும் தல 60 படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

    அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்‌ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதையில் விருப்பமில்லாத அஜித், ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதைக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.



    இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஜிம்மில் ஒர்கவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம். மேலும் அஜித் இந்த படத்தில் போலீசாக நடிப்பதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    `நேர்கொண்ட பார்வை' படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் `கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டம்.
    ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் `கேம் ஓவர்'.

    பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தில் டாப்சிக்கு வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரம். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஏ.வசந்த், கலை இயக்குனர் - சிவா சங்கர், ஆடை வடிவமைப்பு - என்.கே.நந்தினி, சண்டைப்பயிற்சி - ரியல் சதிஷ், இசை - ரான் ஈதன் யோஹன், படத்தொகுப்பு - ரிச்சர்ட் கெவின், ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், ஹரிஹரன், ஸ்டில் போட்டோகிராபர் - எம்.எஸ்.ஆனந்தன், லைன் புரொடுயுசர் - முத்துராமலிங்கம், புரொடக்‌ஷன் எக்சிகியுடிவ் - ரங்கராஜ், இணை தயாரிப்பு - சக்ரவர்த்தி ராமசந்திரா, தயாரிப்பு - எஸ்.சசிகாந்த், எழுத்து - அஸ்வின் சரவணன், காவ்யா ராம்குமார், இயக்கம் - அஸ்வின் சரவணன்.



    படம் குறித்த இயக்குனர் அஸ்வின் சரவணன் பேசியதாவது, “மாயா படம் இன்று வரை மக்கள் மனதில் ஞாபகத்தில் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாப்சி இப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் என்றே நம்புகிறேன். கேம் ஓவர் வெளியீடு மற்றும் வரவேற்ப்பை எதிர்நோக்கி ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.

    தணிக்கையில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    கேம் ஓவர் படத்தின் டிரைலர்:

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்ஜிகே படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், தனது வழக்கமான படங்கள் போல் இல்லாமல் என்ஜிகே வித்தியாசமாக இருக்கும் என்றார்.
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்த என்.ஜி.கே. படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் குறித்து செல்வராகவன் அளித்த பேட்டி வருமாறு:-

    “நடுத்தர குடும்பத்து இளைஞன் அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும் கதை. நான் சூர்யா ரசிகன் என்பதால் அவரை நடிக்க வைத்தேன். எங்கள் இருவரின் கலவையாக இந்த படம் இருக்கும். எனது வழக்கமான படங்களை விட வித்தியாசமான கதையில் உருவாக்கி உள்ளேன்.



    எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தும் படத்தில் இருக்கும். சாய் பல்லவியும், ரகுல் பிரீத்சிங்கும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சாய் பல்லவியின் பிரேமம் மலையாள படம் பார்த்து வியந்தேன். படப்பிடிப்பில் நான் கண்டிப்பாக இருப்பதாக பேசுகிறார்கள். மற்ற இயக்குனர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் சில கட்டுப்பாடுகள் வைத்து படப்பிடிப்பை நடத்துகிறேன்” என்றார்.

    இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சின்கம் உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும்,  விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்திலும் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் டூட்லி ஜெயம் ரவியின் 25-வது படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் இந்த படம் விவசாயிகள் பிரச்சனையை பேசும் படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிப்பதாக கூறப்படுகிறது.



    ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையைமக்கிறார்.

    ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தில் இசையமைக்கவிருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகிய நிலையில், ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமாகி இருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து சமீபத்தில் விலகினர். இதையடுத்து இந்த படத்திற்கு இசையமைக்க வேறு இசையமைப்பாளர்களை படக்குழு தேடி வந்தது.

    இந்த நிலையில், படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜிப்ரான் பின்னணி இசையை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்களுக்கு வேறு சில இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.



    சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டதாக கூறிய செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போது என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகின்றனர். செல்வராகவனும் விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்று கூறி வந்தார். இந்த நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,



    புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க யோசித்தேன். ஆனால் தனுஷ் 2-ம் பாகம் எடுத்து சொதப்பி விடக்கூடாது என்று தயங்கியதால் முயற்சி கைவிடப்பட்டது. கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான கதை தயாராகிவிட்டது. சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் இந்த படத்தில் பதிவு செய்யப்படும்.

    அரசியல் தலைவர்களில் எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும். அவரது வாழ்க்கையை படமாக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வேன்.” என்றார்.

    அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாகி இருக்கும் நிலையில், படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.
    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் புரமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். லிங்கா, விவேக் பிரசன்னா, சூர்யா விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர். 

    படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    ரமணி இயக்கத்தில் நேதாஜி பிரபு தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஔடதம்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் நேதாஜி பிரபு வக்கீலாக இருக்கிறார். வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட காலாவாதியான மூலப் பொருட்கள் இந்தியாவிற்கு வருகிறது. இதையறிந்த அரசு, இந்த மூலப் பொருட்களை அழிக்க சொல்லி ஆணையிடுகிறது. ஆனால், மர்ம கும்பல் ஒன்று இந்த மூலப் பொருட்களை வைத்து மாத்திரைகளை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுவதை நண்பர் மூலமாக அறிந்துக் கொள்ளும் நேதாஜி பிரபு அதை தடுக்க நினைக்கிறார். இதனால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகிறார். இறுதியில் நாயகன் நேதாஜி பிரபு, பிரச்சனைகளில் இருந்து மீண்டு, மர்ம கும்பலையும், காலாவதியான மூலப் பொருட்களையும் அழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நேதாஜி பிரபு வக்கீலாகவும், காலாவதியான மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தெரிந்ததும், அதை தட்டிக்கேட்டும் துடிப்பான இளைஞராகவும் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், பாடல்கள் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். 

    நாயகியாக நடித்திருக்கும் சமைரா டாக்டராக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து விட்டு சென்றிருக்கிறார்கள்.



    மெடிக்கல் கிரைம் திரில்லரில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமணி. குறைந்த பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமா அதை கொடுத்திருக்கிறார்கள். மெதுவாக நகரும் திரைக்கதை, பிற்பாதியில் விறுவிறுப்பாக முடித்திருக்கிறார்கள். ஒரு சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

    தஷி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஸ்ரீரஞ்சன் ராவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘ஔடதம்’ பார்க்கலாம்.
    ×